நைஜீரியா ராகவனுக்கு ஒரு பகிரங்க உதவி

Tuesday 31 March, 2009

முன் குறிப்பு: இது ஒரு சோதனைப் பதிவு. என்ன சோதனை என்று கண்டுபிடிப்பவர்களுக்கு, என் வசதிக்கு பொற்கிழியோ, கேப்பைக் களியோ தர முடியாவிட்டாலும், இதயத்தில் இடம் நிச்சயம் உண்டு.

என்ன பதிவிடுவது என்று மண்டை காய்ந்து புலம்பியிருந்த நன்பர் ராகவனுக்கு என்னால் இயன்ற சில டிப்ஸ்.

1) அரசியல் பதிவிடுவதற்க்கு நீங்கள் புலம்புமளவு, உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நகைச்சுவையாக எழுத விரும்பினால், நமது அரசியல்வாதிகளின் சென்ற மாத அறிக்கையையும், இந்த மாத அறிக்கையையும் அட்சரம் பிசகாமல் பிரசுரித்து விட்டு ஒரு புன்னகையை(ஸ்மைலி) மட்டும் இணைத்து விடுங்கள். 'அது போன மாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்' என்பதைத் தலைப்பாகவோ, இறுதியில் பன்ச்சாகவோ வைத்துக் கொள்ளலாம்.

சீரியசாக பதிவிட விரும்பினால், அதே அறிக்கைகளில் :-)க்கு பதில், 'மக்கள் என்ன மண்னாங்கட்டியா?' போன்ற நாலு வசவுகளை இனைத்துக் கொள்ளுங்கள். 'டேய்.. ங்கோ**** பசங்களா' போன்ற வார்த்தைகள் இனைத்திருந்தால் கூடுதல் நலம். அதே வார்த்தையைத் தலைப்பில் சேர்க்கும் தில் உங்களுக்கு இருந்தால், மிகக் கூடுதல் நலம். சூடான இடுகையில் இடம் பிடித்து விடலாம்.

2) 'சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டா அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம்' என்று காத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதெப்படி அவர்களாகக் காணாமல் போவார்கள். நாம் தான் ஆவன செய்து, அவர்களை விரட்டி விட்டு 'நண்பா! எங்கே நீ?' என்று பதிவிட வேண்டும்.

3) கவிதை எழுதுவது சப்ப மேட்டர். நீங்கள் கவிதையென்றால் காத தூரம் ஓடுவேன் என்று குறிப்பிட்டுள்ளதால், அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

4) ஏதாவது ஆப்பிரிக்க, அண்டார்டிக்க கொலை ஸாரி கலைப் படங்களை டிவிடியில் பார்த்து விட்டு திரை விமர்சனம் எழுதுங்கள். முழுப்படமும் பார்த்து மண்டை காய வேண்டிய அவசியமில்லை. Fast forward செய்து ஓட விட்டு, அரை மணிக்கொரு முறை பாஸ் செய்து, சப் டைட்டிலில் என்ன வசனம் வருகிறதோ அதைக் குறிப்பிட்டு 'அங்கன தான் நிக்காரு டைரடக்கரு' என்ற ரீதியில் எழுதலாம்

தமிழ் படமென்றால் ட்ரைலரோ, போஸ்டரோ மட்டும் பார்த்தால் போதும். அதில் எல்லாப் பதிவர்களாலும் சிலாகிக்கப்படும் ஒரு வி.ஐ.பியைப் பற்றி திட்டி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளலாம். உதாரணமாக, 'காதல் படமென்றால் ரொமாண்டிக்காகத் தான் இசையமைக்க வேண்டுமென ஏ.ஆர்.ரஹ்மானுக்கு யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்' என்று எழுதினால், ரஹ்மானை விட நீங்கள் புத்திசாலி என்று படிப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

4) சரக்குள்ள பதிவு தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பத்தால், 'சரக்குள்ள பதிவு' என்று தலைப்பிட்டு, உள்ளே பதிவில் கீழ்கண்ட சரக்குகளின் படங்களை வெளியிடலாம்.
















5) 'பார்ப்பீனியம் என்றால் என்ன?' என்று தலைப்பிட்டு, பதிவில் 'என்ன? எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் உங்களைக் கேட்கிறேன். தயவுசெய்து யாராவது விளக்குங்கள்' என்று பதிவிட்டுப் பாருங்கள்.

பிறகு புற்றீசல் போல, இரண்டு க்ரூப்பிலிருந்தும் வரும் கருத்துரைகளுக்கு 'ஹேய்.. நோ.. நோ பேட் வேர்ட்ஸ்', 'மம்மி பாவம்', 'டாடியும் பாவம்', 'மீ? ஐ ஆம் ஈட்டிங் ஒன்லி ஃபுட்ஸ்', 'டோட்டல் ஃபேமிலி டேமேஜ்', 'மீ அவா நோ' போன்ற பதில்களை முதலில் வரிசைக்கிரகமாகவும், பின்பு ரேண்டமாகவும் போட்டு வாருங்கள். நிச்சயம் எல்லா கருத்துரைகளுக்கும் பொருந்தும் அளவு பதில் சொல்லியிருப்பீர்கள்.

6) ஏதாவது பேட்டி வெளியிடலாம். 'ரஜினிகாந்த் நைஜீரியா வரட்டும். அவரைப் பேட்டியெடுத்துப் பதிவிடுகிறேன்' என்றெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சென்ற பேட்டியில் பேசியதையே திரும்பத் திரும்ப வேறு வார்த்தைகளால் பேசிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் பேட்டியை விட, அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி வலம் வரும் யாராவது ஒருவரின் பேட்டி சுவாரசியமாக இருக்கும். (பிரபலங்களும் பாவம் தான். ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தால் ஒரே பதிலை தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.)

திநகர் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்து வயது மதிக்கத் தக்க சின்னப் பெண் சொன்ன கதை இருக்கிறதே! அந்தக் அழகான களையான குட்டி கருப்பு முகமும், அதற்கு மிகப் பொருத்தமான பாப் கட் சிகையும், அவள் அழகைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதும் சட்டையைக் கடித்துக் கொண்டே வெட்கத்துடன் சிரித்த சிரிப்பும், 'உங்க அப்பா எங்க?' என்ற கேள்விக்கு குலை நடுங்க வைக்கும் அந்தக் கதையை, இரும்புக் கம்பத்தைக் கட்டிக் கொண்டே புன்னகையும் வெட்கமும் மாறாமல் சொன்ன விதமும் எந்தத் திரைப் படத்திலும் இதுவரை வராதது.

கற்பனை வறட்சியால் நமது கலாச்சாரத்துக்கு ஒத்தே வராத ஆங்கில, ஜப்பானிய திரைப்படங்களின் கதைகளை உருவும் இயக்குனர்களும், அழகான மலையாள திரைப்படங்களில் மசாலா சேர்க்கிறேன் என்ற பெயரில் கேவலப்படுத்தி உயிரை வாங்கும் இயக்குனர்களும், காதைக் கிழிக்கும் அட்டர் ஃப்ளாப்பான தெலுங்குப் படங்களை மொழிபெயர்த்து நம் முழியைப் பெயர்க்கும் இயக்குனர்களும் மேற்கூறிய யோசனையைப் பின்பற்றலாம்.

டிவிடி வாங்க ஆகும் 25 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஐந்து ரூபாயும் கொஞ்சம் புன்னகையும் போதும்.

ஐயோ அயோடின் உப்பு அல்லது தற்கொலை செய்து கொள்வது எப்படி?

1) அயோடின் கலந்த உப்பு: மனித உடலுக்கு அயோடின் தேவைப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உப்பில் உள்ள அயோடின் என்ற வேதியல் பொருள் அல்ல. இந்திய அரசாங்கம் டாட்டா உப்பை விளம்பரப் படுத்துவது முழுக்க முழுக்க தனி மனித அரசியல்.

நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.

மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

2) நான் ஸ்டிக் தவா - 100% கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது. தோசை ஒட்டாமல் வருவதற்காக இதில் உபயோகப் படுத்தப்படும் கெமிக்கல் கோட்டிங்கை தினமும் தோசையுடன் சுரண்டி சுரண்டி சாப்பிடுவதால் விரைவில் கேன்சர் வரும்.

கேன்சருக்கு சில டிப்ஸ்: ஆரஞ்சு சாறு தொடர்ந்து சாப்பிட்டு வர தொண்டையில் கேன்சர் மறையும் வாய்ப்பு இருக்கிறது. உணவுக்குப் பதில் திராட்சை (அ) திராட்சை சாறு மட்டுமே சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கத்தியின்றி ரத்தமின்றி மற்ற இடங்களிலுள்ள கேன்சரும் கண்டிப்பாக மறையும்.

3) டீ - அளவோடு அருந்தும் வரை பிரச்சனை இல்லை. அதிகமாக தேநீர் அருந்துவதால் சாதாரன வயிற்றுப் போக்கு முதல் பலப் பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. கீழே எறிய வேண்டிய வஸ்துவில் நிறமும், துவர்ப்பும் சேர்த்து 200 ரூபாய் கொடுத்து பருகி வருகிறோம்.
சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் இடையே கேட் போன்ற ஒரு வால்வ் உள்ளது. வழக்கமாக நாம் உண்ணும் உணவு சிறுகுடலில் ரசமாகி அதன் சக்திகள் உறிஞ்சப்படும் வரை, அந்த வால்வ் திறக்காது. தேநீர் அந்த வால்வை வலுவிலக்க செய்து விடும். சக்திகளும் உறிஞ்சப் படாமல் வெளியேற்றப் படும்.

வெள்ளையர் காலத்தில் நமக்கு அறிமுகப் படுத்தப் பட்ட தேநீர் முதல் தரமானது(ஒரு மாதம் இலவசம் என்ற டகால்டி வேலை செய்து தான் அதை நமக்கு விற்றிருக்கிறார்கள்). இப்போது இரண்டாம், மூன்றாம் தரமும் போய் டஸ்ட் டீயைத் தான் நாம் பருகி வருகிறோம்(இந்த லட்சனத்தில் சூப்பர் டஸ்ட் டீ என்ற கொடுமை வேறு)

அவர்கள் சும்மா இருந்தாலும் மக்கள் சும்மா இருக்க விடாமல், தேனீரில் ரிங் ரிங்காக வர வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவாக, இப்போது அதிகம் நிறத்தையும் சேர்த்து வருகின்றனர். இதனால் லிவர்(liver) சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.

சில டிப்ஸ்: இஞ்சி சிறு குடல் உறிஞ்சிகளை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளும்.

நுரையீரலுக்கு அடுத்த பெரிய உள்ளுருப்பான, லிவர் பிரச்சினைகள் குணமாக மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளில் நான்கைந்தை தினமும் மென்று துப்பலாம்.

வயிற்றுப்போக்குக்கு ஒரு டம்ளர் நிறைய ஆரஞ்சு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு சொட்டாக அடி நாக்கில் விட்டு ஐந்து நொடிகளுக்குப் பிறகு உமிழ்நீருடன் விழுங்குங்கள். வாந்தியும், வயிற்றுப்போக்கும் நிச்சயம் நிற்கும்.

இதில் மருந்து ஆரஞ்சு சாறு அல்ல. உங்கள் உமிழ்நீர்(saliva) தான். ஜீரண மண்டலத்துடுக்கு, உமிழ்நீரைப் போன்ற அற்புதமான மருந்து வேறு கிடையாது. (ஒரு முத்தத்தில் 0.7 கிராம் புரோட்டீன், 0.45 கிராம் கொழுப்பு, 0.19 கிராம் வேதியல் பொருள் உள்ளது. 0.50 வகையான பேக்டீரியாக்கள் சாகும்(இதனால் தான் கமல் ஹாசன் இவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறாரோ?))

இவ்வளவு மெனக்கெட முடியாதவர்கள் காலம்காலமாக சொல்லப் படும் ஓமத்திரவம் தேன் கலவையை சாப்பிடலாம்.

பதிவின் நீளம் கருதி, இப்போதைக்கு இவ்வளவு தான் மக்களே! இது தவிர வேறு ஏதாவது நோய்களுக்கு விளக்கம் கேட்க விரும்பினால் கேட்கலாம். எனக்குத் தெரிந்தால் சொல்கிறேன். மூலம் போன்ற சொல்ல வெட்கப்படும் நோய்களைப் பற்றி அனானியாகவாவது வந்து கேளுங்கள். விளக்கக் காத்திருக்கிறேன். தனி மடலில் தொடர்பு கொள்ள sombery@gmail.com.

நான் இதுவரை 18+ எதுவும் எழுதியதில்லை. இனி எழுதப் போவதும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் நானே 18- தான்(அனானியா இருக்குறதுல என்னா ஒரு சௌகரியம்). தயவு செய்து 18+ கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: நேற்று என்னுடைய 18+ பதிவு சும்மா ஜாலிக்காக ஏப்ரல் ஃபூல் பண்ணுவதற்காக இட்டது. அது ஆயிரக்கணக்கான ஹிட்ஸ் மற்றும் சூடான இடுகையில் இடம் பெற்றது மனதை சந்தோஷப் படுத்துவது போல் தெரிந்தாலும், ஆழ் மனதை அதாவது sub conscious mindடை(தோடா! மேஜர் சுந்தர ராஜன்னு நினைப்பு) வெட்கமும் வேதனையும் அடைய செய்து விட்டது.

வழக்கமாக சரக்கு வைத்துக் கொண்டே மொக்கை போடும் ஒரு பதிவர் அதிசயமாக நேற்று ஒரு பயனுள்ள பதிவிட்டுருந்தார். அதை புறந்தள்ளி விட்டு என் பதிவு சூடான இடுகையில் இடம் பிடித்தது, மேலும் வருத்தி விட்டது.

வழக்கமாக இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவிடவே சோம்பேறித்தனப் படும் நான், இந்தக் குற்ற உணர்ச்சியின் விளைவாகவே, இரவோடு இரவாக இதைத் தட்டச்சியிருக்கிறேன். தூக்க மப்பில் தவறாக ஏதாவது தட்டச்ச வாய்ப்பிருப்பதால், காலையில் எழுந்ததும் ஒரு முறை சரிபார்த்து விட்டு பதிவேற்றம் செய்கிறேன். குட் நைட் மக்களே!

உஷார்.. மக்களே உஷார்..(18+ மட்டுமே)

Monday 30 March, 2009

முன் குறிப்பு: நீங்கள் 18 வயதிற்குட்பட்டவரா? கடைசி செய்தி உங்களுக்கானதல்ல. முதல் இரண்டு விஷயங்களை மட்டும் படித்து விட்டு எஸ் ஆகி விடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்தை ஒழித்து விடுவோம் - பா.. காமெடி ஸாரி சூளுரை


கொசுறு காமெடி ஸாரி செய்தி: வருன் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
**********

சிரிக்க மட்டும்

விஜய் தன் மகனிடம்: தம்பி! நீ ஒழுங்கா சாப்பிட்டா, உன்னை வில்லு படத்துக்குக் கூட்டிட்டு போவேன்.
மனைவி சங்கீதா: பெத்த புள்ளைய கொல்லப் பாக்குறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?

விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், மகள், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்.

**********-----------------**********
உஷார்.. மக்களே உஷார்..

உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று கடந்த ஒரு வாரமாக பதிவர்கள் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது விடைபெறுகிறேன் பதிவர்களே என்று பதிவிட்டால், 'அண்ணே! போவாதீங்கண்ணே! உங்களை விட்டா எங்களுக்கு யாருண்ண்ணே இருக்கா' என்று ஒப்பாரி வைக்காமல், 'இத இத இதத் தான் எதிர்பார்தோம்.(ஒழிஞ்சதுடா சனி!)' என்று பின்னூட்டவும்.

இதற்குப் பின் அவர் அலுவலகம் கிளம்பும் முன் வீட்டிலிருந்து கூட யாருக்கும் டாட்டா சொல்லி விடைபெற மாட்டார்.

**********

18+ மட்டுமே

நீங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவரா?










தேர்தல் நெருங்குகிறது. தயவு செய்து வாக்களியுங்கள்!

ரூம் போட்டு யோசித்ததில் எனக்கு சிக்கிய யோசனை. முந்திய நாளே ஏமாற்றி விட்டு அட்வான்ஸ் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் சொல்வது. (ஹை.. வொர்க் அவுட் ஆயிடிச்சி.. வொர்க் அவுட் ஆயிடிச்சி..)

(வலம்புரி ஜான் ஸ்டைலில் படிக்கவும்) நன்பர்களே! இந்த மாதிரி அரசியல்வாதிகளும், நடிகர்களும் இருக்கும் வரை நாளை மட்டுமல்ல; வருடத்தின் எல்லா நாட்களுமே முட்டாள் தினம் தான்.

(இதை சோம்பேறி ஸ்டைலில் படிக்கவும்)அட்வான்ஸ் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் மக்களே!

தேர்தல் 2009 கூட்டணி காமெடி

Wednesday 25 March, 2009

தே.தி.மு. தனித்துப் போட்டி

---------**************---------

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க திருமா சூளுரை
(தேர்தல் அறிவிப்புக்கு முன்)
---------**************---------

காங்கிரசிஸில் திருமா
(தேர்தல் அறிவிப்புக்குப் பின்)
---------**************---------

திருமா தேர்தலுக்குப் பின்


---------**************---------

திருமாவிற்கு ராமதாஸின் .தி.மு. அழைப்பு
---------**************---------

.தி.மு.கவில் பா..(தேர்தலுக்குப் முன்)

(இதில் சுறாமீன் யார் என்பது உங்கள் அரசியல் நிலைப்பாடைப் பொருத்தது.)
---------**************---------

.தி.மு.கவில் பா..(தேர்தலுக்குப் பின்)
(இதில் சந்தேகமில்லாமல் மீன் மருத்துவர் ஐயா தான்.)
---------**************---------

எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும்
ஊழல் பெருச்சாளிகள் என்ன சாப்பிடும்? மக்களின் வரிப்பணத்தை தான்.
---------**************---------

நிராகரிக்கப் பட்ட என் படைப்பு

Monday 23 March, 2009

இதுவே என் கடைசி படைப்பு. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக பாவிக்க நான் கௌதம புத்தனல்ல. மரணத்தை விட கொடியது நிராகரிப்பு என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்த ஒரு படைப்பிற்காக என்னை தயார் செய்து கொள்ள, எத்தனை புத்தகங்களை படித்திருப்பேன். எவ்வளவு நேரத்தைக் கொன்றிருப்பேன். இது குப்பையில் வீசப்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை.

தோல்வி தான் வெற்றியின் முதல் படி என்று யாரும் தயவுசெய்து அறிவுரைக்க முயலாதீர்கள். இது வரை தோல்வி எனக்குப் பரிசளித்த படிகளில் ஏறி எவெரெஸ்ட் உச்சியையே அடைந்திருக்கலாம். இது என் முதல் தோல்வி அல்ல. ஆனால் இதுவே என் கடைசி தோல்வியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாலேயே இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன். என்னை வாழ்வின் விளிம்பிற்கே கொண்டு சென்ற அந்தப் படைப்பை இப்பதிவின் இறுதியில் காணலாம்.

பார்த்தீர்களா? இதில் என்ன குறை?

என் முதல் படைப்பு சிறிய மாற்றத்துடன், நல்ல வரவேற்ப்பைப் பெற்றது என்றாலும், அது எனது என்று யாரிடமும் சொல்லிக் கொள்ள முடிய வில்லை. வேறு ஒருவர் என் படைப்புக்காக பாராட்டப் பட்டதைப் பார்த்த போது கூட மௌனமாக மனதிற்குள்ளே மருக தான் முடிந்தது. பாராட்டப் பட்டது என் தாயாக இருந்தபோதும் கூட.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, ஒரு கொசுவர்த்தி சுருளை கம்பியில் செருகி, இரண்டு கைகளாலும் வலப்புறமாக சுற்றவும். போதும். இப்போது ஒரு வாரம் பின்னோக்கி வந்து விட்டீர்கள்.

உருளைக் கிழங்கு சூப் செய்வது அவ்வளவு எளிது என்று சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன், அந்த புத்தகத்தை மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால்.. தேவையான பொருட்கள் நான்கு தான். வெங்காயம், உருளைக் கிழங்கு மற்ற இரண்டும் மறந்து விட்டது. இப்போதல்ல அப்போதே.. குறிப்பு இருந்த புத்தகத்தையும் எங்கே வைத்தேன் என்று மறந்து விட்டது. சூப் செய்வதில் தானே முன் அனுபவம் இல்லை. சாப்பிடுவதில் இருக்கிறதே என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் தொடர்ந்தேன்.

வெங்காயத்தையும் உருளைக் கிழங்கையும் மிக்ஸியில் மையாக அரைத்து பாதி கிணறு தாண்டியாகி விட்டது. மீதி கிணற்றை பாராசூட் உதவியுடனாவது தாண்டி விட வேண்டும் என்ற வெறியுடன், குத்துமதிப்பாக சமையலறையில் இருந்த மசாலா தூள், மிளகுத் தூள், சிக்கன் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், காலி ப்ளவர் படம் போட்ட பெயர் ஞாபகம் இல்லாத ஒரு தூள், க்லோப் ஜாமுன் படம் போட்ட தூள் எல்லாம் கலந்தாகி விட்டது. தெய்வாதினமாக, பாத்திரம் விளக்க உபயோகப் படுத்தும் சபீனா தூளை வானலியில் கொட்டும் முன் பார்த்து விட்டேன். கொஞ்சம் ஓவராத்தான் போறமோ என்று தோன்றியதால், அதோடு நிறுத்தி விட்டு சுவை பார்த்தேன்.

மனதைத் தொட்டு சொல்கிறேன். எனக்கு ஜென்ம விரோதி என்று யாரும் இருந்தால், அவர்களுக்கு இதைத் தான் கொடுத்திருப்பேன். வாயிலேயே வைக்க முடிய வில்லை. இருந்தாலும் முதல் படைப்பல்லவா? கீழே கொட்ட மனமில்லாமல், யாருக்கும் தெரியாமல் தோசை மாவுடன் அதைக் கலந்து விட்டேன்.

அந்த தோசையைப் பாராட்டாதவர்கள் யாருமே இல்லை எனலாம். நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து என் அப்பா 'கலக்கிட்டடி. இந்த மாதிரி ஒரு தோசையை நான் சாப்பிட்டதே இல்ல' என்று என் அம்மாவைப் பாராட்டிய போது கூட வாய் பொத்தி அழ முடிந்ததே தவிர, அது என் படைப்பு என்று வாய் திறந்து சொல்ல முடிய வில்லை.

அந்த அனுபவம் கொடுத்த துணிச்சலில் தான், நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த முட்டை தோசையை பலரறிய வார்க்கத் துணிந்தேன். என் சொந்த வீட்டிலேயே அது நிராகரிக்கப் பட்ட கொடுமை ஒரு புறம் இருக்க, அக்கம்பக்கத்தார் கையில் பாத்திரத்துடன் என்னை பார்த்ததும், அவர்கள் வீட்டு கதவில் 'நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நபர், நீங்கள் கிளம்பும் வரை தொடர்பு எல்லைக்குள் வரவே மாட்டார்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன், அவர்கள் மேலுள்ள பாசத்தைக் காட்ட, அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசால் பொடியுடன் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுத்ததிலிருந்தே இப்படித் தான் ஓடி விடுகிறார்கள்.
முதல் பக்கம் மறுபக்கம்

ஓரத்தில் கொஞ்சம் சாப்பிடப் பட்டிருக்கிறதே என்று உங்களைப் போல தான் நானும் மகிழ்ச்சியடைந்தேன், சமையலறையில் செத்துக் கிடந்த அந்த எலியைப் பார்க்கும் வரை..

அன்றும் இன்றும்

Friday 20 March, 2009

முன் குறிப்பு(எச்சரிக்கை): இது முந்தைய நமீதா ஸ்பெஷல் பதிவின் தொடர்ச்சி அல்ல. 'அன்றைய சில்க் ஸ்மிதா, ஜெய மாலினியை இன்றைய நமீதா, நயன் தாராவுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட பதிவு' என்று எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.

'இந்தியா நிஜமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறதா' என்று என்னை சிந்திக்க வைத்த, 09.12.1990இல் வெளிவந்த கல்கி இதழில் இருந்து சில பக்கங்களும், என் கருத்தும்..

மாறியிருப்பது

1) வைகாசி பொறந்தாச்சு திரைப்பட விமர்சனம் - சி.ஆர்.கே.

கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு தலைப்பை முடிவு செய்து விட்டு, அதை நியாயப்படுத்த முயற்சி செய்வது வழக்கமாகி விட்டது. ஒரு மஞ்சள் நீராடல் பாடலில் 'வைகாசி பொறந்தாச்சு' என்கிற வரியை இடம் பெறச் செய்து, தலைப்பை நியாயப்படுத்த முயற்சி..

எத்தனை பேர் சூழ்ந்து கொண்டு, எத்தனை வகையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் புரட்டிப் புரட்டி எடுப்பது கதா நாயகனின் அடிப்படைத் தகுதி. ப்ளஸ் டூ மாணவனான நாயகனைத் தாக்க வருபவர்கள் உரமேறிப் போன முரட்டு ஆட்கள்!

இப்படி எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகி விடும் அந்த இளைஞனின் பார்வையில் MGR, ரஜினி, கமல் படப் போஸ்டர்கள் தென்பட, உடனே அத்திரைப்பட சண்டைக் காட்சிகள் அவன் மனக் கண்ணில்(ஏன் திரையிலும் தான்) தெரிய, அந்தந்த பாணியில் சண்டையிட, அந்த காட்சிகள் அவன் மனக்கண்ணில் தோன்ற போதிய அவகாசம் அளித்து அடிக்க வந்தவர்கள் காத்திருக்கிறார்கள்!

பெண்கள் கூட்டம் சூழக் கதா நாயகி அம்மன் கோயில் 'ஆத்தா.. ஆத்தா.." என்று பாடிக் கொண்டு ஆடுவது வெற்றிப் படங்களுக்கு மற்றும் ஒரு முக்கிய அம்சம்! உச்சகட்டக் காட்சியே அப்படியொரு நடனத்தைத் தொடந்து தான்.

சட்டம், போலிஸ் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அடியாட்களைக் கூப்பிட்டு, "அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு வா" என்று உத்தரவிடுவது தான் வில்லனுக்கு இலக்கணம். இப்படத்தின் வில்லனும் அதற்கு விலக்கு அல்ல.

முடிவில் அதர்மம் தோற்று, தர்மம் ஜெயிக்க வேண்டும். ஜெயித்து விடுகிறது. -- சி.ஆர்.கே.

இன்று: இப்போதுள்ள திரைப்படங்களில் ஒரே ஒரு மாற்றம். கதா நாயகி "ஆத்தா.. ஆத்தா" என்று ஆடாமல் "---- ----" என்று ஆடுகிறார்.

------------********************-------------

மாற்ற முடியாதது
1)

ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்?!
************

2)
சுண்டி இழுத்த விளம்பர உலகம்?!
***********

3) தராசு - நீங்கள் கேட்டவை

கேள்வி : 'தி.மு.க. கருணாநிதி குடும்பத்தாரின் புரொப்ரைட்டர் ஷிப் நிறுவனம் ஆகி விட்டது' என்று ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறாரே?
தராசு பதில் : அதாவது தேவலாம். அவர் சேந்திருக்கும் அ.தி.மு.க. ஜெ.யின் 'ஸோல் புரொப்ரைட்டர் ஷிப்' ஆச்சே!

No comments

------------********************-------------

மாற வேண்டியது

1)
ஆட்டோ சங்கரும் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருப்பார். மனு என்று நினைத்து கடிதத்தைப் படித்துப் பார்க்காமலேயே, முதல்வர் ராக்கெட் விட்டு விளையாடியிருப்பார்.
***********

2)
மாற வேண்டியது பெயர் மட்டும் அல்ல.

தீ - நான் கொஞ்சம் மென்டல்(நமீதா ஸ்பெஷல்)

Wednesday 18 March, 2009

உன்னிடம் இருப்பதை நீ உலகத்திற்கு காட்டு.. இந்த உலகம் உன்னை நேசிக்கும்.. - சொன்னவர் நமீதா.

நமீதா சொன்னதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். சினிமா நடிகை ருச்சி தேவியாக வரும் நமீதா, எவ்வளவு லாங் ஷாட்டில் காட்டப் பட்டாலும் க்ளோஸ் அப்பில் தான் தெரிகிறார். அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறார்.
முதல் முறை சந்திக்கும் போது, நமீதா சுந்தர்.சி நெஞ்சில் விரல்களை மடக்கி குத்துகிறார். பிறகு பிறாண்டுகிறார். பிறகு கடித்து வைக்கிறார். பிறகே 'நீ நெஞ்சு தைரியம் பிடிச்சவன் தான்' என்று சொல்லி கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்.

'உங்களால் தான் அரசியலில் முன்னுக்கு வந்தேன்' என்று நமீதாவிடம் ஆளாளுக்கு வழியும் போது, 'ஒரு நடிகையால் எப்படி? நல்லா பூ சுத்துறாங்களே' என்று நினைத்தேன். மேற்படி காட்சியை பார்த்த பிறகு தான் புரிந்தது, எல்லா தொண்டர்களையும் இப்படி தேர்வு செய்திருப்பதால் தான், இந்த உப்புமா கட்சியில் இத்தனை பேர் அடித்து பிடித்து சேந்திருக்கிறார்கள் என்று..

ஒவ்வொரு முறையும் background blur effectடுடன், இடி மின்னல் வெட்ட, பயங்கரமான பிண்ணனி இசையுடன், ஸ்லோ மோஷனில் நடந்து வந்து சம்பவ இடத்தை அடையவே நாயகன் சுந்தர்.சிக்கு ஐந்து நிமிடம் ஆகிறது. இங்கே கூட பாருங்கள். நீங்கள் ஒரு நிமிடம் நமீதா பற்றி படித்து விட்டு, நான்கு நிமிடங்கள் அவர் புகைப் படத்தைப் பார்த்து முடித்த பிறகு, சாவகாசமாக ஐந்து நிமிடம் கழித்து நான்காவது பாராவில் தான் வந்து சேர்ந்திருக்கிறார்.

சூப்பர் மேனைக் கூட க்ரிப்டன் கிரக க்ரிஸ்டலால் சாவடித்து விடலாம். சுந்தர்.சியை எதனாலும் சாவடிக்க முடியாது போல. பொன்னம்பலம் அவர் உயரத்தில் இருக்கும் ஒரு சுத்தியலால், சுந்தர்.சியின் நெற்றிப் பொட்டிலேயே பொட்டென்று போட்டு சேற்றுக்குள் அமுக்கிவிட்டுப் போய் விடுகிறார். அவர் போனதும் சுந்தர்.சி அசால்டாக எழுந்து போய் தெருக் குழாயில் குளித்து விட்டு சாமியாக அவதாரமெடுக்கிறார்.

ஆனால் ஒரு கல்லால், ஒரே ஒரு அடி வாங்கிய அவர் குழந்தைகளும், மனைவியும் பொட்டென்று போய் சேர்ந்து விடுகிறார்கள். அது எந்த கிரகத்திலிருந்து கொண்டு வரப் பட்ட கல்லோ! நீதி மன்றத்திலும், சட்டக் கல்லூரி வளாகத்திலும், ஜாதிக் கலவரம் செய்பவர்கள் கையிலும் இந்த மாதிரிக் கல் கிடைக்காத வரை நலம்.

படத்தில் சுந்தர்.சி அடிக்கடி சொல்லும் பன்ச் வசனம் 'நான் கொஞ்சம் மென்டல்'. 'வந்து பாத்த நான் தான்டா மென்டல்' என்று திரையரங்கில் நான்கைந்து பேர் கத்துகிறார்கள்.(மொத்தம் இருந்ததே அவ்வளவு பேர் தான். மழைக்கு ஒதுங்கினது குத்தமாய்யா!)

அமைதிப் படை, நந்தா, நான் கடவுள் என்று பல படங்களை பகடி செய்திருக்கிறார்கள். ஓரளவாவது அந்தப் படங்கள் அளவு நன்றாக எடுத்திருந்தால், தழுவல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் காப்பியடிக்கிறேன் என்ற பெயரில் காமெடி அல்லவா செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக, ஷாயாஜி ஷிண்டே JP என்பவரிடம் 'உனக்கு பதில் ஒரு நாய்க்கு கூட MLA சீட் கொடுப்பேன்' என்று சொல்கிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நாய் குறைப்பது போன்ற சத்தம் கேட்டு ஷிண்டே குனிந்து பார்த்தால், சுந்தர்.சி நாயைப் போலவே கைகள் இரண்டையும் முன்னால் வைத்துக் கொண்டு, ஷிண்டேயின் காலடியில் போய் குத்த வைத்து அமர்ந்திருக்கிறார். அமைதிப் படையை இதற்கு மேல் ஒருவரால் கேவலப்படுத்த முடியுமா? (முழு நீள பகடி வகை ஹாலிவுட் திரைப்படம் Epic movieயைப் பற்றி எனது இந்தப் பதிவில் காணலாம்.)

ஆனாலும், நிச்சயம் இது ஒரு வித்தியாசமான படம். வன்முறையில்லாத வன்முறை என்று 'Life is beautiful' திரைப்படத்தை சிலாகித்திருக்கும் ஹாலிவுட் பாலா இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் காமெடியில்லா காமெடி என்று பாராட்டியிருப்பார். காட்சிக்கு காட்சி தொண்டை வறள தண்ணீர் குடித்து, தண்ணீர் குடித்து சிரித்தோம்.

உதாரணமாக, புகை பிடிக்க மறுக்கும் ஒரு கல்லூரி மாணவனை சீனியர் மாணவர்கள், நான்கைந்து பேர் முன்னிலையில் நிர்வானப்படுத்தி சிகரெட்டால் சூடு வைத்து விடுகிறார்கள். கோபமாக அங்கு வரும் சுந்தர்.சி பேராசிரியர்கள், மாணவ மாணவியரின் பெற்றொர் உட்பட, மொத்த கல்லூரியையும் ஒன்று கூட்டி, அவர்கள் முன் அந்த மாணவனை மறுபடி நிர்வானப்படுத்தி 'பாருங்க! எப்படி சூடு வச்சிருக்காங்கனு' என்று கொந்தளிக்கிறார். அவனும் தலையிலடித்துக் கொள்ளாமல், F TVயில் மாடல் போஸ் கொடுக்கிறான்.

இதே படத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்து, விஜய.டி.ராஜேந்தர் இயக்கியிருந்தால், (வலை)உலக அளவில் பெரிதாகப் பேசப் பட்டிருக்கும். ஹாலிவுட்டில் இருந்திருக்க வேண்டிய இயக்குனர் கிச்சாவின் கெட்ட நேரமோ, நம் கெட்ட நேரமோ தெரியவில்லை, இங்கே தமிழ் நாட்டில் வந்து மாட்டிக் கொண்டார்.

இந்த மாதிரி மொக்கை படங்களுக்கு அரை மணிக்கொரு முறை விளம்பரம் செய்து கொண்டிருந்தால், சன் டிவியின் மீதுள்ள நம்பகத்தன்மை குறைந்து, நாளை அவர்கள் நிஜமாகவே நல்ல படத்தை விளம்பரப் படுத்தினாலும், நிராகரிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது.
*************************

நமீதாத்துவம்
வாழ்கையில் சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். உதாரணமாக நமீதா இவ்ளோ பெரிய ஆளானதுக்கு அவங்களோட சின்ன சின்ன ட்ரெஸ் தானே காரணம்.
************************

அறிவிப்பு : மேல் வலது மூலையில் 'தமிழகத்தைக் கலக்கும் காமெடி ஸ்டார் யாரு' என்ற வாக்கெடுப்பில் தங்கள் கருத்தைப் பதிய விரும்புபவர்கள் பதியலாம்.

ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்

Monday 16 March, 2009

அறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.

மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

இன்னும் சிலர், ஏற்கனவே நம்மிடம் கடன் அட்டை வாங்கிவிட்டு அவதி பட்டுக் கொண்டிருப்பவர்கள், நீதிக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள். கடன் வாங்க வைக்க, 'குறைவான வட்டி விகிதம், பெட்ரோல் பங்கில், விமான டிக்கெட்டில் தள்ளுபடி, முதல் மூன்று மாத தள்ளுபடி, விழாக் கால சிறப்பு சலுகை' என்று இஷ்டத்துக்கு அள்ளி விட்ட பொய்களுக்கெல்லாம் அப்போது மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

டார்கெட்டை ரீச் பண்ணவில்லை என்றால் மேனேஜர் திட்டும் திட்டை விட 'மரியாதையாக' எந்த வாடிக்கையாளரும் நமது ஃபேமிலியை டேமேஜ் செய்து விட முடியாது என்பதால், கைபேசியை மேனேஜரிடம் கொடுத்து 'ஸார். உங்க சொந்தக்காரங்க யாரோ பேசுறாங்க! ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா இருக்காங்க!' என்று அவனை மாட்டி விட்டு விட வேண்டியது தான். அவன் எழுதிக் கொடுத்து தானே பேசுகிறோம்.

அந்த ஒன்றிரண்டில் மிகச் சில வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு பற்றி தெரியாமல், அப்பிரானியாக லோன் ஷேங்ஷன் ஆனதும் தன்னிடம் பேசிய காலருக்கு, இனிப்புகள் அனுப்புவார்கள். .

இதுவரை பெண்கள் குரலையே கேட்டறியாமல் காய்ந்து கிடப்பவர்கள் ஏதோ சுஜாதா, சாண்டில்யனிடம் கேட்பது போல "உங்க நிஜ பேரு என்னங்க" என்று ஆரம்பித்து "நீங்க எங்க சம்பளம் எவ்ளோனு கேக்குறப்போ, நான் உங்க சைஸ் கேக்க கூடாதா?" என்பது வரை போவார்கள். எவ்வளவு வரம்பு மீறிப் போனாலும், இவர்களைத் திட்ட முடியாது. பேசும் தொனியில் சின்ன மாறுதல் தெரிந்தாலும் பக்கத்திலிருக்கும் கைகாட்டி மேனேஜரிடம் போட்டு கொடுத்து விடுவாள். அந்த கூதரை நாய்க்கு இந்த நாதாரி நாயே பரவாயில்லை என்பதால், அமைதியாக தொடர்பை துண்டித்து விட்டு, "சொல்லுங்க சார்.. நோட் பண்ணிக்கிறேன்" என்று தனியாகப் புலம்ப வேண்டியது தான்.

அழுகையே வந்தாலும் அடக்கிக் கொண்டு அடுத்த காலரிடம் "கங்ராஜுலேஷன்ஸ் சார்! உங்க பேரை கோல்டன் க்ரெடிட் கார்டுக்கு ஷார்ட் லிஸ்ட் பண்ணிருக்கோம்" என்று உற்சாகமாக சொல்ல வேண்டும்.

இந்த மாதிரி ஜொள்ளர்கள் சில சமயங்களில் இனிமையான குரலைக் கேட்டு ஏமாந்து 'நாம எப்பங்க மீட் பண்ணலாம்' என்று கேட்டு சொந்த செலவில் ஆப்பு வைத்துக் கொள்வார்கள். ஐஷ்வர்யா ராயை எதிர்பார்த்து வந்த அந்த அபிஷே(பே)க்கு நிலைமை, ராமதாஸிடம் மாட்டிக் கொண்ட கருனாநிதியை விட மோசமாக இருக்கும். பின்ன, கூட்டமாக ஐந்து அட்டு ஃபிகர்கள் போய் 'மாமா.. பிஸ்கோத்து' என்று நின்றால்?

சந்தித்து விட்ட கடனுக்கு ஒரு கார்னெட்டோவோ, பேல் பூரியோ வாங்கிக் கொடுத்துவிட்டு எஸ்ஸாகி விடலாம் என்றால், நம்ம மூளைக்கார பயபுள்ளைகள் நேரே Rain treeக்கோ, rain forestக்கோ கூட்டிப் போய் 'பஸ்ஸுக்கு காசில்ல. ஆத்தா வைய்யும். என்னை விட்டுடுங்க' என்று புலம்பும் வரை விடாமல் ஆப்பு அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆப்பு வாங்கிவன் சும்மா இருப்பானா? 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று தன் நண்பர்களிடம்(!) 'டேய்! ஒரு சூப்பர் ஃபிகர் நம்பர் இருக்கு வேணுமா?' என்று கோர்த்துவிடுவான்.

அடிப்படை ஊதியம் 3000 போக, நாம் பிடிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 150 ரூபாய் ஊக்கத் தொகை(incentive). இந்த ஊக்கத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்பதால், மாதா மாதம் கம்பெனித் தாவல்கள் சகஜமாக நடக்கும். இப்படி கம்பெனி மாறிய தோழிகள் மூலம் தொலைபேசி எண்கள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு rotationனில் வரும்.

ஏற்கனவே பேசி(திட்டு வாங்கி) விட்ட எண்களை டிக் செய்திருப்பார்கள். கவனக் குறைவாகவோ, வேண்டுமென்றோ மறந்திருந்தால், பேசிய எண்களுக்கே திரும்பப் பேச நேரலாம். சந்திரமுகியில் ரஜினிக்கும் சேர்த்து வடிவேலை மதன்பாப் அடிப்பாரே, அது போல நமக்கு முன்பே பேசியவர்களுக்கும் சேர்ந்து நாம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

அளவுக்கதிகமாக திட்டி விட்டால், அடுத்த சில நாட்களுக்கு 'அவர் நமது சொத்து'. மற்ற வங்கிகளில் பணியாற்றும் தோழிகளிடம் 'ஒரு கஸ்டமர் மாட்டினாருடி. ஆனா உங்க பேங்க் கார்ட் தான் வாங்குவாராம். நீ வேனா ட்ரை பண்ணிப் பாரேன்' என்று கோர்த்து விடப்படுவார். அவரே காலர் டோனாக ஏதாவது நல்ல பாடலை வைத்திருந்தால், 'நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்யா' என்றே முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு முறை ஒரு கஸ்டமர் என் அழைப்புக்காகவே காத்திருந்தது போல மிக உற்சாகமாக நான் கேட்ட பத்து கேள்விகளுக்கும் பதிலலித்தார். ஆனால் சுயதொழில் செய்யும் அவரிடம் இன்ஷூரன்ஸ் பாலிஸி எதுவும் இல்லை. அதனால் கடன் அட்டை தர முடியாது என்றதும் "இதை முதலிலேயே சொல்லித் தொலையுறது தானே" என்று காய் காய் என்று காய்ச்சி விட்டார்.

ஐயோ பாவம்.. அந்த ஐந்து நிமிடத்தில் அம்பானியாகி இருப்பார். என்னால் தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு! பேப்பர்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு அலைக் கழித்திருந்தால் தெரிந்திருக்கும். நல்லதுக்கு காலம் இல்லை என்று ஸ்வாமி பிரேமானந்தா சும்மாவா சொன்னார்..

அடுத்த கஸ்டமரிடம் உஷாராக முதலிலேயே 'பாலிஸி இருக்கா' என்று கேட்டது தான் தாமதம்..

"ஆமாங்க.. காலையில எழுந்ததும் பொண்டாட்டி கையால பெட் காப்பி சாப்பிடனும். பல்ல விளக்கிட்டு வேலைக்காரி எண்ணெய் தேச்சு விட, மாமியார் தண்ணி மொண்டு ஊத்த, மச்சினிச்சி முதுகு தேச்சி விட ஜில்லுனு ஒரு குளியல். மல்லிப்பூ மாதிரி 4 இட்லி சாப்பிட்டுட்டு, மச்சினியை காலேஜ்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிட்டு அவ கூட மார்னிங் ஷோ சினிமாக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்து மதிய சாப்பாடு ஒரு கட்டு கட்டிட்டு, ஜம்முனு ஒரு தூக்கம் போடனும்.

சாயங்காலம் என் ஆளு மறுபடி ஒரு பெட் காப்பியுடன் என்னை எழுப்பினதும், 'பாருடா என் ஃபிகரை'னு ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் கடியைக் கெளப்புற மாதிரி அவ தோள்ல கை போட்டுகிட்டு ஒரு வாக்கிங். எப்படியும் தோட்டம், தொரவுனு இருக்கிற பணக்காரப்புள்ளையா பாத்து தான் ப்ராக்கெட் போட்டிருப்பேன், வாக்கிங் நேரா அவுங்க தோட்டத்தில தான் முடியும். அங்க அவ கூட கொஞ்ச நேரம் குஜாலா இருந்துட்டு, வீட்டுக்கு வந்து வேலைக்காரியை கால் அமுக்கிவிட சொல்லிட்டு தூங்கிடனும். இது தாங்க என் பாலிசி".

நான் LIC மாதிரி ஏதாவது பாலிசி இருக்கானு கேட்டேன் ஸார்..

கொஞ்சம் டைம் குடுங்க.. எடுத்துருவோம்..

பரவால்லை ஸார்.. நீங்க சுயதொழில் பண்றீங்களா. இல்லை தனியார் நிறுவனத்தில வேலை பாக்கறீங்களா?

இவ்ளோ நேரம் உங்ககிட்ட பேசினதில இருந்தே நான் வெட்டிப்பய தான்னு தெரியலியாங்க? இனிமேலும் வேலைக்குப் போற மாதிரி யோசனை இல்லைங்க..

சாரி ஸார்.. உங்களுக்கு..

கட் பண்ணிடாதீங்க.. உங்களுக்கு தோட்டம், தொரவு ஏதாவது இருக்கா?

இல்ல ஸார்.. நாங்க குடும்பத்தோட மைலாப்பூர் கோயில் வாசல்ல பிச்சை எடுக்குறோம்.

பரவால்லைங்க.. உங்களுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?

பொறந்ததும் சொல்லி அனுப்புறேன் ஸார்.. உங்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்கு நன்றி..

பின் குறிப்பு : இந்தப் படைப்பில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக(இரண்டு முறை) உபயோகப் படுத்தப் பட்டிருப்பதால், இது சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைத்திருக்கிறது; ஆனாலும் இது பின் நவீனத்துவ எழுத்தாகாது - காத்தவராயன்(நன்றி - ஜ்யோவ்ராம் சுந்தர்)

முக்கிய பின் குறிப்பு: தயவு செய்து யாரும் பின்னூட்டத்தில், பின்குறிப்புக்கு அர்த்தம் கேட்டு விடாதீர்கள். எனக்கும் தெரியாது. பதிவை எப்படி முடிப்பது என்று தெரியாததால் இப்படி ஒரு பின் குறிப்புடன் முடித்திருக்கிறேன்.

சுண்டி இழுத்த விளம்பரங்கள்

Friday 13 March, 2009

முன்குறிப்பு: லக்கிலுக் aka யுவகிருஷ்னாவின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தக விமர்சனத்தை காண இங்கே க்ளிக்கினால், இங்கேயே தான் இருப்பீர்கள் என்பதால் தொடர்ந்து படிக்கவும்.

நேற்று எந்திரத்தனமாக தொலைக் காட்சியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது, இரு சகோதரிகள் ஆங்கிலப் பட பாணியில் சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்த்ததும் என் அப்பா 'அதை வை. ஏதோ இங்லிஷ் படம் போடுறான்' என்றார்.

இல்லப்பா.. அது பஜாஜ் DTS SI பைக் விளம்பரம்..
அட முட்டாப் பயபுள்ளைகளா.. பைக்குக்கா இப்படி அடிச்சுக்குதுங்க..
பைக்ல வர பையனுக்கும் சேத்து தான்பா..
அப்ப சரி.. அடிச்சுக்க வேண்டியது தான்.

எங்க ஊர் லோக்கல் நகைக் கடை விளம்பரம் கோலிவுட் தரத்துக்கு(தீபா வெங்கட் வருகிறார்) இருக்கும் போது, இண்டர்னேஷனல் பிராண்ட் ஹாலிவுட் தரத்தில் இருப்பதில் சந்தேகமே இல்லை. சில சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட, விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

திரைப்படத்தில் கதாநாயகர்கள் முக்கால் மணி நேரம் மூச்சு விடாமல் அறிவுரைக்கும் போது ஏற்படாத உணர்வை, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள் வேலியின் ஊடே இந்திய சிறுவனும், பாக்கிஸ்தானிய சிறுவனும் கால் பந்து விளையாடும் ஏர்டெல் விளம்பரம் ஏற்படுத்தி விடுகிறது. இப்போதுள்ள ஏர்டெல் விளம்பரமும் சான்ஸே இல்லை. பிச்சு உதறியிருக்கிறார்கள்.

சிறு வயதில் நான் மிகவும் ரசித்து சிரித்த ஒரு போலோ விளம்பரம்(என்று நினைக்கிறேன்). ஹிந்தி டப்பிங் தான்.

புகை வண்டியில் ஒரு அம்மாவும், ஏழு வயது பையனும் பயனம் செய்கிறார்கள்.
(1940 திரைப்பட பாணியில்)
அம்மா: (கொஞ்சலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..
சிறுவன்: வேண்டாம்..

அம்மா: (அதட்டலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..
சிறுவன்: வேண்டாம்..

அம்மா: (கோபமாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..

(ரயில் குகைக்குள் செல்கிறது.. இருட்டில், குழப்பத்தில், கூட வரும் ஒரு 40 வயது மதிக்கத் தக்க சக பயணி ஒருவருக்கு ஸ்வெட்டரை மாட்டி விடுகிறார்.)

சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..

சிறிது நேரம் கழித்து..

அம்மா: கண்ணா.. பாத்ரூம் போ..
(என்று சொல்லிவிட்டு பையனின் பேண்டைக் கழட்ட வரும் போது மீண்டும் குகை. இருட்டு)
சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..

ஹஹா.. ஹா.. ஹையோ.. ஹஹஹா.. நீங்க என்னங்க சிரிக்கவே மாட்டேங்கறீங்க.. ஸ்வெட்டருடன் அந்த பயணி பரிதாபமாக பார்க்கும் போது அம்மா டக்கென ஜன்னல் பக்கம் திரும்பி கொடுக்கும் ரீயாக்ஷனையும், "கண்ணா.. பாத்ரூம் போ" என்று சொல்லும் போது அந்த குட்டிப் பையன் போலோ சுவைத்துக் கொண்டே, குகையைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பானே அதையும் பார்த்திருந்தால் நிச்சயம் சிரித்திருப்பீர்கள்.

சூரியன் FMமில் இன்று காலை நான் கேட்ட விளம்பரம்:

Mr. சந்திரன் நீங்க ஒரு பொறாமை பிடிச்சவரு.. என்னைப் பத்தி மேனேஜர் கிட்ட பல தடவ புகார் பண்ணிருக்கீங்க. ஆனாலும் உங்க நண்பராகி, உங்க கூட பைக்ல வர விரும்புறேன்.
ஆமா Mr.இந்திரன். நீங்க ஒரு வெக்கம் கெட்டவரு. என் promotionனை ரெண்டு தடவை தடுத்திருக்கீங்க.. ஆனாலும் உங்க நண்பராக விரும்புறேன். இன்னிக்கு நீங்க என் பைக்ல வாங்க. நாளைக்கு நான் உங்க பைக்ல வர்றேன்.

கருத்து: பெட்ரோலை சேமியுங்கள்!

இதை சிரிக்காமல் சொல்வதற்கு எத்தனை டேக் வாங்கினார்களோ?

சென்ற வருடங்களில், ஹலோ பன்பலை என்று நினைக்கிறேன்.. அதில் இரவு 12 மணியளவில் நாய், வங்கி, செருப்பு ஏன் விளம்பரத்துகே விளம்பரம் போடுவார்கள். இப்பொழுதும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. வார்த்தைகள் முழுதும் சரியாக நினைவில் இல்லை.

முதல்வர் : சே! நைட் ட்யூட்டி முடிஞ்சு வரப்போ ரொம்ப போர் அடிக்குதுப்பா!
இரண்டாமவர்: ஏம்பா? உங்க ஏரியால நாயே கிடையாதா?
முதல்வர் : என்னது நாயா!!! அப்படின்னா என்ன?
இரண்டாமவர்: ஆமா. நாயி. நம்ம நைட் வேலை முடிஞ்சு வரப்போ தெரத்தி, தெரத்தி கடிக்க வரும். நாம ஜாலியா ஓடலாம்.
முதல்வர் : அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே 4 நாய் வாங்கி எங்க ஏரியால விட்டுடுறேன்.

முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க?
இரண்டாமவர்: எங்க வீடு பூராவும் பணமா இருக்கு.. பீரோ, கிச்சன், ஸோஃபா எங்க பாத்தாலும் ஒரே பணமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல..
முதல்வர் : ஏன் உங்க பணத்தை நீங்க பேங்க்ல போட்டு வைக்கக் கூடாது?
இரண்டாமவர்: என்னது பேங்கா!!! அப்படின்னா என்ன?
முதல்வர் : ஆமா. பேங்க். நம்ம பணத்தை அவங்க கிட்ட குடுத்து வச்சுட்டு வேணுங்கறப்போ வாங்கிக்கலாம். சில சமயம் நமக்கு வேலை வைக்காம அவங்களே நம்ம பணத்தைத் தூக்கிட்டு எங்கயாவது ஓடிடுவாங்க..
இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் பணத்தை எல்லாம் பேங்க்ல போட்டுடறேன்.

முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க? வியாரமெல்லாம் எப்படி போகுது?
இரண்டாமவர்: யாரும் கடைப் பக்கமே வர்றதில்லை. ஈ ஓட்டிட்டு இருக்கேன். என்ன பண்றதுன்னே தெரியல..
முதல்வர் : ஏன் உங்க வியாபாரத்தை பத்தி நீங்க விளம்பரம் பண்ணக் கூடாது?
இரண்டாமவர்: என்னது விளம்பரமா!!! அப்படின்னா என்ன?
முதல்வர் : ஆமா. விளம்பரம். பணம் குடுத்தா நம்ம கடையைப் பத்தி டிவி, ரேடியோ, நியூஸ் பேப்பர் எல்லாத்துலயும் ஆஹா, ஓஹோனு புகழ்ந்து பேசுவாங்க..
இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் கடையைப் பத்தி எல்லாத்துலயும் விளம்பரம் பண்ணிடறேன்.

அதிக ஹிட்ஸ் + பின்னூட்டம் பெற டிப்ஸ்

Wednesday 11 March, 2009

6) ஒரு பதிவிற்கு ஒன்பது லேபில்கள் கொடுங்கள். அரசியல்,சமையல் எதையும் விட்டுவைக்கக் கூடாது. 'சமையலில் அரசியலா?' என்று வியந்து பலர் வர வாய்ப்புண்டு. மேலும் சமையலில் போட்டி குறைவாக இருக்கும் என்பதால் வாரக்கணக்கில் தமிழ்மண முகப்பில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

லேபிலில் நகைச்சுவை கட்டாயம் இருக்கவேண்டும். நாமெல்லாம் பதிவெழுதுவதே பெரிய நகைச்சுவை தானே!

10) நண்பர்கள் யாராவது யாஹூ, ஜிமெயிலில் 'சாட்'டினாலோ, ஏன் தொலை பேசினாலோ கூட தொடர்பை துண்டித்து விட்டு உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அவருடன் சாட் செய்ய ஆரம்பியுங்கள்.

யாராவது புதியவர் தப்பித் தவறி உங்கள் பதிவில் பின்னூட்டி விட்டால், அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விடுங்கள். ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டு எஸ்ஸாகி இருந்தால் கூட, வாங்க.. உக்காருங்க.. வருகைக்கு நன்றி, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்ற ரீதியில் நான்கு பின்னூட்டங்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

11) லட்சம் ஹிட்ஸ் பெற ஆதரவளித்த வாசகப் பெருமக்களுக்கு நன்றி எனத் தலைப்பிடலாம். 'இவ்வளவு பிரபலமான பதிவரைத் தவறவிட்டுட்டோமே!' என்று வருபவர்களுக்கு, பாட்ஷா ரஜினி போஸ்டருடன் 'நான் ஒரு ஹிட் எடுத்தா நூறு ஹிட் எடுத்த மாதிரி' என்று பன்ச் டயலாக்குடன் வெறியேற்றலாம்.

8) அதிக பின்னூட்டங்கள் பெறும் பதிவில், 'இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன்' என்று பின்னூட்டலாம். ஆனால் பின்னூட்டும் முன் அந்தப் பதிவை ஒரு முறை படித்து விடுவது நல்லது. அப்பதிவு அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழாவைப் பற்றியதாய் இருந்து, நீங்களும் அதைப் பற்றி எழுதியதாகப் பின்னூட்டி.. ரணகளமாகிவிடும்.

9) அதிக ஹிட்ஸ் பெற விரும்புபவர்கள் 'குங்குமத்தில் நான்' எனத் தலைப்பிடலாம். நம்ம பதிவர் வெகுஜன ஊடகத்தில் வந்திருக்கிறாரே என்று ஆவலாக வருபவர்களை ஏமாற்றாமல், நீங்கள் குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த குங்குமத்தில் நான் அழகா இருக்கேனா?' என்று கேட்டு கட்டையைக் கொடுக்கலாம்.

அல்லது 'ஆவியில் நான்' எனத் தலைப்பிட்டு இட்லி ஆவியிலோ, நீராவியிலோ முகத்தை நுழைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிடலாம். பேய், பிசாசு வகை ஆவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தால் கூடுதல் நலம்.

7) அநியாயத்துக்கு எழுத்துப் பிழைகளுடன் டைப்பவும்(தலைப்பு, உங்கள் பெயர் உட்பட). யாராவது தமிழ் ஆர்வலர்கள் தமிழைக் கொலை செய்வதைக் கண்டு பொங்கி 'உன் படைப்பில் பிழை இருக்கிறது' என்று பின்னூட்டக் கூடும்.

இப்பதிவில் உள்ளது போல, எண்களை வரிசைப்படி போடாமல், உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி போடலாம். 'அருமையான பின் நவீனத்துவ படைப்பு' என்று சில அப்பிரானிகளும், 'ஒன்னு ரெண்டு கூட தெரியல. நாதாரி நீயெல்லாம் என்னத்துக்குடா பதிவெழுதுற?' என்று பல அறிவு ஜீவிகளும் பின்னூட்டக்கூடும்.

12) 'அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்' என்று தலைப்பிட்டு இந்த மாதிரி மொக்கை போடாமல் சீரியஸான யோசனைகள் தரலாம்.

அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்

Tuesday 10 March, 2009

1) இயற்கையிலேயே, நீங்கள் சாலையில் போகிறவர் கூப்பிட்டு செவிட்டிலறைந்தாலும் சிரித்துக் கொண்டே இன்னொரு கண்ணத்தைக் காட்டும் சாத்வீகவாதியாக இருக்கலாம். ஆனால் பதிவராகி விட்டால், அநியாயத்தைக் கண்டு பொங்கி எழ வேண்டும்.

உதாரணமாக உங்கள் வீட்டின் செப்டிக் டேங்கில் அடைப்பு என்றால், 'போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்' என்று தலைப்பிட்டு செப்டிக் டேங்கின் புகைப்படத்துடன் பதிவிடலாம்.

2) பின்வரும் வாக்கியங்கள் இறுதியில் 'இப்போதும் கண்டுகொள்ளவில்லையா?' என்று சேர்த்துப் படிக்கவும்.
அ. பிரபலமாகி விட்ட ஏதாவது ஒரு பழம்பெரும் பதிவரைப் பற்றி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து, 'என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்ற ரீதியில் பதிவிட்டு, அவர் பெயரையே தலைப்பாக்கி, அவர் வலைப்பூவைப் பின் தொடருங்கள்.
ஆ. தலைப்புடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை அவர் பதிவில் பின்னூட்டுங்கள்.
இ. மின்னஞ்சலில் உங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பி, உங்கள் கருத்து என்ன என்று கேளுங்கள்.
ஈ. வேறு வழியே இல்லை. ஆப்பிளையோ, ஆரஞ்சையோ வாங்கிக் கொண்டு நேராக அவர் வீட்டுக்கு கணினியுடன் சென்று பின்னூட்டம் வாங்கி விடுங்கள்.
உ. அப்படியும் பின்னூடம் போட மறுத்து விட்டாரா? மனம் தளராமல் வேறொரு பதிவரை வைத்து 'அ'விலுருந்து ரகளையை மறுபடி ஆரம்பிக்கவும்.

3) Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.

Profileலோடு நிறுத்தி விடாமல் உங்கள் ஜாரியின் அல்லது பெண்ஜாதியின் அணுபவங்களைத் தொகுத்து 'சுமாராக இல்லாவிட்டாலும் சூப்பராக இருக்கும் ஃபிகரின் அனுபவங்கள்' என்று பதிவெழுதலாம். என் ஆள் சூப்பர் ஃபிகர் இல்லையே என்று கேட்கக் கூடாது. உலகில் இரண்டு வகைப் பெண்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று அழகாக இருப்பவர்கள். இரண்டாவது அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள்.

4) லேட்டஸ்ட் ட்ரென்ட் என்னவோ அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக யாராவது கலைமாமணி விருது கொடுத்தால், நீங்கள் கொலைமாமணி விருது கொடுக்க வேண்டும். யாராவது 'ஆயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்டால், நீங்கள் 'பாயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்க வேண்டும்.

'பாயா எப்படி பதில் சொல்லும்?' என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆயா மட்டும் பதில் சொல்லப் போகிறாரா என்ன?

5) பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டும் போது மறந்து கூட ஸ்மைலியோ, ரிப்பீட்டோ போட்டு ஆமாஞ்சாமி போட்டு விடக் கூடாது. என்ன சொன்னாலும் மறுத்துப் பேச வேண்டும்.

உதாரணமாக காந்தியைக் கொன்றது கோட்சே என்று பதிவிட்டிருந்தால், 'இல்லை. காந்தியை சுட்டது எங்க பின் வீட்டு ஆயா தான். வீடியோ ஆதாரம் இருக்கிறது' எனலாம். 'எவன்டா இந்த லூசுப்பய' என்று பலர் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், 'வலையுலக சுப்பிரமணிய சுவாமி' என்று தமிழ்மணமோ, இட்லி வடையோ, குசும்பனோ ஏன் சோம்பேறியோ கூட விருது தர வாய்ப்பிருக்கிறது.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை..

ஜே.கே.ரித்தீஷ், ஷங்கர், பன் பிக்சர்ஸ் இணைந்து மிரட்டும்

Saturday 7 March, 2009

பன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், பிப்ரவரி 32டில் திரையில் 'புரட்சித் தளபதி' எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கமான ஷங்கரின் 'ராபின் ஹூட் கான்செப்ட்' தான். நாயகன் சிறு வயதிலிருந்தே அரசியல்வாதியான தன் தாத்தா கவுண்டமணி செய்யும் அநியாயங்களைத் தட்டி கேட்கிறார். 'இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா நாராயணா!' என்று நாயகனை வெளிநாட்டிற்கு(ஆப்கானிஸ்தான்) அனுப்புகிறார்.

பல வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பும் நாயகனை வரவேற்க, சூப்பர் ஜாரிகள் சகிதம் செல்கிறார் மாமா.. ஸாரி.. தாத்தா கவுண்டமணி. கட்டினால் தமிழ் பிகரைத் தான் கட்டுவேன் என ஒத்தைக் காலில் நிற்கும் நாயகன், கோவில் வாசலில் தேங்காய் பொருக்கிக் கொண்டிருக்கும், அக்மார்க் தமிழ் பெண்ணான ஏஜ்ஜலினா ஜூலியைப் பார்த்ததும் இன்னொரு காலைத் தரையில் வைக்கிறார். ஆரம்பத்தில் அவர் காதலை ஏற்க மறுக்கும் நாயகி, தன் காதலை நிரூபிக்க மவுண்ட் ரோட்டில் நிர்வாணமாக ஓடப் போவதாக நாயகன் சொன்னதும், அரண்டு போய் சம்மததைத் தெரிவித்து விடுகிறார்.
"யம்மா இங்க வா வா.. ஆச முத்தம் தா தா.." என்று ஒரு டூயட் பாடி விட்டு வீட்டிற்கு வரும் நாயகனுக்கு அதிர்ச்சி. கவுண்டமணி பினாமியாக இருந்த அரசியல்வாதி தலைமறைவாக, அவர் அந்த சொத்தை ஆட்டையைப் போடுகிறார். ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டும், தலைமறைவானவர் திரும்பி வருமுன் சொத்து முழுவதையும் செலவு செய்யும் பொருட்டும் கலை சேவை செய்ய முடிவெடுக்கிறார்.

நல்ல படத்தில் நடித்தால் ஏழை மக்கள் தினமும் நான்கு காட்சிகள் பார்த்து பரம ஏழைகளாகி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில், தன்னாலேயே Preview show கூட பார்க்க முடியாத ஒரு படத்தில் நடிக்கிறார். The Punishment என்று caption கொடுத்து, 'யாரும் வந்து விடாதீர்கள்' என எச்சரிக்கை விடுக்கிறார். இவ்வளவு செய்தும் திரையரங்கில் கூட்டம் அம்ம, விகடனில் The Punishment என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்.

தனது ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு ஒரு இரு சக்கர வாகனமும்(மாட்டு வண்டி அல்ல பைக்), மாதம் 50000 ரொக்கமும் வழங்குகிறார். தன் வீட்டு வாசலில் ஒரு ஆராய்ச்சி மணியும், புகார் பெட்டியும் வைத்து அதில் முறையிடும் ஏழைகளுக்கு உதவுகிறார்.

ஹாலிவுட்டிலுள்ள நலிந்த கலைஞர்களை உய்விக்க, பில்லியன் கணக்கில் செலவழித்து Cellular, Bad boys உட்பட 12 படங்களின் காப்புரிமையை வாங்குகிறார். பெருந்தன்மையுடன் தாத்தா கவுண்டமணியை கதாநாயகனாக்கி விட்டு, பன்ச் வசனங்கள் மட்டுமே பேசும் ஒரு சப்பை பாத்திரத்தில் நடிக்கிறார். ஆப்பரேட்டர் கூட இல்லாத திரையரங்கில் 150 நாட்கள் ஓடும் அந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.

ஆஸ்கர் வாங்க அமெரிக்கா செல்லும் நாயகனுக்கு, அங்கு recession பிரச்சனை தலை விரித்து ஆடுவது தெரிய வருகிறது. இரும்புத்தடியில் விளக்கென்னை தடவி recessionனை ஓட ஓட அடித்து விரட்டுகிறார். நாயகி ஏஞ்சலினாவின் புடவையை உருவி, பள்ளத்திலிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி விடுகிறார்.

நாயகன் வெற்றியுடன் திரும்பி நடக்கையில் பின்னனியில் graphicsஸில் கையில் திருவோட்டுடன் "மம்மி.. டாடி.. சம்படி ஹெல்ப்" எனக் கூவிய படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கிழவி, கிரெடிட் கார்ட் இயந்திரத்துடனும், மடிக்கணினியுடனும் பிச்சை எடுக்கிறார்.

புல்லை மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு, கோட் சூட்டுடன் பிட்சா(Pizza) சாப்பிடுகிறது. நாயகன் வீட்டு வாசலில் இருக்கும் புகார் பெட்டியில் புகார்கள் ஏதும் இல்லாமல், மரத்திலிருந்து ஒரு பலாப்பழம் புகார் பெட்டி மேல் விழுந்து உடைவதுடன் படம் நிறைவடைகிறது.

தொலைக்காட்சியில் தோன்ற சில (விபரீத) யோசனைகள்

Friday 6 March, 2009

1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.

2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் சி**ர் கழித்துக் கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.

3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.
4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.

5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.

6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)

7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.

இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.

இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். (அதான் எல்லாத்தையும் நீயே சொல்லிட்டியே!)

மஹிந்தா ராஜபக்ஷேயிடன் ஈழ சிறுவன் கேட்ட கேள்விகள்

Thursday 5 March, 2009

ராஜபக்ஷே இலங்கையிலுள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுகிறார்.

மஹிந்தா: யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் நிரஞ்சன்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
மஹிந்தா: உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் இடைவேளைக்குப் பிறகு சந்திக்கலாம்.

(இடைவேளைக்குப் பிறகு)

மஹிந்தா: எங்கே நிறுத்தினோம்? ஆம். யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் மைக்கேல்: என்னிடம் நான்கு கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
4) நிரஞ்சன் எங்கே?

வழக்கறிஞர், அமைச்சர் என்று தனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் எதையும் தேர்ந்தெடுக்காமல் பத்திரிக்கையாளராகவே இருந்து, அதற்காகவே தனது இன்னுயிரை நீத்த 'சண்டே லீட'ரின் முதன்மை ஆசிரியர் இறைதிரு. லசந்த விக்ரமதுங்கா அவ்ர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

பின்குறிப்பு அல்லது கொஞ்சம் லேட்டான பிற்சேர்கை: இது ஜார்ஜ் புஷ் பற்றி எனக்கு கைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் ஆல்ட்ரேஷன்.

மருத்துவர் ராமதாஸிடம் சில சந்தேகங்கள்

Wednesday 4 March, 2009

முன்குறிப்பு: இப்பதிவின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது இல்லை. மீறி காயம் பட்டு விட்டால் மருத்துவர். ராமதாஸிடமே போய் ப்ளாஸ்த்திரி போட்டுக் கொள்ளவும்.

1) வணக்கம் ஐயா.. கருனாநிதி என்ன தவறு செய்தாலும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களாமே.. உளியின் ஓசையை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

2) உங்க கூட்டாளி கருனாநிதி கவித எழுதுவதால் கலைஞர் என்று போட்டுக் கொள்கிறாரே.. பதிவு எழுவதும் ஒரு கலை தானே. நானும் கலைஞர் போட்டுக்கலாமா? அவர் அதிமுகவிற்கு கட்சி மாறப் போவதாக வதந்திகள் கிளம்புதே.. உண்மையா?

3) நாளை பின்ன நீங்க கட்சி மாறி புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பார்த்தால், இதைக் கொஞ்சம் கேட்டு சொல்லிடுங்க..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதால் புரட்சி தலைவி என்று போட்டுக் கொள்கிறாரே, நாளை நானும் புரட்சி தளபதி ஜே.கே.ரித்தீஷ் கையில் காலில் விழுந்து அவரது வாரிசு ஆகிவிட்டால், என்ன அடை மொழி போட்டுக் கொள்ளலாம்?

4) சினிமாவிலிருந்து முதல்வராக முயற்சிக்கும் விஜய காந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி வைத்துக் கொள்ளும் போது, அமெரிக்க ஜனாதிபதியாக முயற்சிக்கும் நடிகர் கார்த்திக் சிவப்பு ஒபாமா என்றும், பிரதமராக முயலும் எங்க ஊர் MLA மாநிற இந்திரா காந்தி என்று அடைமொழி வச்சிக்கலாங்களா?

5) ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியன்னு சொல்றாங்க..

இது வரை கத்தியின்றி, ரத்தமின்றி லட்சம் பேருக்கு மேல் சாவடித்த இயக்குனர் பேரரசுக்கு ஏன் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்க வில்லை? பொறாமை தானே?

இதையெல்லாம் ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால்.. உங்களைப் போன்ற திறமையான மருத்துவர்கள் அரசியலுக்குப் போய் விட்டால் தமிழ் நாட்டை யார் காப்பாற்றுவது? என்னை யார் காப்பாற்றுவது?

விஷயம் என்னன்னா ரெண்டு வாரமா நகக்கண்ணில் ஊசியால் குத்துவது போல தாங்க முடியாத வலி. அலோபதி, ஹோமியோபதி எல்லா பதியும் பாத்தாச்சு. அக்குபங்சர், டிங்சர் எல்லாம் பண்ணியாச்சு. நாரப் பயபுள்ளைக ரத்தப் பரிசோதனை செய்து விட்டு, வலியை அடக்குவதற்க்கு broofanனையும், காரணமே இல்லாமல் Paracetamolலையும் குடுத்துட்டு 500 ரூபாய் புடுங்கிக்கிட்டாய்ங்க. மேற்கொண்டு ஸ்கேன் வேற எடுக்கனும்னு சொல்லி பீதியைக் கெளப்புகிறாய்ங்க..

நேச்சுரொபதி டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஆப்பிள், ஆரஞ்சுனு எழுதிக் குடுத்து கடியைக் கிளப்புகிறாய்ங்க..

மாத்ருபூதத்திற்கு அடுத்து எனக்குத் தெரிந்த பிரபலமான மருத்துவர் நீங்கள் தான் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்களும் எங்க ஊர் மருத்துவர்கள் போல MBBS படிக்கும் போது 'நகக்கண் வலியை குணப்படுத்துவது எப்படி?' என்ற கேள்வியை சாய்ஸில் விட்டிருந்தால் நான் டாக்டர். விஜயிடம் தான் போய் கேட்க வேண்டும். அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

முன்குறிப்பு அல்லது க்ளைமாக்ஸ்

Monday 2 March, 2009

முன்குறிப்பு அல்லது க்ளைமாக்ஸ்: இந்தப் பதிவின் நோக்கம், 'அம்மா தாயே ஓட்டு போடுங்க அல்ல'. 'வருகைக்கு நன்றி'.

இது என்னுடைய பத்தாவது பதிவு. (அட! கை தட்டுறத நிறுத்துங்க மக்கா.. பேசி முடிச்சுக்கிறேன்.) எந்த பிரபலமும் எழுத முன் வராததால், நானே எழுதுகிறேன். எனது 25வது பதிவை ஒரு வலையுலக பிரபலம் தான் எழுதுவார் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வளவு நாளாக தமிழ்மணத்தை tamilmanam.com என்ற முகவரியில் தினமும் தேடி, காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் எப்போ திறப்பார்கள் என்று ஏங்கும் குடிமகனைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். அதோடு அப்பிரானியாக "கடைய எப்பண்ணே தெறப்பீக?" என்று ஒரு மின்னஞ்சல் வேறு.. தமிலிஷ்.காமில் பதிவு செய்து, என் இரண்டாவது படைப்பை அனுப்பி விட்டு வழக்கம் போல், கடவுச் சொல்லை(password) மறந்து விட்டேன். get new password வேலை செய்யாததால், அதையும் விட்டு விட்டேன். இருந்தாலும் அளவில்லா கடமையுணர்சியுடன் பதிவெழுதுவதை தொடர்ந்து கொண்டு தான் இருந்தேன். Elephant one time. Cat one time.

இரண்டு நாட்களுக்கு முன்பு தற்செயலாக ஒரு பதிவரின் சைட் பாரில்(sight bar அல்ல side bar) க்ளிக்கிய பிறகு தான் தமிழ்மணத்தின் உன்மையான முகவரியே தெரிந்தது. நேரத்தை வீணாக்காமல் உடனே பதிவு செய்து விட்டு, மறுமொழி மட்டுறுத்தும் பக்கத்தை திறந்து வைத்துக் காத்திருந்தேன். ஈ காக்கா கூட வரல.

நேற்றும் கமெண்ட் எதுவும் வரவில்லை என்றதும் 'ஏன்டா எழுத வேண்டும்' என்றாகி விட்டது. ஏதோ தன்னடக்கத்துக்காக நான் ஒரு பேக்கு, இது ஒரு மீமீ வலைப் பூ என்று சொன்னால், அதை ஒப்புதல் வாக்கு மூலமாக எடுத்துக்கொண்டு யாரும் கடைப்பக்கமே வரமாட்றாங்களே என்று கடுப்பாகி விட்டது.

ஏற்கனவே Hitstats, Feed jet போன்ற வசதிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், அது ஒன்னாப்பில் வாங்கிய பூஜ்யத்தையே காட்டி கேவலப்படுத்தும் என்பதால் தவிர்த்து வந்தேன். சரி, ஃபீட் ஜெட்டை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அமைத்து விட்டு பத்து நிமிடம் கழித்து பார்த்தால்.. அடங்கொன்னியா.. நான்கு பேர் தமிழ்மணத்திலிருந்து.. (அதுவும் முந்தின நாள் எழுதிய பதிவிற்கு)

“கங்ராட்ஸ் நீங்க எள்ளுத் தாத்தா ஆக போறீங்க”... என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கிட்டத்தட்ட ஏழு,எட்டு மாதங்கள் அந்த வார்த்தைகள் கொடுக்கும் ஒரு இனம் புரியா நிலையின் ஊடே வேறு பல வேலைகளுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும்... ‘வீல்’என்ற அழுகையின் ஊடே மொட்டாய் மலராய்..ரத்தப் பாதங்கள்,பஞ்சுக் கைகள் என அந்த மலர்மழலைக் கொத்தாய் கைகளில் பார்க்கும் பொழுது ஏற்படும் உன்னத நிலையை வார்த்தைகளாய் மொழிபெயர்க்கத் தெரியாத ஒரு மெளன யவ்வணமான நிலைக்கு நிகராய்(நன்றி : நர்சிம்) எல்லாம் உணராவிட்டாலும், மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.

உடனே Gmailலில் ஒரு புது account திறந்து, அந்த அக்கவுண்டுடன் தமிலிஷில் எனது பதிவை சமர்ப்பித்து விட்டு, Hitstatடையும் பதிவில் இணைத்து விட்டு பார்த்தால், அந்த ஐந்து நிமிட இடைவெளியில் 28 ஹிட்டுகள். ஏழு பேர் ஆன்லைன். இருப்பு கொள்ளவில்லை எனக்கு. என் அம்மா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை என் தாத்தா, தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு செவிட்டிலடித்து சொன்னாராம். அவர் உயிரோடு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket