மதுரை டூ பொள்ளாச்சி

Sunday 10 May, 2009

Views

மதுரை டூ பொள்ளாச்சி பேருந்து வந்து நின்றதும் ஓடிப் போய், யாருமே அமர விரும்பாத கடைசி இருக்கையை வெற்றிகரமாக பிடித்தேன். நிற்க. அட நீங்க உக்காருங்க. நான் என்னை சொன்னேன். நான் உக்காரப் போன சீட்டுல ஏதோ ஒரு வெனகாரப் பயவுள்ள சூயிங்கம் ஒட்டி வச்சுருக்குது.

அடடா சகுனம் சரியில்லையேனு நினைச்சு, டிரைவருக்கு பின்னால இருக்கற சீட்ல போய் உக்காந்து சனியனத் தூக்கி பனியன்ல போட்டுகிட்டேன். டிரைவருக்கு எதுவும் பெரிய வியாதியோ என்ன எழவோ, சரியா நாப்பது நொடிக்கு ஒரு தடவ ஜன்னலுக்கு வெளிய மண்டையை நீட்டி காறி காறித் துப்பிக்கிட்டே இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு, அண்ணாந்தமானிக்கு வாயில தண்ணி ஊத்திக்கிட்டு கடகடனு வாய்க்குள்ளேயே வண்டி ஓட்ட ஆரம்பிக்க, எதுத்தாப்புல ஒரு கண்டெய்னர் லாரி வர, கோஸ்ட் ரைடரில் உக்காந்தப்ப கூட நான் இம்புட்டு பதறுனதில்ல.

கண்டக்டர் புண்ணியவான் லோ நெக்கில் சுடிதார் போட்டிருந்த ஒரு பிள்ளையின் அருகில் போய் நின்றவாறு ஏதோ குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்துக் கொண்டேயிருந்தார். புதுசாக பல மக்கள் பேருந்தில் ஏறிய பின்பும் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 'ஆத்தா நயன்தாரா! நீ மதுரையிலேயே ஏறியிருக்கக் கூடாதா? டிக்கெட் எடுக்காமலேயே கோவை போய் சேந்துருப்பேனே' என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்த பெரியவர், நான் எப்படா காதில் மாட்டியிருக்கும் ஐபாடைக் கழட்டி விட்டு அவர் பக்கம் திரும்புவேன், எப்படா 'இன் 1973' என்று ஆரம்பிக்கலாம் என்று குறுகுறுவென என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்குமா? ஜன்னலில் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை.

ஜன்னலுக்கு வெளியே சுவாரஸியமாக ஒன்றுமில்லை. இப்போதைய குழந்தைகள் புகைவண்டிக்கு டாட்டா காட்டுவதிலேயே ஆர்வம் காட்டுவதில்லை. பிசாத்து பேருந்தையா கண்டு கொள்ளப் போகிறார்கள்? சாலையோர முட்புதரில் ஒதுங்கியிருந்த பெண்கள் மட்டுமே வாயில் ஒரு கெட்ட வார்த்தையுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு டாட்டா போட்டால் பேட்டா செருப்பு தான் வருமென்பதால், டாட்டா போடும் ஆவலை அடக்கிக் கொண்டு பேருந்துக்குள் நோட்டமிட ஆரம்பித்தேன்.

எல்லாப் பேருந்திலும் இருப்பது போல, ஒருவர் பேருந்தின் மேற்கம்பிகளை இரு கைகளாலும் பிடித்துத் தொங்கியபடியே தூங்கிக் கொண்டிருந்தார். பள்ளி சீருடையிலிருந்த ஒரு பெண் குழந்தையை ஒரு அயர்ன் பாக்ஸுக்கு பொறந்த பொறுக்கி, பேண்ட் ஜிப் தேய்ந்து போகுமளவு உரசு உரசு என்று உரசிக்கொண்டு இருந்தது.

ஒரு அம்மா பக்கத்து பேருந்தில் போகும் பயணிகளும், திரும்பிப் பார்க்குமளவு கைபேசியில் அலோ.. அலோ.. என்று கதறிக் கொண்டிருந்தார். பேருந்தில் உள்ள அணைவரும் தன்னைத் தான் சைட் அடிக்கிறார்கள் என்று நினைத்த ஒரு சப்பை பிகர், சானியா மிர்சா ரேஞ்சுக்கு பீல் பண்ணி தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு தேனிலவு தம்பதிகளைத் தவிர, முழுப் பேருந்தையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பத்து மாத வாண்டு தான். அதற்கு நிற்கவே தெரியவில்லை. யாயாயாயா என்று பலம் கொண்ட மட்டும் கத்திக் கொண்டும், ஹீட் பாக்ஸ் மேல் ஏற முயன்று கொண்டும், கியரைப் பிடித்து இழுத்துக் கொண்டும், நீரருந்திக் கொண்டிருந்த டிரைவர் வாய்க்குள் கையை விட முயன்று கொண்டும் இல்லாத அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.

அந்தப் பெரியவர் இறங்கிய பின் வெற்றாக இருந்த என் பக்கத்து இருக்கைக்கு அருகில், பிரவுன் நிற கால்சட்டையும், அதே பிரவுன் நிறத்துக்கு மேட்ச் ஆக்குவதற்காகவே அழுக்காக்கப்பட்டது போன்ற வெள்ளை சட்டையும் அணிந்த ஒரு பதிமூன்று வயது சிறுவன், என் பக்கத்தில் அமர வெட்கப்பட்டுக் கொண்டு நின்று கொண்டே இருந்தான். ஏதோ காட்டு வேலை செய்து விட்டு களைப்பாக வந்திருக்கிறான் என்பது தெரிந்தது.

இருக்கையிலிருந்த பையை மடியில் வைத்து கொண்டு, அவனை உட்கார சொல்வது போல் தள்ளி உட்கார்ந்தேன். ம்ம்ஹூம்.. நானும் அவனைப் போல் தலையைக் கலைத்து விட்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டால் தான் பக்கத்தில் உக்கார்வான் போல. அதற்குள் அடித்து பிடித்து வேறொருவர் வந்து அமர்ந்து விட்டார். பழனியில் அவன் இறங்கும் வரை, நிற்க முடியாமல் கம்பியில் சாய்ந்து கொண்டு, கால் மாற்றி நின்று கொண்டே வந்தான்.

பொள்ளாச்சியில் இறங்கியதும் (துர்)அதிர்ஷ்டவசமாக காட்டம்பட்டி செல்லும் திருப்பூர் பேருந்து குறுக்கே வந்து நின்று கொண்டு வரவேற்றது. அந்தப் பேருந்தில் அநியாயத்துக்கு கூட்டம். சலங்கை ஒலி கமல் போல ஒற்றைக் காலில் கதகளி ஆடியபடியே நின்று கொண்டு போனேன். அருகில் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மனி எப்படா அவர் மேல் விழுவேன், எப்படா குய்யோ முய்யோ என்று கத்தலாம் என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார். சாமி புண்ணியத்தில் ஒரே ஒரு முறை என் மடிக்கணினியை பையோடு அவர் தலை மேல் போட்டதோடு சரி.

பேஸ்மெண்ட் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தபோதும், குதிகாலில் வலி பின்னியது. மூச்சு தினறியது. உட்கார்ந்திருக்கும் எல்லாரும் திருப்பூருக்குத் தான் போய் தொலைய வேண்டுமா? வழியில் எங்கேயும் இறங்கக் கூடாதா? சீட்டோடு ஆணியடித்தது போல் அசையாமல் அமர்ந்திருந்தார்கள். எனக்கு மட்டும் ஹீ மேன் போல் சூப்பர் பவர் இருந்திருந்தால், அமர்ந்திருந்த ஒரு நான்கு பேரை சீட்டோடு தூக்கி ஜன்னல் வழியே எறிந்திருப்பேன்.

காட்டம்பட்டியில் இறங்கும் வரை, பழனியில் இறங்கிய அந்தப் பையனைக் கொஞ்சம் புன்னகையோடு 'உக்கார்' என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்திருப்பானோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது. இறங்கும் வரை மட்டுமே!

24 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

கோவில் புராணம் முடிந்து , பயனக் கட்டுரை ...
பொள்ளாச்சி டு மதுரை பயனக் கட்டுரை எழுதவும்.
விஜய்

Anonymous said...

//அடடா சகுனம் சரியில்லையேனு நினைச்சு, டிரைவருக்கு பின்னால இருக்கற சீட்ல போய் உக்காந்து சனியனத் தூக்கி பனியன்ல போட்டுகிட்டேன். டிரைவருக்கு எதுவும் பெரிய வியாதியோ என்ன எழவோ, சரியா நாப்பது நொடிக்கு ஒரு தடவ ஜன்னலுக்கு வெளிய மண்டையை நீட்டி காறி காறித் துப்பிக்கிட்டே இருந்தாரு //

சோம்பேறி ப்லோக் படிப்பாரூ.... அதுதான்
விஜய்

♫சோம்பேறி♫ said...

ஆஹா.. அவ்வளவு தான் விஜய். இனிமே சந்திரமண்டலம் மாதிரி வேற புது இடத்துக்கு பயணம் பண்ணினா அதைப் பத்தி எழுதுறேன்.

நீங்களும் என் வலைப்பூ படிக்கிறீங்க. உங்க பக்கத்துல இருக்குறவங்களை எச்சரிக்கனுமே!!! :-)

மனுநீதி said...

நல்ல எழுதிரிக்கீங்க சோம்பேறி.

இத இன்னும் சங்கமம் பேருந்து போட்டில பதிவு செய்யலியா ?

மனுநீதி said...

லிங்க் இதோ

http://tamil.blogkut.com/contest0409.php

♫சோம்பேறி♫ said...

உள்ளத்திலிருந்து நன்றி மனு நீதி.

விரைவில் அனுப்புகிறேன். தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.

சென்ஷி said...

//காட்டம்பட்டியில் இறங்கும் வரை, பழனியில் இறங்கிய அந்தப் பையனைக் கொஞ்சம் புன்னகையோடு உக்கார் என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்திருப்பானோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது. இறங்கும் வரை மட்டுமே! //

:-(

Anonymous said...

ஆஉறா... பிரமாதமாக பிட்டைப்போடுகீறிர்களே.. ஆமா எதுக்காக மருதக்கு போனிங்க...

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said... :-(*/

மீ டூ :-( சென்ஷி.

/*Anonymous said...

ஆஉறா... பிரமாதமாக பிட்டைப்போடுகீறிர்களே.. ஆமா எதுக்காக மருதக்கு போனிங்க*/

மதுரைக்கு பக்கத்துல ஸ்ரீவில தாங்க இருக்கேன். ஆமா.. என்ன பிட்? புதசெவி.

Bharathiselvan said...

இதை படிச்சதும் , ஏதோ நானும் அந்த பேருந்தில் பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வு.... நல்லாயிருக்கு சோம்பேறி... தொடரட்டும் இது போன்ற பயண பதிவுகள்....

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி ரதி செல்வன். பயணப் பதிவுகளில் இதுவே கடைசி என்று நினைக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பயண அனுபவங்கள் சோம்பேறி

♫சோம்பேறி♫ said...

நன்றி ஆதவன்:-)

Karthikeyan G said...

super o super!!

♫சோம்பேறி♫ said...

நன்றியோ நன்றி கார்த்திகேயன்ஜி :-)) (உங்களைத் திட்டுறவங்க கூட ரொம்ப மரியாதையா திட்டுற அளவு பெயர்ஜி உங்களுது)

Anonymous said...

//அந்தப் பையனைக் கொஞ்சம் புன்னகையோடு உக்கார் என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்திருப்பானோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது. இறங்கும் வரை மட்டுமே! /

:-((( ஆனா உண்மைய சொன்னதுக்காக :-)

பரிசலைப் பாக்கணும்ன்னா, காட்டம்பட்டியில இறங்காம திருப்பூருக்கு இல்ல போயிருக்கனும்.

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/*பரிசலைப் பாக்கணும்ன்னா, காட்டம்பட்டியில இறங்காம திருப்பூருக்கு இல்ல போயிருக்கனும்.
சித்ரா*/

ம்ம்கும்.. வெளங்கிடும். காட்டம்பட்டியில இறங்குறதுக்குள்ளேயே பாதி உசுரு போயிடுச்சு. அந்தக் கூட்டத்தில திருப்பூர் வரையிலும் போயிருந்தா பொனமாயிருப்பேன்.

அப்புறம் பரிசல் எக்சாக்ட்லி திருப்பூர் இல்ல சித்ரா, உடுமலைப்பேட்டை. என் ஃப்ரெண்டோட டாவொட ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் வீடு உடுமலையில தான் இருக்கு.

அவங்களுக்கு ஒருவேளை கல்யாணம் ஆச்சுன்னா நான் கண்டிப்பா அங்கே போவேன். அப்ப பரிசலைப் பாத்துக்கறேன்.

Anonymous said...

அவரோட சொந்த ஊர் உடுமலைங்கறது தெரியும். ஆனா அவர் இப்ப இருக்கறது திருப்பூர்தானே? அதனால கேட்டேன். சரி, கூடிய விரைவிலேயே உங்க எண்ணம் நிறைவேறட்டும்.:-)

சித்ரா

அறிவிலி said...

//என் ஃப்ரெண்டோட டாவொட ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் வீடு உடுமலையில தான் இருக்கு.

அவங்களுக்கு ஒருவேளை கல்யாணம் ஆச்சுன்னா நான் கண்டிப்பா அங்கே போவேன்//

ரைட்டு.....

♫சோம்பேறி♫ said...

ஓ.. அப்படியா சித்ரா.. நான் ஹிஸ்டரி, ஜாக்ரஃபி ரெண்டுலயுமே ரொம்ப வீக். அப்புறம் ஒருவேளை என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.

என் நண்பர் காதல் திருமணம் தான் செய்து கொள்வது என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் இவன் பேசும் பேச்சுக்கு எந்தப் பெண்ணும் இவனை நண்பனாகக் கூட ஏற்றுக் கொள்வதாயில்லை.

*****

அறிவிலி, சித்ராக்கு சொன்னதையே உங்களுக்கும் ரிப்பீட்டிக் கொள்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
அதும் அந்த அம்மா மண்டையில் லேப்டாப்பை வச்சு ஒரு போடு வரும்போது .. :))))))

♫சோம்பேறி♫ said...

நம்புங்க முத்துலெட்சுமி. சத்தியமா தெரியாம தாங்க விழுந்தது..

(பாரு குபேதிதாவுக்கு தர்ற மாரியே எனக்கும் மேல இருந்து ஆரோ பாதுகாப்பு தாராஹனு நெனைக்கேன்.)

Venkatesh Kumaravel said...

நல்லாயிருந்துச்சுங்க.. படிக்க படிக்க சுவாரஸ்யம் குறையாத, காட்சிகளில் நகரும் தன்மை ரொம்ப கவர்ந்தது.
http://tinyurl.com/mandhiranimidam

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி வெங்கி ராஜா.. உங்க கதையில் வர்ணனைகள் ரொம்ப நல்லா இருந்தது.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket