ராஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கல்ஸ் - (சத்தியமாக உரையாடல் சிறுகதை போட்டிக்காக)

Monday 29 June, 2009

எம்.எல்.ஏ விடுதி வாசலில் ஏதோ தண்ணி பிரச்சனைக்காக நடிகர் சங்க கூட்டம். நயன்தாரா கூட வந்திருக்கிறாராம். அந்தப் புண்ணியவதியால் ஏற்பட்ட அதீத வாகன நெரிசல் காரணமாக, திருவல்லிக்கேணிக்கு போக வேண்டிய பேருந்து, மவுண்ட் ரோடிலேயே அனைத்துப் பயணிகளுக்கும் டாட்டா காட்டி விட்டுத் திரும்பியது. ஒலிப்பெருக்கியில் ராதாரவி குரல் மவுண்ட் ரோடு வரை அதிர்ந்தது. திரையில் காணக் கூடிய துணை நடிகர்கள் முகங்கள் சாலையில் சர்வசாதாரணமாய் தென்பட்டது.

அந்தக் கூட்டத்தைத் தாண்டி தான் லிஸியும், நித்தியும் போக வேண்டிய சென்னைப் பல்கலைக் கழக மகளிர் விடுதி. லிஸி அவள் கிராமத்திலிருந்து சென்னை வந்த இந்த ஒரு வருடத்தில், ஊர்க்காரர்களிடம் நான் கமலுடன் காப்பி சாப்பிட்டேன், சூர்யாவுடன் சூப் சாப்பிட்டேன் என்று அளந்து விட்டிருந்தாலும், மண்டை மனோகரைத் தவிர வேறு எந்த நடிக நடிகையரையும் நேரில் பார்த்ததில்லை. இப்போது நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்றதும், கைபேசியிலிருந்த காமெராவை தயாராக வைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்ததை விட ரொம்பவே பெரிய கூட்டம். பெண்கள் சிலர் எக்கி எக்கி, மேடையை எட்டிப் பார்க்க முயன்று தோற்று, தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமென திரும்பி நடந்தார்கள். அவளும், நித்தியும் 'எக்ஸ்க்யூஸ் மீ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்றபடி நெரிசலான கூட்டத்திற்குள் ஒரு வழியாகப் புகுந்து விட்டார்கள்.

கூட்டத்தில் ஒருவன் லிஸி மேல் விழ, திடுக்கிட்டவள் சமாளித்துக் கொண்டு ஸாரி கேட்கப் போகிறானென நினைத்து 'இட்ஸ் ஓக்கே' என்றபடி திரும்பினாள். ஆறரை அடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த அவன், சொத்தைப் பல்லைக் காட்டி ஒரு மாதிரியாக சிரிக்க, 'ராஸ்ஸ்ஸ்ஸ்கல்' என்ற முனுமுனுப்புடன் முறைத்தபடி, நித்திக்குப் பின்னால் பத்திராமாக ஒண்டிக்கொண்டு, 'சீக்கிரம் போடீ' என அவசரப்படுத்தினாள்.

மறுபடி தகறாரான இடத்தில் கை வைக்கப்பட, 'உன் சொத்தைப் பல்லைப் பேத்துடுறேன் பாரு' என்பது போல் திரும்பி முறைத்தால், இது தலையில் காரக்கொழம்பு கொட்டிக் கொண்ட கிழிந்த ஜீன்ஸ்காரன். அதற்குள் வேறொரு பக்கத்திலிருந்து இன்னொரு ஐம்பத்தி சொச்ச வயசு வாலிபன், இன்னொரு குப்பத்துக் கிழிந்த பனியன்காரன், இன்னொரு ஸ்கூல் யூனிஃபார்ம்காரன்.

ம்ம்ஹூம்.. பெரும்பிழை. இந்தக் கூட்டத்தில் நுழைந்திருக்கவே கூடாது. நித்தியை நிறுத்தி 'வந்த வழிலயே திரும்பிப் போயிடலாமாடீ. ப்ளீஸ்' என அழாத குறையாக கேட்க, 'நானும் ரொம்ப நேரமா வந்த வழியை தான்டி தேடிகிட்டிருக்கேன்' என்றபடி திரும்பிய நித்தியின் கண்களில் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி! சட்டையின் பொத்தான்கள் பிய்க்கப்பட்டிருந்தது.

திறந்தவெளி மிருகக்காட்சியில் காணாமல் போன குழந்தையின் மிரட்சியுடன், லிஸி கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பாதுகாப்பாக இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

கொஞ்சம் தள்ளி, கூட்டத்தின் வேறொரு பகுதியில் டீசண்டாக, டையெல்லாம் கட்டிக் கொண்டு நின்றவர்கள் (மேன்ஷன் வாழ் பெருமக்களாக இருக்கக் கூடும்) பக்கமாக நகர்ந்தார்கள்.. அப்போது எருமைமாடு போல, முழு விசையுடன் வந்து ஒருவன் அவள் மேல் மோத, தடுமாறி பின்னாலிருந்தவன் மேல் விழுந்தவள், நித்தியின் கையை விட்டுவிட்டாள். நித்தி மேன்ஷன்வாசிகள் பக்கம் அடித்து செல்லப்பட்டு விட்டாள்.

நல்லவேளையாக, அவன்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவன் கீழே தள்ளி விட முயன்றால், ஒருவன் வேறொரு பக்கம் இழுத்தான். ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கவும், தள்ளி விடுவதுமாக பந்தாடிக் கொண்டிருந்தான்கள். அவளோ நாலரை அடி குள்ளி. சுற்றியிருந்தவர்கள் கெடா போல் இருந்தார்கள். அவளுக்கு எது நித்தி போன பக்கம்; எந்தப் பக்கமாக நகர போராடுவதென்றே தெரியவில்லை. இந்த சொத்தைப் பல்லனை அவள் நுழையும் போதே பார்த்தாள். சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டாளா அல்லது அவன் இவளைத் தேடி உள்ளே வந்து விட்டானா! ஒன்றும் விளங்கவில்லை.

அவர்கள் இம்சை அதிகமாகவே, கையில் வைத்திருந்த கனத்த புத்தகத்தால், பதிலுக்கு தாக்கத் தொடங்கினாள். அவர்கள் மேலும் உற்சாகமடைந்து, புத்தகம், கைப்பை அனைத்தையும் பிடுங்கி எறிந்து விட்டு, அதிகமாக சீண்டினார்கள். இவளது அலறல் ஸ்பீக்கர் சத்தத்தில் ஒன்றுமில்லாமல் போனது. கத்தி கத்தியே சக்தி முழுவதும் போய் விட, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கொண்டே வந்தாள். கூடாது.. இப்போது மயங்கிக் கீழே விழுந்து விட்டால் சோலி முடிந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாவது சமாளித்து விட்டால் போதும். நித்தி யார் உதவியுடனாவது வந்து காப்பாற்றி விடுவாள், என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் தீ வைப்பது போல, நித்தியின் கதறல் வெகு அருகில் கேட்டது. அவளை விட நித்தி மோசமான நிலமையில் இருக்கிறாளெனப் புரிந்தது.

இப்போது சமக தலைவர் சரத்குமார் பேசுவார் என்ற அறிவிப்புடன் ஒலிப்பெருக்கி ஊமையானது. இது தான் சமயமென சக்தி முழுவதையும் ஒன்று திரட்டிய லிஸி 'யாராவது காப்பாத்துங்க. ப்ளீஸ்' என்று கத்த, அவளை சுற்றியிருந்தவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன், 'தலைவா' என்று மிகப் பெரிதாகக் கூக்குரலிட்டதில், அவள் குரல் ஒன்றுமில்லாமல் போனது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நல்லவன் கூடவா இல்லை? வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாருமே நல்லவர்கள் தான் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. பக்கத்தில் தானே கடல் இருக்கிறது. சுனாமி வந்து ஒரே அள்ளாய் இவனுகளை அள்ளிக் கொண்டு போகக் கூடாதா!

கூட்டத்திலிருந்த அந்த சொத்தைப் பல்லன், எப்போது அவன் பக்கம் தள்ளப் படுவாள். எங்கே தொட்டால் கிக் அதிகமாக இருக்கும் என்று பேராவலுடன் காத்திருந்தான். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி இவன் தான் என்று முடிவு செய்து, அவனருகில் தள்ளப்பட்டதும் அவனை இறுக்க அணைத்துக் கொண்டு, 'ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என்னை எப்படியாவது வெளியே கொண்டு போய் விட்டுடுங்க ஸார்.. ப்ளீஸ்' என்று கதற, இதுவரை மன்சூரலிகான் போல கழுத்தை சாய்த்து கொண்டு லொக்கேஷன் தேடியவன், தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் வில்லன் போல திடீர் நல்லவனாகி 'த்தா.. டேய்.. உங்களைப் பெத்ததும் பொம்பளை தானடா' என்றவாறு ஒரு கையால் அவளை இறுக்கிக் கொண்டு, மறுகையால் மற்றவர்களைத் தள்ளி விட்டான்.

உதவியாக அவனது நண்பர்கள் போல இருவர், (அவர்களைத் தவிர) யாரும் தொட முடியாதபடி வந்து அவள் மீது அப்பிக் கொண்டனர். பாதுகாக்குறாங்களாமாம். தடவல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், நால்வரும் ஒருவழியாக அந்த ஜன சமூத்திரத்திலிருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.

அங்கே, தரையில் கால் வைக்கக் கூட இடமில்லாமல், ஒருவர் மீதொருவராக பலர் அமர்ந்திருந்தனர். அவன்களும் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லை. நோண்டியவர்களையும், காலை வாறி அவளைக் கீழே அமிழ்த்தி விட முயன்றவர்களையும், சமாளித்தவாறு, மேடைக்கருகில் நின்று கொண்டிருந்த போலீஸைப் பார்த்து 'ஸார்.. ஸார்..' என கத்த, அவரோ அப்போது மேடையில் ஆற்று ஆற்று என்று உரையாற்றிக் கொண்டிருந்த சரத்குமாரைப் பார்க்க தான் அவள் பரவசமாக பாய்ந்து வருகிறாள் என்று நினைத்தாரோ என்னவோ லட்டியை ஆட்டி 'இந்தப் பக்கமெல்லாம் வரக் கூடாது. போ' என்பது போல் சைகை செய்தார்.

"ஹாஸ்டல் ஸார்.. ஹாஸ்டலுக்கு போகனும்" என்று எரிச்சலும், பதற்றமுமாக விடுதியை நோக்கிக் கையைக் காட்டினாள்.

அவர் மூன்று அடி உயரத்தில் இருந்த தடுப்பைக் காட்டி, அந்தப் பக்கம் வழியில்லை, வந்த வழியே திரும்பப் போய் பீச் பக்கமாக சுற்றி விடுதிக்கு போகச் சொல்லி ரூட் காட்டினார்.

போலீஸைப் பார்த்த தைரியத்தில் காலை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு, நோண்டிக் கொண்டிருந்த ஒருவனை ஹை ஹீல்ஸ் செருப்பால் எட்டி உதைத்து, 'முண்டம்.. சோத்தை தானே திங்கிற' என்று கத்தினாள்.

இப்போது நிலைமை போலீஸுக்கு ஓரளவுக்கு புரிந்து போக, அங்கு நின்றபடியே விரல்களை அசைத்து வா என்பது போல் சைகை செய்தார். வந்து கொண்டிருந்த போதே ஒருவன் கை வைக்க, வேக நடையில் அங்கு வந்த போலீஸ் 'என்ன தைரியம் இருந்தா என் முன்னாலேயே கை வைப்ப' என்றபடி லட்டியால் அவன் தோள்பட்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார். நித்தி பற்றி சொல்ல, இரு காவலர்கள் உதவியுடன், முழுதாக கிழிந்து போன சட்டையும், தலைவிரி கோலமுமாக நித்தியும் வெளியே கொண்டு வரப்பட்டாள்.

நல்ல வேளையாக, இவ்வளவு களேபரத்தையும் பத்திரிக்கையாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பார்த்திருந்தால் டமால் பனால் என்று, எதுகை மொகனையில் அவர்கள் பரம்பரையே நாண்டு கொண்டு சாகுமளவுக்கு ஏதாவது எழுதியிருப்பார்கள். தெய்வாதீனமாக அப்போது நயன்தாரா பேசவில்லை. பேசியிருந்தால் அந்த போலிஸ்காரர் கூட அவர்களை கண்டு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!

'சுத்தி வந்தா என்ன?’ என்று போலீஸ் லெக்சரைத் துவங்கினார். முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுக்காட்டுக்கு எப்படி போறதுனு தெரியும்!

உதவிய(?!) அந்த மூவருக்கும் நன்றி சொல்ல திரும்ப எத்தனித்தாள். அடுத்த நாள் பஞ்சு மிட்டாய் கலர் பேண்ட், கிளிப்பச்சை நிற சட்டை போட்டுக் கொண்டு கையில் ரோசாப்பூவுடன் மூவரும் க்யூவில் நிற்கும் காட்சி, மனக்கண்ணில் 70MMமில் ஓடியதால், அந்த எண்ணத்தைக் கைவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென விடுதிக்குள் நுழைந்தனர்.

அறையை தாழிட்டதும், அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியாத நித்தி 'நீ மட்டும் சரியான நேரத்தில வரலைனா என் நிலமை என்ன ஆயிருக்கும்? ஜஸ்ட் எஸ்கேப்ட்.. தெரியுமாடீ! நல்ல வேளை அப்படி எதுவும் நடந்திருந்தா செத்துருப்பேன்' என புலம்பலுடன் கதற ஆரம்பித்தாள்.

எவனோ நாதாரி செய்த தவறுக்கு இவள் ஏன் சாக வேண்டுமென லிஸிக்கு புரியவில்லை. ஹ்ம்ம்ம்.. ஏனென்று கேள்வி கேட்டால் தான் கண்ணகியாக முடியாது என்று மட்டும் புரிந்தது.

(எங்க குலசாமி மேல் சத்தியமாக உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

உரையாடல் போட்டிக்கான செந்தழலாரின் விமர்சனங்களுக்கு என் மதிப்பெண்

Wednesday 24 June, 2009

முதலில் இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு குட்டிக் கதை :

ஒரு ஊருல ரிவர்ஸ் ரிச்சர்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட்னு ஒருத்தன் இருந்தானாம். யாராவது எதையாவது செய்யக் கூடாதுனு சொல்லிட்டா போதும், அதுக்கு எதிர்மறையா, ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செஞ்சுட்டு தான் வேற வேலை பாப்பானாம். அவன் பொண்டாட்டி ரீட்டாவும் அவனைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்தாளாம். முடியல.

ஒரு நாள் அவனை பாழுங்கிணத்துப் பக்கம் கூட்டிட்டுப் போயி, 'பாத்துயா உள்ள உழுந்துடாத'னு சொன்னாளாம். உடனே ஓடிப் போயி சம்மர் சால்ட் அடிச்சு, கிணத்துக்குள்ள குதிச்சுட்டானாம். அவளும் 'ஒழிஞ்சதுடா சனி'னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாளாம்.

*.*.*.*.*.*.*.*

'இதனை தொடர்ந்து விவாதித்து மொக்கை போடாதீங்க, ப்ளீஸ்'னு செந்தழலார் சொன்னாலும், நம்ம கடமையை நாம செஞ்சு தானே ஆவனும். மத்தபடி ரிவர்ஸ் ரிச்சர்ட் ஆவி, எனக்கு உள்ளார பூந்துடுச்சான்னெல்லாம் கேக்கக் கூடாது.

செந்தழலா
ரின் விமர்சனங்களுக்கு என் சீரியஸான விமர்சனம்

முதலிலேயே ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன். போட்டிக்கான அனைத்துக் கதைகளையும் நான் படிக்கவில்லை. செந்தழலாரின் விமர்சனத்தால் தூண்டப்பட்டு, நான்கு கதைகளை முழுசாக படித்ததற்கே, நடுமண்டையில் நட்டுவாக்காலி போட்டது போல வாயில் நுரை தள்ளி விட்டது. (நான் எழுதிய கருமத்தையே திரும்பப் படிக்க எனக்குப் பொருமையில்லை)

இது இப்படியிருக்க, சந்திப்பிழைகள், தொந்திப் பிழைகள் என்று ஒன்று விடாமல் அக்கு வேறு ஆணி வேறாக, வாசித்த அத்தனை கதைகளையும் ஐந்து வரிகளுக்குக் குறையாமல், விமர்சித்திருக்கும் செந்தழலாருக்கு இரண்டு கைகளாலும் ஒரு மிகப் பெரிய சல்யூட்.

இத்தினியூண்டு கதைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்திருப்பதைப் பார்க்கையில், 'ஏன்யா இவ்ளோ பெரிசா எழுதி என் டவுசரைக் கிழிக்கிறீங்க' என்று மற்றவர்களைப் பார்த்து விமர்சகர் கதறுவது போல் தோன்றுகிறது. (அதிஷாவின் ஒரு வரிக் கதையோ, அறிவிலியின் ஒரு எழுத்து கதையோ, சோம்பேறியின் ஒரு எழவும் இல்லாத கதையோ போட்டியில் பங்கு பெற்றிருந்தால் சென்டம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது)

விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் செய்வது போல, சில கதைகளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, பெயில் மார்க் போட்டிருப்பதைப் பார்க்கையில், விமர்சனம் எழுதி முடித்த பின், சரக்கடித்து விட்டு மார்க் போட்டிருக்கிறாரோ என்ற எண்ணமெழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

(ஒருவேளை, கதைகளுக்கு மட்டும் மதிப்பெண்ணிடாமல், சைடிலுள்ள ஜூஜூ பொம்மை, ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...)

விமர்சகர் வரிசைக்கிரகமாகத் தான் கதைகளைப் படித்து, விமர்சித்து வருகிறார் என்று தெரிந்தும், 'என் கதை இல்லையா? என் கதைக்கான விமர்சனம் எப்போ வரும்? என் கதையை படிச்சுட்டு கொஞ்சம் திட்டுங்களேன்' என்று பலரும் கேட்டிருப்பதே விமர்சகரின் வெற்றியைக் காட்டுகிறது.

அட்லீஸ்ட் அவருக்கு சுட்டி அனுப்பியிருப்பவர்கள் கதைகளின் விமர்சனங்களை மட்டுமாவது, அவரது வலைப்பூவில் ஏற்றினால், கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஒரு விளம்பரமும், என் போன்ற சோம்பேறி வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வமும் அதிகப்படும். நன்றி.

செந்தழலாரின் விமர்சனத்துக்கு என்னுடைய மதிப்பெண் 80 / 100

கடைசியாக இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு கவிதை(!?) :

ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செந்தழலார் ஒவ்வொரு பகுதி விமர்சனத்தையும் உருவாக்க பல பாடாவதி கதைகளையும்(போர்னோ கதை உட்பட) படித்து ரத்தக் கண்ணீர் சிந்துகிறார். அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்.. செந்தழலாரின் விமர்சனம் அவரைப் பொறுத்தவரை சிறப்பானதே.. இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, விமர்சனம் எழுதுகிறோம் என்றதும் செந்தழலார் அவர் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வார் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,... அல்லது செம்மையான தழலுக்கு பஞ்சம்...

'எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...', 'எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...' போன்ற ஒன்றிரண்டு வரிகளைத் தவிர்த்து முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறார் நம்ம ரெட் ஃபயர்...!!!

மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

ஒரு ட்ரம்ஸ் வயலின் வாசிக்கிறது அல்லது ஷ்ஷ்ஷங்கர் சேரனான கதை

Friday 19 June, 2009

எனக்கு பணக்காரர்கள் மீது வெறுப்பு வந்ததற்கு, இங்கே சொல்ல முடியாத பல காரணங்கள் இருந்தாலும், ஷங்கர் பட ஹீரோ போல, அவர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்ற கொலை வெறி வர காரணம், இயக்குனர் ஷங்கர் அல்ல எங்க கனேசன் அண்னன் தான்.

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின் போது தான் கனேசன் அண்னன் எனக்கு அறிமுகமானார். கிரிக்கெட் விளையாடும் போது பந்து அடிக்கடி இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்குள் போய் விழுந்து விடும். கேப்டனை விட அதி முக்கிய பொருப்பான பந்து பொறுக்கிப் போடும் பணியை நான் செய்து கொண்டிருந்ததால், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பேச்சு கிரிக்கெட்டை விட சுவாரசியமாக இருந்ததால், முழு நேரமாக அந்த கம்பெனியிலேயே, நாளுக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் எடுபிடி வேலையில் சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் போல் குழந்தைகள் உலகத்துக்குள் நுழைய முயற்சிக்காமல், அவர் உலகத்துக்கு என்னை இழுத்து சென்றார்.

எனக்கு நிறைய கெட்ட வார்த்தைகளும் அதற்கு அர்த்தமும் கற்றுத் தந்தார். என் வயதுக்கு புரியுமளவு A ஜோக்குகள் சொல்வார். அதில் எனக்கு மிகவும் பிடித்த, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இல்லை. வேண்டாம். என் மீது பகுத்தறிவாளர் என்ற முத்திரை குத்தப்படலாம்.

நாம இப்படி இருக்குறதுக்கு இந்தப் பணக்கார @&*$@*&கள் தான் காரணம் என்பார். எங்கள் ஊரைப் பொருத்த வரை அவர் சொல்வது உண்மை தான். இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இரண்டே பிரிவினர் தான். 'நான் நாசமாய் போனாலும் பரவாயில்லை. மற்ற மூவரும் முன்னேற விட மாட்டேன்' என்று குல தெய்வம் கோவிலில் சத்தியம் செய்து கொண்ட நான்கு மேல் தட்டு பங்காளிகள். ஆட்டு மந்தைகள் போல அவர்களிடம் பதினைந்து ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்த கீழ் தட்டு முட்டாள் மக்கள்.

(அந்த பதினைந்து ரூபாயையும் வடை, டீ என்று அன்றே செலவு செய்து விட்டு அவசரத் தேவைகளுக்கு வட்டிக்கு வாங்கிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் வசதியாக, சூப்பர்வைசர்களாக ஐம்பது, நூறு என்று வாங்குபவர்கள் சரக்கு, வடை என்று செலவழிப்பார்கள்)

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் தான் வெளிநாட்டில் கழிவறை கழுவியும், ஒட்டகத்தைக் குளிப்பாட்டியும் சில கீழ் வர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கம் என்று புதிதாக ஒன்றைப் புகுத்தினர்.

என் அப்பா இதில் எந்த வகையிலும் சேராமல், பக்கத்து ஊரிலிருந்த மில்லில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது மேலாளரிடம் ஹிட்லர் பிச்சை எடுக்க வேண்டுமாம். ஒன்னுக்கு போனால் கூட அவரது மேலாளர் முறுக்கிய ஈர கயிற்றால் அடித்து இழுத்து வந்து, 'வேலையைப் பாருடா' என்பாராம். ஆனாலும் என் அப்பா உணர்ச்சி வசப்படாமல், எப்படி பணத்தைப் போல உழைப்பும் ஒரு மூலதனம் என்பதை லாஜிக்கலாக கம்யூனிஸ்ட்தனமாக விளக்குவார். அடிக்கடி மாநாடு, ஊர்வலம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் பிரியானி வாங்கித் தருவார்.

ஆனால் கனேசன் அண்ணா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. முதலாளிக்கு வாங்கிப் போகும் டீயில் கண்டதைக் கலப்பது, காயப் போடப் பட்டிருக்கும் முதலாளி மற்றும் அவர் மகன்களின் ஆடைகளில் செந்தட்டி எனப்படுமொரு வகை அரிப்பு ஏற்படுத்தும் செடியைத் தேய்த்து விடுவது என்று ஏதாவது செய்து அவர் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்வார்.

குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு (லஞ்சம் தர) பயந்து இருபது குழந்தைத் தொழிலாளர்களை பத்துக்கு பத்து அளவு கழிவறையில் அடைத்து வைத்து, அதில் நான்கு குழந்தைகள் நசுங்கி மூச்சு முட்டி இறந்தது போன்ற சம்பவங்களைப் பற்றி கேள்விப் பட்ட பிறகு அவர் செய்வது சரியென்றே பட்டது. வளர்ந்ததும் புலன் விசாரனை விஜயகாந்த் போல உடையணிந்து கொண்டு அந்த நாலு பேரையும் சுட்டுக் கொன்றுவிட வேண்டுமென முடிவு செய்து, அந்த வருட திருவிழாவிலிருந்தே ரெய்ன் கோட், ஷூ, கண்ணாடி, தொப்பி, தொப்பியில் மாட்டிக் கொள்ள இறகு எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, டியூஷன், தேன் கூட்டுக்கு தீ வைத்து தேனெடுப்பது, பனியாரக் கிழவி வீட்டுக் கொல்லையில் கொடுக்காய்புளி பழம் திருடுவது, தவளை, கரட்டாண்டிகளைக் கொன்று விட்டு 'அய்யோ அண்ணே.. இப்படி அநியாயமா எங்களை விட்டுட்டுப் போயிட்டியே' என்று தலையிலடித்துக் கொண்டு அழுவது என்று வாழ்க்கை பிஸி ஆகி விட்டது.

என் அப்பாவும் வட்டி தொழில் ஆரம்பித்து, அது சக்கை போடு போட்டு நாங்களும் அந்தப் பணக்கார நாய்களில் ஒருவராகி விட்டதாலோ என்னவோ, ஷங்கர் பட ஹீரோவாகியிருக்க வேண்டிய நான், ஆட்டோக்ராஃப் பட ஹீரோவாகி உங்களுக்கு என் சுயசரிதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன் :-(

கதை முடிந்தது. இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் போது தான் தெரிந்தது, பல வருடங்களுக்கு முன் கனேசண்ணனின் காதலி அந்த நான்கில் ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து கொண்டு, இவரைக் கழட்டி விட்டு விட்டாராம். அதற்குப் பிறகு இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம்.

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு தான் அவரைத் திருவிழாவில் பார்த்தேன். முன்னை விட கொஞ்சம் பூசினார் போல் இருந்தார். அக்னி சட்டி எடுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி பரவசமாக ஆடிக் கொண்டே வந்தவர், என்னைப் பார்த்ததும் ஆட்டத்தை நிறுத்தாமல் பல்லைக் கடித்தவாறு 'எப்ப வந்த? இங்க தான் இருக்கியா' என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. (என்னை அடையாளம் கண்டு கொண்டார் என்பதற்காக அல்ல. எங்கள் உறவு அப்படி.) அவருக்கு கடவுள் பக்தி அறவே கிடையாது. அவரது A ஜோக்குகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாவது கடவுள்கள் தான். பொதுவாக எல்லாரையுமே ஏதாவது கெட்ட வார்த்தையை அடைமொழியாகக் கொண்டு தான் அழைப்பார் என்றாலும், கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார்.

இப்போது கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறது. கொஞ்சம் ஊட்டமாகவும் இருக்கிறாரே என்று அப்போழுதே மைல்டாக சந்தேகம் வந்தது. இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஊர்ஜிதமானது. இவரும் இவர் காதலியும் 'பழையபடி' ராசியாகி விட்டார்களாம். (நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு நாற்பது வயதிருக்கும். அந்தம்மாவைப் பற்றித் தெரியவில்லை).

இவர்கள் விஷயம் அந்தப் பணக்காரருக்குத் தெரிந்து அவர் கண்டிக்க, அந்த அம்மா அவரிடமிருந்து லம்பாக பணம், நகை என்று லவட்டிக் கொண்டு கனேசன் அண்ணனுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார்களாம். அந்தப் பணக்காரரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம்! ஹூம்ம்ம்ம்.. ஹீரோ ஹீரோ தான்..

32. உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இதுவாமே?

Tuesday 16 June, 2009

முப்பதிரண்டு கேள்விகளில் சில எனக்கு உவப்பாக இல்லாததால், வேறு கேள்விகளால் ரீப்ளேஸ் செய்திருப்பதற்காக, தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை அழைத்த சென்ஷிக்கு மன்னிப்பு தமிழில் பிடிக்காத வார்த்தை என்பதால் அவரிடம் மாஃப் கரோ ஜி என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே : உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சோம்பேறி : Its not that i'm lazy. Its just i dont care. இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது எனக்கு புரிய வைக்கத் தெரியவில்லை என்பதால், இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை. பிரபல பதிவர்ர்ர்ர் என்று பெயரை மாற்றிக் கொள்ள இருக்கிறேன்.

நிஜப் பெயர் : என் அப்பா, பிரபல பிண்ணனிப் பாடகருடைய குரலில் மயங்கி எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். எனக்கு பேச வந்ததும் என் குரலைக் கேட்டு அரண்டு எம்.ஆர்.ராதா என்று பெயரிட்டிருக்கலாம் என்று புலம்பினார்களாம்.

கே : உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இது என்று ஒரு இது வலையுலகில் பரபரப்பாக இதாகிறதே! உண்மையா?

(வழிகிறார்) ஹி ஹி.. ஓரளவு நிஜம் தான்..

கே : எந்த அளவு என்று அளந்து காட்ட முடியுமா?

(உட மாட்டீங்களேடா டேய் என்பது போல் முறைக்கிறார்) எனக்கு அவர் மேல் ஒரு இது என்பது வரை உண்மை

கே : உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். செம ஸ்டைலிஷாக இருக்கும். என் உதவி இல்லாமல் யாராலும் என் எழுத்தைப் படித்து விட முடியாது. சமயங்களில் என்னாலேயே படிக்க முடியாது.

கே : நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

(கொஞ்சம் தள்ளி உட்கார்கிறார்) மாட்டேன்.

கே : நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நிச்சயம் மாட்டேன். ஹாய் ஹலோ என்பதுடன் நிறுத்திக் கொள்வேன். அதீத அன்பு காட்டி சாவடிப்பதில் நான் ஒரு தீவிரவாதி.

கே : கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் பிடிக்கும். (அண்ணாந்து விட்டத்தைப் பார்க்கிறார்) மிகவும் பிடித்த ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு அலை வரும் போதும் குதித்தும், மூழ்கியும் அலைகளை எதிர்கொள்ளும் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.

உள்ளே போகும் அலைகளும் வெளிவரும் அலைகளும் சந்திக்கும் சீற்றமிகுந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே விழுந்து அலைகளால் இழுத்து செல்லப்படும் போதும் ஒருவர் கையை மற்றவர் விடாமல் இறுக பற்றிக் கொண்டிருப்பது...

கே : ('போதும். நிறுத்து' என்பது போல் இடை மறிக்கிறார்) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

புன்னகை. அதன் விசாலத்தை வைத்து, அவர் எந்த அளவு நம் நட்பை விரும்பிகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கே : உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சொல்கிறேன்.
பிடிக்காதது : இன்னும் ஆறு மாதங்கள் கழித்து சொல்கிறேன்.

கே : (ரொம்ப முக்கியம் எங்களுக்கு) யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நமீதா மற்றும் ஆஸ்ட்ரேலியாவிலிருக்கும் என் யக்கா மவ.

கே : திமுக தில்லியில் 16 சீட்கள் பெற்றது பற்றி..

அடங்கொன்னியா.. நெசமாவா? இது தெரியாம போன வாரம் நான் டெல்லி போனப்போ அன்ரிசர்வேஷன்ல பாத்ரூம்ல உக்காந்துகிட்டு வந்தேனேப்பா.. தெரிஞ்சிருந்தா அவங்க கைல கால்ல விழுந்தாவது ஒரு சீட் கேட்டு வாங்கி, அதில ஒண்டிகிட்டு போயிருப்பேன்.

கே : (உன் அரசியல் அறிவுல தீயை வச்சு கொழுத்த என்பது போல் முறைக்கிறார்) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? (டயர்டாகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறார். தண்ணீர் குடிக்கிறார்.)

இல்லை. தெரியாது.

கே : வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால்.

கே : (தோடா.. தத்துவவியாதினு நெனப்பு மனசுல) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சென்ஷியின் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா' என்ற கவிதை. ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

(படிக்காதவன் படத்தில் ரஜினி, ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது என்று கேள்விப் பட்டதும், ஆட்டுத் தலையோட எப்படி? முதல்ல ஆட்டோட எப்படி? என்று ஆழ்ந்து சிந்திப்பாரே அந்த ரீதியில்.)

கே : கந்தசாமி படத்தில் ஷ்ரேயா அணிந்த ஒரு உடையின் விலை ஒரு கோடியாமே!

(பெருமூச்சு விடுகிறார்) வர வர கர்சீப்பின் விலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கே : வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, ஷிம்லா, டார்ஜிலிங் போயிருக்கிறேன். எது அதிகபட்ச தொலைவு என்று தெரியவில்லை. ஷிம்லா மலை உச்சியிலிருந்து சீனா தெரிந்ததால் அது தான் அதிகபட்ச தொலைவு என்று நினைக்கிறேன்.

கே : உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வாழ்க்கையைப் பற்றிய பயத்தை (யதார்த்தத்தை) எனக்குள் திணிக்க முயல்வது. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னுடன் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லாரும் அட்வைஸ் அம்புஜங்களாகவும், அறிவுரை ஆறுமுகங்களாகவும் மாறி விடுகிறார்கள்)

கே : உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரையாவது கலாய்க்காவிட்டால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது :-)

சீரியஸாக பதிலளிப்பது என்றால், ஏராளமான சாத்தான்கள் இருக்கின்றன. நமது நாதாரி சமுதாயம் எதையும் அவ்வளவு சீக்கிரம் தலை தூக்க விடுவதில்லை.

(எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்ற நமக்கு தெரிந்த யாரும் நம்மைப் பற்றி நம்பாத ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கே சிலர் வலைப்பூ எழுதி வருகிறார்கள்(றோம்!?))

கே : எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜாக்கி சான் படங்கள்

கே : (உஷாராகக் கொஞ்சம் நகர்ந்து உட்கார்கிறார்) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ். தமிழக வெனிஸ் அல்ல நிஜ வெனிஸ். (கிரேக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)

கே : உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : பல வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸாக தொலைபேசி, 'நான் யாருனு கண்டுபுடி பாக்கலாம்' என்று கேட்கும் நண்பர்களின் குரல்.

பிடிக்காதது : பேருந்து, ஆட்டோக்களின் ஹாரன் சத்தங்களைக் கேட்கும் போது, டிரைவரின் பொடனியில் ஒரு போடு போடலாம் போல் இருக்கும். சமயத்தில் ரொம்ப டென்ஷனாகி இளைய தளபதி போல 'ஏஏஏஏஏஏஏய். சைலன்ஸ்' என்று கத்தி விடுவேன்.

கே : பிடித்த விளையாட்டு?

ஷக்தி குட்டியுடன் சொப்பு வைத்து விளையாடுவது.

கே : எப்படி விளையாடுவது?

முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.

கே : இப்படி மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறீரே. நீங்கள் எழுதியதை நீங்களே என்றாவது படித்துப் பார்ப்பதுண்டா?

நோ கமெண்ட்ஸ்.

கே : நீங்கள் பதிவர் ஆகாவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே!

(கெக்கெபிக்கே என்று சிரிக்கிறார். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது) சரியாகக் காதில் விழவில்லை. இன்னொரு முறை சொல்ல முடியுமா?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டேன்.

(ராகமாக) இன்னோரு முறை சொல்லுங்க..

கே : (காண்டாகி முறைக்கிறார். பல்லைக் கடித்தபடி) நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரலாக பேசப்படுகிறதே!

(ஆமானு சொன்னா அடி விழுமோ என்ற பயத்துடன்) இல்லை. இட்லிவடையின் தாக்கத்தில் இட்டாலிவடை என்று ஒரு பதிவர் வந்தது போல, சோம்பேறி என்ற என் பெயர் தாக்கத்தில் சோமாறி என்று ஒரு பதிவர் எப்போது வருகிறாரோ அன்று தான் நான் சூப்பர் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வேன்.

கே : நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

ஜாக்கி சான் - அழகாக அந்தரத்தில் பல்டி அடிப்பதால் (பல்டி அடித்துக் காட்டுகிறார்)

ரஜினி காந்த் - அழகாக அந்தர் பல்டி அடிக்கிறார் என்பதால் அல்ல.. சாரு நிவேதிதாவை அழைக்க இருப்பதால்..

சாரு நிவேதிதா - லக்கிலுக்கை அழைக்க இருப்பதால்..

நமீதா - என் ஃபாலோயர்கள் அனைவரையும் அழைக்க இருப்பதால்..

ரூம் போட்டு யோசிக்கனும் - உரையாடல் போட்டிக்காக

Saturday 6 June, 2009

அன்பு மக்களே! உரையாடல் போட்டிக்காக இதுவரை வெளிவந்த கதைகளில் நான்கைந்தைத் தவிர எதுவும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. எழுதியவர்களைப் பற்றிய இமேஜை மறந்து விட்டு, எழுத்தைப் பார்த்து கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நம்மைப் போன்ற இளம் பதிவர்களும் நன்றாக எழுதினால் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே நானும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால், சைடிலுள்ள பொம்மையைக் க்ளிக்கி போட்டியின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம். அம்பூட்டு தூரம் போக சோம்பேறித்தனப் படுபவர்கள் இங்கே க்ளிக்கி விவரங்களை அறியலாம்.
இதுவரை சில பதிவர்கள் உரையாடல் போட்டிக்காக எழுதியுள்ள கதைகளை விட அவர்கள் வலைப்பூவில் எழுதப்பட்ட மற்ற கதைகள் அருமையாக உள்ளன. என்னைப் போன்ற இளம் (சரி.. சரி..) பதிவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்கள் வேண்டுமென்றே பாடாவதியாக எழுதியிருக்கிறார்களா, இல்லை போட்டியென்றால் இப்படிப்பட்ட கதை தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அப்படி எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் பாடாவதியாக எழுதிய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நன்றாக எழுதியிருக்கும் நான்கைந்து பேருக்கு 'கர்ர்ர்ர்ர்ர்ர்' மற்றும் 'நாங்களும் வருவோம்ல'

உரையாடல் போட்டிக்கு 'சிறுகதை எழுதுவது எப்படி' என்று ரூம் போட்டு யோசிப்பதற்காக, நாளை (ஞாயிறு) மதியம் நாகரீகத்தின் தொட்டில் வெனிஸுக்கு கிளம்புகிறேன். (நேரம் ஒத்துழைத்தால் நாகரீகக் கட்டில் பாங்காங்கிற்கு போகவும் எண்ணமுண்டு). வரும் போது யாராருக்கு செண்ட் பாட்டில், சாக்லேட், பிஸ்கோத்து வேணுமோ கை தூக்குங்க.. ஓகே டன். டாட்டா.. பை பை. சீ யூ..

பிரபல பதிவர் சக்கரை சுரேசும், புஜ்ஜுக்குட்டி இட்லிவடையும்

Friday 5 June, 2009

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு' என்று திருநர்சிம் ஸாரி திருவள்ளுவர் சொன்னதை நடைமுறைபடுத்தும் பொருட்டு, எனது இந்த ஐம்பதாவது (சரி.. சரி.. அம்பத்தி ஒன்னு) பதிவு முதல் பிரபல பதிவர் சக்கரை சுரேஷ் அவர்களின் ஐடியாவான சக்கரைக்கட்டியைப் போல் நானும் புஜ்ஜுக்குட்டி என்றொரு பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். அவர் கோபித்துக் கொண்டு கா விட்டு விட மாட்டார் என்று நம்புகிறேன். (கா விட்டாலும் பரவாயில்லை. காப்பி ரைட், கழுதைக் குட்டி என்று காந்தி தாத்தா நோட்டைக் கேட்காமல் இருந்தால் சரி)

அன்னாரைப் போலவே நானும் புதுபதிவர்களை அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தலாம் என்றிருக்கிறேன் (யாரிடமும் உதை படாமலிருக்கும் வரை). இந்த வார புஜ்ஜுக்குட்டியாக நான் அறிமுகப்படுத்தியிருப்பவர், சமீபத்தில் 1993 முதல், ஏழு வருடங்களாக எழுதிவரும் புத்தம்புதிய பதிவர் இட்லிவடை அவர்கள்.

உங்களுக்குப் வெளங்கும் படி இட்லிவடையைப் பற்றி வெளக்க வேண்டுமென்றால், இட்லிவடை ரமணா விஜயகாந்த் போல.

க்ளைமாக்ஸ் வரை விஜயகாந்த் அனானியாகவே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதைப் போல, க்ளைமாக்ஸ் வராததால் இன்னும் அனானியாகவே இருக்கிறார். புள்ளிவிவரத்தில் இவர் சூரப் புலி என்பது இவரது இந்த மற்றொரு வலைப்பூவைப் பார்த்தால் புரியும். போதாக்குறைக்கு 39 தொகுதிகளில் தேர்தல் டீம் என்று ரமணா போலவே ஒரு நெட்வொர்க் ஆரம்பித்திருக்கிறார்.

ரமணாவில் அரசு அதிகாரியான நாயகியின் மாமா மாற்றலானதை, கேப்டன் நாயகிக்கு முன்பே விஜயகாந்த் தெரிந்து வைத்திருப்பார். இட்லிவடை அவரை விட அப் டு டேட். எங்காவது கலவரம் நடந்தாலோ, யாராவது கட்சி மாறினாலோ இவரிடம் சொல்லி விட்டு தான் செய்வார்கள் போல; தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.

இதனாலேயே இட்லிவடையில் ஒருவர் ஜோதிடர் சுப்பையாவாகவோ, ஸ்வாமி ஓம்காராகவோ இருக்கலாமென்று எனக்கொரு சந்தேகம். ஆனால் பலர் இவர்களில் ஒருவர் என்றும் அன்புடன் பாலாவாகவோ அல்லது பாராவாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

மற்றபடி கேப்டன் போல இடது காலை சுவற்றில் உதைத்து, வலது காலால் சுழட்டி சுழட்டி அடிப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் 'பாயும் வேகம் ஜெட்லி தான்டா' என்று பன்ச் டயலாக் சொல்வதால் அதற்கும் சாத்தியமிருப்பதாகவே தோன்றுகிறது. (ஸோ இத்துடன் மீ த எஸ்கேப்பூ)

தமிழ்மண நிர்வாகிகளுக்கு: இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

காதல் அனுபவம் அல்லது புனைவு (அபியும் நானும்)

Tuesday 2 June, 2009

ஷா-க்கு அடுத்து எனக்கு நெருக்கமான நண்பன் அபி (பார்ப்பதற்க்கு அபிஷேக் பச்சன் போல் வாட்ட சாட்டமாக இருப்பான்). +2 முடித்ததும் ஒரு உருப்படாத கோர்ஸ் எடுத்து விட்டு, உள்ளூருலேயே 7000 ரூபாய் சம்பளத்தில் ஒரு உருப்படாத வேலையில் இருக்கிறான். எங்கள் ஊரிலிருந்து இரண்டு ஸ்டாப் தள்ளி தான் இவன் அலுவலகம். இவனை வழியனுப்புவது போல் பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்க்க காலை 8.30க்கு அபியுடன் நான், ஷா, பீர் மூவரும் பேருந்து நிலையத்தில் ஆஜராகி விடுவோம்.

ஷா ஊரில் பிள்ளைகளே இல்லாதது போல் தினமும், அவன் ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு (குறுக்கு வழியில் 7 கிமீ, பேருந்தில் வந்தால் 18 கிமீ) பிரயாணம் செய்து தவறாமல் வந்து விடுவான். ஷா என்ற ஷாருக் என்ற பொறம்போக்கு மீது நான் இப்போது பெருங் காண்டில் இருப்பதால், கெட்ட வார்த்தை பிரயோகத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவனைப் பற்றி வேறொரு கூலான சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

வழக்கமாக, காலை 8 மணிக்கு எங்கள் வீட்டில் நான் ஷா இருவரும் சாப்பிட்டு விட்டு, பீர் வீட்டில் மூவரும் காப்பி அருந்தி விட்டு, அபி வீட்டில் ஐவரும்(அபி அப்பாவையும் சேர்த்து. அநியாயத்திற்கு ஜாலியான மனிதர்) தம்மடித்து விட்டு, நால்வரும் பேருந்து நிலையத்தை அடையும் போது 8.30 ஆகி விடும்.

அபி மாநிறத்துக்கு ஒரு படி குறைவாக இருப்பான். மிக மிக வசீகரமான கண்கள். அதனால் தானோ என்னவோ எல்லாப் பெண்களையும் கண்களால் மட்டுமே காதலிப்பான். இவன் டாவடிக்கும் பெண்கள் பெயர் எல்லாம் லட்சுமி என்றே முடியும். தற்செயலாகத் தான் அப்படி அமைந்து விடுகிறது என்று தலையிலடித்து சத்தியம் செய்கிறான். உண்மையாகத் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் பேருந்தில் தொங்கிக் கொண்டும், திருவிழா கூட்டத்திலும், மிகச் சில சமயங்களில் அலுவலகங்களிலும் காதலிக்கும் அவனுக்கு அந்தப் பெண்களின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லாதது.

இதுவரை எந்தப் பெண்ணிடமும் இவன் போய் காதலை சொன்னது இல்லை. அவர்கள் வந்து சொல்லவும் இவன் சந்தர்ப்பம் கொடுத்தது இல்லை. அந்தப் பெண் திருமண அழைப்பிதழை இவன் கையில் கொடுத்து விட்டு, 'தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க' என்று அழுது கொண்டே சொல்வது தான் அவர்கள் பேசிக் கொள்ளும் முதலும் கடைசியுமான வார்த்தையுமாக இருக்கும்.

கொஞ்சம் தைரியமான பெண்ணென்றால், 'வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாம் ஓடிப் போய் விடலாமா' என்று கேட்டே விடுவார்கள். அபி தங்கைக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இருபத்தைந்து பவுன் நகையும் போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் பாதியையாவது தன் திருமணத்தில் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மாணத்தில் இருப்பதால், அந்தப் பெண் மனம் புண் படாத அளவு, நயமாக எடுத்து சொல்லி திருப்பி அனுப்பி விடுவான். அடுத்த நாளிலிருந்து வேறு பெண்ணைப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

காதலைப் புத்தகத்தோடும், பெண்களை அதன் சேப்டர்களுடனும் ஒப்பிட்டு பேசுவான். ஏன் யாரையும் காதலிப்பதில்லை என்று கேட்டால், 'புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தே தலைகீழாக படிக்க ஆரம்பித்து விட்டேன்' என்பான்.

ஒரு நாள் எங்கள் வீட்டில் யாருமில்லாத போது பீர் அடித்த படி, ஷா அவனுடைய குஜால் கதைகளை சொல்லிக் கொண்டிருந்த போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நீ ஏன் அடுத்த கட்டத்துக்கு போவதில்லை என்று அபியிடம் கேட்டு விட்டேன்.

அதற்கு அபி, 'ஒரு புள்ளையைப் பிடிச்சிருந்தா பாக்கறேன். நான் பாக்குறது தெரிஞ்சதும் அந்தப் புள்ள பண்ற அலும்பலை ரசிக்கிறேன். அதைக் காதல்னு நினைச்சுகிட்டு என் கிட்ட வந்து பேசினா, அடுத்த நாள் வேற புள்ளையைப் பாக்க ஆரம்பிக்கிறேன். மத்தபடி, ஷா போல அடுத்த கட்டமெல்லாம் வேணும்னா நான் ரூட்டு கிட்ட போய்க்குவேன்' என்றான்.

(ரூட் என்பது பொதுவாக பாலியல் தொழிலாளிகளைக் குறிக்கும் எங்கள் வட்டாரச் சொல்லா, அல்லது எங்கள் ஊர் பிரபல பாலியல் தொழிலாளி பரமேஷ்வரி அக்காவின் செல்லப் பெயரா என்று எனக்குத் தெரியவில்லை.)

எனக்குத் தெரிந்து, ஷா அவனுடன் பழகும் எந்தப் பெண்ணிடமும் அந்த அளவு வரம்பு மீறியதில்லை. அவன் தோழிகளை ரூட்டுடன் ஒப்பிட்டு பேசியதும் ஷாக்கு குப்பென கோபம் வந்து விட்டது. கால் கால் என்று கத்த ஆரம்பித்து விட்டான். ஷாக்கு ஆரம்பத்திலிருந்தே அபியின் இந்தப் போக்கு பிடிக்காது. இப்போது எல்லாக் கோபத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி விட்டான்.

அபியை அவ்வளவு எளிதில் கோபப்படுத்த முடியாது. புன்னகை மாறாமல் 'கூல் மச்சி' என்று சொல்லி வந்தவன், 'காதலிக்க வைச்சு கழுத்தறுக்குற sadist நீ. என்னைப் பத்தி பேச வந்துட்ட' என்று ஷா சொன்னதும் பொருமையை இழந்து விட்டான்.

அவனும் பதிலுக்கு விளாச ஆரம்பித்து விட்டான். இங்கு எழுத முடியாத அளவு காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டார்கள். அடித்துக் கொள்வார்களோ என்று பயம் வந்து விட்டது எனக்கு. 'பணக்காரத் திமிருல நாளுக்கு ஒரு புள்ள கூட சுத்துற' என்ற ரீதியில் அபி ஏதோ சொன்னதும், கோபம் தாங்காமல் பீர் பாட்டில்களை உடைத்து விட்டு மறுவார்த்தை பேசாமல் வேகமாகக் கிளம்பி விட்டான். ஓவர் மப்பில் பைக்கை ஏதாவது லாரியில் விட்டு விடுவானோ என்ற பயத்தில், அபியிடம் கை காட்டிவிட்டு ஷாவைக் கொண்டு போய் வீட்டில் விட்டு வந்தேன்.

அபியை சேடிஸ்ட் என்ற வார்த்தையும், ஷாவை பணக்காரத் திமிர் என்ற வார்த்தையும் அதிகம் காயப்படுத்தி விட்டன. இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் பேசிக் கொள்வதில்லை. நானும் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதில்லை. நான் அவர்களை சந்திப்பதும் வெகுவாகக் குறைந்து விட்டது. அவர்கள் பிரிந்திருக்காவிட்டால் ஷாவும் என் ஆள் கேட்டியைக் காதலித்திருக்க மாட்டான். நானும் வலைப்பூ எழுத வந்திருக்க மாட்டேன்.

ஷா எத்தனையோ பெண்களிடம் வரம்பு மீறியிருந்தாலும் 'இது காதல் அல்ல' என்று ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லி விடுவான். ஆனால் அபி எந்தப் பெண்ணின் ஆடை நுனியைக் கூட இதுவரைத் தொட்டதில்லை என்றாலும், அவன் பார்க்கும் பார்வையும், புன்னகையையும் எந்தப் பெண்ணும் காதல் என்று அர்த்தம் செய்து கொள்ளும்படி தான் இருக்கும்.

இருவரில் யார் மீது அதிகம் தவறோ, அவனை சமாதானப்படுத்தி மற்றவனுடன் பேச வைக்க முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் யார் மீது அதிகம் தவறென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.

இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket