Showing posts with label டிப்ஸ். Show all posts
Showing posts with label டிப்ஸ். Show all posts

செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா

Friday, 29 May 2009

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?


காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?


வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.


உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.

அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?

1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.

இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.

2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)

அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'

5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.

ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.

6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'

அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.

எப்பூடீ?

முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..

முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்

மூத்த பதிவர்களின் முத்தம் வேண்டுமா?

Friday, 8 May 2009

நான் மற்றவர்கள் வலைப்பூக்களில் கும்மியடிக்காததாலோ என்னவோ சில பெரியமனதுக்காரர்களைத் தவிர எனக்கு பின்னூட்டுபவர்களில் பெரும்பாலானோர் அனானிமஸாகவும், கூகுள் கணக்கோடும் வரும் நண்பர்களே!

பெருந்தலைகளைத் திரும்பிப் பார்க்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது எனக்கு சிக்கிய சில யோசனைகளை உங்களுக்கு சொல்கிறேன்.(நீங்கள் பின்பற்றி, வொர்க் அவுட் ஆனால் பிறகு நானும் பின்பற்ற ஆரம்பிக்கிறேன்.)

தாமிரா - தங்கமணிகளை சமாளிக்க பத்து யோசனைகள் என்ற தலைப்பில் சில யோசனைகள் தரலாம். யோசனைகள் வேலை செய்தால் உங்களுக்குக் கோவில் கட்டினாலும் கட்டுவார்.

நாமக்கல் சிபி - நவயுக தெய்வம் நயன்தாரா; (கேபிள் ஷங்கர் மற்றும் லோஷனுக்கு நமீதா என எடிட்டிக் கொள்ளவும்)

மாதவராஜ் - எதிர் வாக்களிப்பவர்களை எதிர்கொள்வது எப்படி?

நான் ஆதவன் - சேட்டனிண்ட சேட்டைகள்(A அல்ல U)

வால் பையன் - 'பகுத்தறிவாளர்களுக்கு ஒரு ஆப்பு' அல்லது 'ராவாக அடிப்பது எப்படி' என்ற தலைப்பில் எழுதலாம்.

உண்மைத்தமிழன் - ஒரு எழுத்துக்கதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில், 'காவல் கோட்டம்' அளவு ஒரு ஆயிரத்து சொச்ச பக்க நாவலை பதியவும்.

லக்கிலுக் - இந்த ஃபிகருக்கு எத்தனை மார்க் போடலாம்? என்று தலைப்பிடலாம். கருணாநிதியைக் கொஞ்சம் காரசாரமாகத் திட்டி பதிவிட்டால் அவர் வலைப்பூவில் உங்களுக்காக தனிப் பதிவிட்டு உங்களைப் பட்டுக் குஞ்சத்தால் கொஞ்சுவார்.

குசும்பன் - இவர் எழுதிய எதிர் கவுஜைக்கு, எதிர் எதிர் கவுஜை எழுதலாம். 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்று கேட்டு பின்னூட்ட வாய்ப்பிருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் - தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு, கணினியில் உ லாபம் என்று டைப்பவும். ஃபுல்லாக சரக்கடிக்கவும். பிகர்கள் இருக்கும் திசையிலுள்ள ஜன்னலை திறந்து விட்டுக் கொள்ளவும்.

இப்போது உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதையெல்லாம் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ஆர்மோனியப் பெட்டியை வாசிப்பது போல, முழங்கையால் கணினியின் பொத்தான்களை கண்டபடி அழுத்தி டைப்பித் தள்ளிவிடவும். சோலி முடிஞ்சது.

இது தலைப்பிற்கு மட்டுமே! அவரைப் போல் பதிவெழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமெழுதலாம் என்றிருக்கிறேன்.

(இதையே மடக்கி மடக்கி கவிதை வடிவில் டைப்பினால் சென்ஷியின் பின்னூட்டத்தையும் பெற்று விடலாம்)

தூயா - வாயில் நுழையாத பதார்த்தத்துக்கு, வாயில் நுழையாத பெயரை வைத்து 'செய்வது எப்படி' என்று தலைப்பிடுங்கள்.

பரிசல்காரன் - இவர் பதிவிற்கு எதிர் பதிவிடலாம். அவரது வலைப் பூவில் 'இதெல்லாம் உனக்கு தேவையா' என்று கேட்டுக் கொண்டாலும், நம் பதிவில் ஜூப்பர் என்றே பின்னூட்டுவார். (இவரது பதிவில் முதல் பின்னூட்டம், காதலி/காதலனின் முதல் முத்தம் போல என்று குறிப்பிட்டிருந்தார். தலைப்பின் காரணம் இப்போது புரிகிறதா?)

டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அல்லது 'டோண்டு ராகவன் பெயரில் எனக்கு வந்த போலி பின்னூட்டம்' என்று தலைப்பிடலாம். பதிவைப் படிக்கிறாரோ இல்லையோ, 'நான் அவன் இல்லை' என்று பின்னூட்டி விட்டுப் போவார்.(அடி பலம் போல)

நர்சிம் - அடியார்க்கு நல்லார் உரை எழுத மறந்த ஏதாவது ஒரு சங்க கால பாடலுக்கு 'யாராவது விளக்கம் கொடுத்து உதவுங்களேன்' என்று தலைப்பிடலாம்.

இட்லிவடை - அனானியாக ஏதாவது பின்னூட்டம் வந்தால் இட்லிவடை என்று திருப்திப் பட்டுக் கொள்ளவும்.

அப்படியும் கல்லா கட்டவில்லையா.. தொடர் பதிவெழுத அழைப்பு விடுப்பது போல, நாளுக்கு ஐந்து பதிவர்களைப் பின்னூட்ட அழைப்பு விடுக்கலாம்.

பின் குறிப்பு: இதில் பாதிக்கு மேற்பட்டோர் எனக்குப் பின்னூட்டியிருக்கிறா(றீ)ர்கள். எனவே உங்களுக்கு சிரிப்பு வராவில்லை என்பதற்காக இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சோக்காகவே எடுத்துக் கொள்ளவும்.

அதி முக்கிய அறிவிப்பு: சோம்பேறியைப் பின்னூட்ட வைக்க, சோம்பேறியின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம். மேலதிக விபரங்களுக்கு 'sombery@gmail.com'

நைஜீரியா ராகவனுக்கு ஒரு பகிரங்க உதவி

Tuesday, 31 March 2009

முன் குறிப்பு: இது ஒரு சோதனைப் பதிவு. என்ன சோதனை என்று கண்டுபிடிப்பவர்களுக்கு, என் வசதிக்கு பொற்கிழியோ, கேப்பைக் களியோ தர முடியாவிட்டாலும், இதயத்தில் இடம் நிச்சயம் உண்டு.

என்ன பதிவிடுவது என்று மண்டை காய்ந்து புலம்பியிருந்த நன்பர் ராகவனுக்கு என்னால் இயன்ற சில டிப்ஸ்.

1) அரசியல் பதிவிடுவதற்க்கு நீங்கள் புலம்புமளவு, உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நகைச்சுவையாக எழுத விரும்பினால், நமது அரசியல்வாதிகளின் சென்ற மாத அறிக்கையையும், இந்த மாத அறிக்கையையும் அட்சரம் பிசகாமல் பிரசுரித்து விட்டு ஒரு புன்னகையை(ஸ்மைலி) மட்டும் இணைத்து விடுங்கள். 'அது போன மாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்' என்பதைத் தலைப்பாகவோ, இறுதியில் பன்ச்சாகவோ வைத்துக் கொள்ளலாம்.

சீரியசாக பதிவிட விரும்பினால், அதே அறிக்கைகளில் :-)க்கு பதில், 'மக்கள் என்ன மண்னாங்கட்டியா?' போன்ற நாலு வசவுகளை இனைத்துக் கொள்ளுங்கள். 'டேய்.. ங்கோ**** பசங்களா' போன்ற வார்த்தைகள் இனைத்திருந்தால் கூடுதல் நலம். அதே வார்த்தையைத் தலைப்பில் சேர்க்கும் தில் உங்களுக்கு இருந்தால், மிகக் கூடுதல் நலம். சூடான இடுகையில் இடம் பிடித்து விடலாம்.

2) 'சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டா அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம்' என்று காத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதெப்படி அவர்களாகக் காணாமல் போவார்கள். நாம் தான் ஆவன செய்து, அவர்களை விரட்டி விட்டு 'நண்பா! எங்கே நீ?' என்று பதிவிட வேண்டும்.

3) கவிதை எழுதுவது சப்ப மேட்டர். நீங்கள் கவிதையென்றால் காத தூரம் ஓடுவேன் என்று குறிப்பிட்டுள்ளதால், அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

4) ஏதாவது ஆப்பிரிக்க, அண்டார்டிக்க கொலை ஸாரி கலைப் படங்களை டிவிடியில் பார்த்து விட்டு திரை விமர்சனம் எழுதுங்கள். முழுப்படமும் பார்த்து மண்டை காய வேண்டிய அவசியமில்லை. Fast forward செய்து ஓட விட்டு, அரை மணிக்கொரு முறை பாஸ் செய்து, சப் டைட்டிலில் என்ன வசனம் வருகிறதோ அதைக் குறிப்பிட்டு 'அங்கன தான் நிக்காரு டைரடக்கரு' என்ற ரீதியில் எழுதலாம்

தமிழ் படமென்றால் ட்ரைலரோ, போஸ்டரோ மட்டும் பார்த்தால் போதும். அதில் எல்லாப் பதிவர்களாலும் சிலாகிக்கப்படும் ஒரு வி.ஐ.பியைப் பற்றி திட்டி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளலாம். உதாரணமாக, 'காதல் படமென்றால் ரொமாண்டிக்காகத் தான் இசையமைக்க வேண்டுமென ஏ.ஆர்.ரஹ்மானுக்கு யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்' என்று எழுதினால், ரஹ்மானை விட நீங்கள் புத்திசாலி என்று படிப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

4) சரக்குள்ள பதிவு தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பத்தால், 'சரக்குள்ள பதிவு' என்று தலைப்பிட்டு, உள்ளே பதிவில் கீழ்கண்ட சரக்குகளின் படங்களை வெளியிடலாம்.
















5) 'பார்ப்பீனியம் என்றால் என்ன?' என்று தலைப்பிட்டு, பதிவில் 'என்ன? எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் உங்களைக் கேட்கிறேன். தயவுசெய்து யாராவது விளக்குங்கள்' என்று பதிவிட்டுப் பாருங்கள்.

பிறகு புற்றீசல் போல, இரண்டு க்ரூப்பிலிருந்தும் வரும் கருத்துரைகளுக்கு 'ஹேய்.. நோ.. நோ பேட் வேர்ட்ஸ்', 'மம்மி பாவம்', 'டாடியும் பாவம்', 'மீ? ஐ ஆம் ஈட்டிங் ஒன்லி ஃபுட்ஸ்', 'டோட்டல் ஃபேமிலி டேமேஜ்', 'மீ அவா நோ' போன்ற பதில்களை முதலில் வரிசைக்கிரகமாகவும், பின்பு ரேண்டமாகவும் போட்டு வாருங்கள். நிச்சயம் எல்லா கருத்துரைகளுக்கும் பொருந்தும் அளவு பதில் சொல்லியிருப்பீர்கள்.

6) ஏதாவது பேட்டி வெளியிடலாம். 'ரஜினிகாந்த் நைஜீரியா வரட்டும். அவரைப் பேட்டியெடுத்துப் பதிவிடுகிறேன்' என்றெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சென்ற பேட்டியில் பேசியதையே திரும்பத் திரும்ப வேறு வார்த்தைகளால் பேசிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் பேட்டியை விட, அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி வலம் வரும் யாராவது ஒருவரின் பேட்டி சுவாரசியமாக இருக்கும். (பிரபலங்களும் பாவம் தான். ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தால் ஒரே பதிலை தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.)

திநகர் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்து வயது மதிக்கத் தக்க சின்னப் பெண் சொன்ன கதை இருக்கிறதே! அந்தக் அழகான களையான குட்டி கருப்பு முகமும், அதற்கு மிகப் பொருத்தமான பாப் கட் சிகையும், அவள் அழகைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதும் சட்டையைக் கடித்துக் கொண்டே வெட்கத்துடன் சிரித்த சிரிப்பும், 'உங்க அப்பா எங்க?' என்ற கேள்விக்கு குலை நடுங்க வைக்கும் அந்தக் கதையை, இரும்புக் கம்பத்தைக் கட்டிக் கொண்டே புன்னகையும் வெட்கமும் மாறாமல் சொன்ன விதமும் எந்தத் திரைப் படத்திலும் இதுவரை வராதது.

கற்பனை வறட்சியால் நமது கலாச்சாரத்துக்கு ஒத்தே வராத ஆங்கில, ஜப்பானிய திரைப்படங்களின் கதைகளை உருவும் இயக்குனர்களும், அழகான மலையாள திரைப்படங்களில் மசாலா சேர்க்கிறேன் என்ற பெயரில் கேவலப்படுத்தி உயிரை வாங்கும் இயக்குனர்களும், காதைக் கிழிக்கும் அட்டர் ஃப்ளாப்பான தெலுங்குப் படங்களை மொழிபெயர்த்து நம் முழியைப் பெயர்க்கும் இயக்குனர்களும் மேற்கூறிய யோசனையைப் பின்பற்றலாம்.

டிவிடி வாங்க ஆகும் 25 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஐந்து ரூபாயும் கொஞ்சம் புன்னகையும் போதும்.

அதிக ஹிட்ஸ் + பின்னூட்டம் பெற டிப்ஸ்

Wednesday, 11 March 2009

6) ஒரு பதிவிற்கு ஒன்பது லேபில்கள் கொடுங்கள். அரசியல்,சமையல் எதையும் விட்டுவைக்கக் கூடாது. 'சமையலில் அரசியலா?' என்று வியந்து பலர் வர வாய்ப்புண்டு. மேலும் சமையலில் போட்டி குறைவாக இருக்கும் என்பதால் வாரக்கணக்கில் தமிழ்மண முகப்பில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

லேபிலில் நகைச்சுவை கட்டாயம் இருக்கவேண்டும். நாமெல்லாம் பதிவெழுதுவதே பெரிய நகைச்சுவை தானே!

10) நண்பர்கள் யாராவது யாஹூ, ஜிமெயிலில் 'சாட்'டினாலோ, ஏன் தொலை பேசினாலோ கூட தொடர்பை துண்டித்து விட்டு உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அவருடன் சாட் செய்ய ஆரம்பியுங்கள்.

யாராவது புதியவர் தப்பித் தவறி உங்கள் பதிவில் பின்னூட்டி விட்டால், அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விடுங்கள். ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டு எஸ்ஸாகி இருந்தால் கூட, வாங்க.. உக்காருங்க.. வருகைக்கு நன்றி, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்ற ரீதியில் நான்கு பின்னூட்டங்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

11) லட்சம் ஹிட்ஸ் பெற ஆதரவளித்த வாசகப் பெருமக்களுக்கு நன்றி எனத் தலைப்பிடலாம். 'இவ்வளவு பிரபலமான பதிவரைத் தவறவிட்டுட்டோமே!' என்று வருபவர்களுக்கு, பாட்ஷா ரஜினி போஸ்டருடன் 'நான் ஒரு ஹிட் எடுத்தா நூறு ஹிட் எடுத்த மாதிரி' என்று பன்ச் டயலாக்குடன் வெறியேற்றலாம்.

8) அதிக பின்னூட்டங்கள் பெறும் பதிவில், 'இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன்' என்று பின்னூட்டலாம். ஆனால் பின்னூட்டும் முன் அந்தப் பதிவை ஒரு முறை படித்து விடுவது நல்லது. அப்பதிவு அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழாவைப் பற்றியதாய் இருந்து, நீங்களும் அதைப் பற்றி எழுதியதாகப் பின்னூட்டி.. ரணகளமாகிவிடும்.

9) அதிக ஹிட்ஸ் பெற விரும்புபவர்கள் 'குங்குமத்தில் நான்' எனத் தலைப்பிடலாம். நம்ம பதிவர் வெகுஜன ஊடகத்தில் வந்திருக்கிறாரே என்று ஆவலாக வருபவர்களை ஏமாற்றாமல், நீங்கள் குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த குங்குமத்தில் நான் அழகா இருக்கேனா?' என்று கேட்டு கட்டையைக் கொடுக்கலாம்.

அல்லது 'ஆவியில் நான்' எனத் தலைப்பிட்டு இட்லி ஆவியிலோ, நீராவியிலோ முகத்தை நுழைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிடலாம். பேய், பிசாசு வகை ஆவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தால் கூடுதல் நலம்.

7) அநியாயத்துக்கு எழுத்துப் பிழைகளுடன் டைப்பவும்(தலைப்பு, உங்கள் பெயர் உட்பட). யாராவது தமிழ் ஆர்வலர்கள் தமிழைக் கொலை செய்வதைக் கண்டு பொங்கி 'உன் படைப்பில் பிழை இருக்கிறது' என்று பின்னூட்டக் கூடும்.

இப்பதிவில் உள்ளது போல, எண்களை வரிசைப்படி போடாமல், உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி போடலாம். 'அருமையான பின் நவீனத்துவ படைப்பு' என்று சில அப்பிரானிகளும், 'ஒன்னு ரெண்டு கூட தெரியல. நாதாரி நீயெல்லாம் என்னத்துக்குடா பதிவெழுதுற?' என்று பல அறிவு ஜீவிகளும் பின்னூட்டக்கூடும்.

12) 'அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்' என்று தலைப்பிட்டு இந்த மாதிரி மொக்கை போடாமல் சீரியஸான யோசனைகள் தரலாம்.

அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்

Tuesday, 10 March 2009

1) இயற்கையிலேயே, நீங்கள் சாலையில் போகிறவர் கூப்பிட்டு செவிட்டிலறைந்தாலும் சிரித்துக் கொண்டே இன்னொரு கண்ணத்தைக் காட்டும் சாத்வீகவாதியாக இருக்கலாம். ஆனால் பதிவராகி விட்டால், அநியாயத்தைக் கண்டு பொங்கி எழ வேண்டும்.

உதாரணமாக உங்கள் வீட்டின் செப்டிக் டேங்கில் அடைப்பு என்றால், 'போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்' என்று தலைப்பிட்டு செப்டிக் டேங்கின் புகைப்படத்துடன் பதிவிடலாம்.

2) பின்வரும் வாக்கியங்கள் இறுதியில் 'இப்போதும் கண்டுகொள்ளவில்லையா?' என்று சேர்த்துப் படிக்கவும்.
அ. பிரபலமாகி விட்ட ஏதாவது ஒரு பழம்பெரும் பதிவரைப் பற்றி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து, 'என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்ற ரீதியில் பதிவிட்டு, அவர் பெயரையே தலைப்பாக்கி, அவர் வலைப்பூவைப் பின் தொடருங்கள்.
ஆ. தலைப்புடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை அவர் பதிவில் பின்னூட்டுங்கள்.
இ. மின்னஞ்சலில் உங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பி, உங்கள் கருத்து என்ன என்று கேளுங்கள்.
ஈ. வேறு வழியே இல்லை. ஆப்பிளையோ, ஆரஞ்சையோ வாங்கிக் கொண்டு நேராக அவர் வீட்டுக்கு கணினியுடன் சென்று பின்னூட்டம் வாங்கி விடுங்கள்.
உ. அப்படியும் பின்னூடம் போட மறுத்து விட்டாரா? மனம் தளராமல் வேறொரு பதிவரை வைத்து 'அ'விலுருந்து ரகளையை மறுபடி ஆரம்பிக்கவும்.

3) Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.

Profileலோடு நிறுத்தி விடாமல் உங்கள் ஜாரியின் அல்லது பெண்ஜாதியின் அணுபவங்களைத் தொகுத்து 'சுமாராக இல்லாவிட்டாலும் சூப்பராக இருக்கும் ஃபிகரின் அனுபவங்கள்' என்று பதிவெழுதலாம். என் ஆள் சூப்பர் ஃபிகர் இல்லையே என்று கேட்கக் கூடாது. உலகில் இரண்டு வகைப் பெண்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று அழகாக இருப்பவர்கள். இரண்டாவது அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள்.

4) லேட்டஸ்ட் ட்ரென்ட் என்னவோ அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக யாராவது கலைமாமணி விருது கொடுத்தால், நீங்கள் கொலைமாமணி விருது கொடுக்க வேண்டும். யாராவது 'ஆயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்டால், நீங்கள் 'பாயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்க வேண்டும்.

'பாயா எப்படி பதில் சொல்லும்?' என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆயா மட்டும் பதில் சொல்லப் போகிறாரா என்ன?

5) பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டும் போது மறந்து கூட ஸ்மைலியோ, ரிப்பீட்டோ போட்டு ஆமாஞ்சாமி போட்டு விடக் கூடாது. என்ன சொன்னாலும் மறுத்துப் பேச வேண்டும்.

உதாரணமாக காந்தியைக் கொன்றது கோட்சே என்று பதிவிட்டிருந்தால், 'இல்லை. காந்தியை சுட்டது எங்க பின் வீட்டு ஆயா தான். வீடியோ ஆதாரம் இருக்கிறது' எனலாம். 'எவன்டா இந்த லூசுப்பய' என்று பலர் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், 'வலையுலக சுப்பிரமணிய சுவாமி' என்று தமிழ்மணமோ, இட்லி வடையோ, குசும்பனோ ஏன் சோம்பேறியோ கூட விருது தர வாய்ப்பிருக்கிறது.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை..

தொலைக்காட்சியில் தோன்ற சில (விபரீத) யோசனைகள்

Friday, 6 March 2009

1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.

2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் சி**ர் கழித்துக் கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.

3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.
4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.

5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.

6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)

7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.

இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.

இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். (அதான் எல்லாத்தையும் நீயே சொல்லிட்டியே!)
Blog Widget by LinkWithin
 
◄சோம்பேறி. Design by Pocket►