நிராகரிக்கப் பட்ட என் படைப்பு

Monday 23 March, 2009

Views

இதுவே என் கடைசி படைப்பு. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக பாவிக்க நான் கௌதம புத்தனல்ல. மரணத்தை விட கொடியது நிராகரிப்பு என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்த ஒரு படைப்பிற்காக என்னை தயார் செய்து கொள்ள, எத்தனை புத்தகங்களை படித்திருப்பேன். எவ்வளவு நேரத்தைக் கொன்றிருப்பேன். இது குப்பையில் வீசப்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை.

தோல்வி தான் வெற்றியின் முதல் படி என்று யாரும் தயவுசெய்து அறிவுரைக்க முயலாதீர்கள். இது வரை தோல்வி எனக்குப் பரிசளித்த படிகளில் ஏறி எவெரெஸ்ட் உச்சியையே அடைந்திருக்கலாம். இது என் முதல் தோல்வி அல்ல. ஆனால் இதுவே என் கடைசி தோல்வியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாலேயே இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன். என்னை வாழ்வின் விளிம்பிற்கே கொண்டு சென்ற அந்தப் படைப்பை இப்பதிவின் இறுதியில் காணலாம்.

பார்த்தீர்களா? இதில் என்ன குறை?

என் முதல் படைப்பு சிறிய மாற்றத்துடன், நல்ல வரவேற்ப்பைப் பெற்றது என்றாலும், அது எனது என்று யாரிடமும் சொல்லிக் கொள்ள முடிய வில்லை. வேறு ஒருவர் என் படைப்புக்காக பாராட்டப் பட்டதைப் பார்த்த போது கூட மௌனமாக மனதிற்குள்ளே மருக தான் முடிந்தது. பாராட்டப் பட்டது என் தாயாக இருந்தபோதும் கூட.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, ஒரு கொசுவர்த்தி சுருளை கம்பியில் செருகி, இரண்டு கைகளாலும் வலப்புறமாக சுற்றவும். போதும். இப்போது ஒரு வாரம் பின்னோக்கி வந்து விட்டீர்கள்.

உருளைக் கிழங்கு சூப் செய்வது அவ்வளவு எளிது என்று சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன், அந்த புத்தகத்தை மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால்.. தேவையான பொருட்கள் நான்கு தான். வெங்காயம், உருளைக் கிழங்கு மற்ற இரண்டும் மறந்து விட்டது. இப்போதல்ல அப்போதே.. குறிப்பு இருந்த புத்தகத்தையும் எங்கே வைத்தேன் என்று மறந்து விட்டது. சூப் செய்வதில் தானே முன் அனுபவம் இல்லை. சாப்பிடுவதில் இருக்கிறதே என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் தொடர்ந்தேன்.

வெங்காயத்தையும் உருளைக் கிழங்கையும் மிக்ஸியில் மையாக அரைத்து பாதி கிணறு தாண்டியாகி விட்டது. மீதி கிணற்றை பாராசூட் உதவியுடனாவது தாண்டி விட வேண்டும் என்ற வெறியுடன், குத்துமதிப்பாக சமையலறையில் இருந்த மசாலா தூள், மிளகுத் தூள், சிக்கன் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், காலி ப்ளவர் படம் போட்ட பெயர் ஞாபகம் இல்லாத ஒரு தூள், க்லோப் ஜாமுன் படம் போட்ட தூள் எல்லாம் கலந்தாகி விட்டது. தெய்வாதினமாக, பாத்திரம் விளக்க உபயோகப் படுத்தும் சபீனா தூளை வானலியில் கொட்டும் முன் பார்த்து விட்டேன். கொஞ்சம் ஓவராத்தான் போறமோ என்று தோன்றியதால், அதோடு நிறுத்தி விட்டு சுவை பார்த்தேன்.

மனதைத் தொட்டு சொல்கிறேன். எனக்கு ஜென்ம விரோதி என்று யாரும் இருந்தால், அவர்களுக்கு இதைத் தான் கொடுத்திருப்பேன். வாயிலேயே வைக்க முடிய வில்லை. இருந்தாலும் முதல் படைப்பல்லவா? கீழே கொட்ட மனமில்லாமல், யாருக்கும் தெரியாமல் தோசை மாவுடன் அதைக் கலந்து விட்டேன்.

அந்த தோசையைப் பாராட்டாதவர்கள் யாருமே இல்லை எனலாம். நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து என் அப்பா 'கலக்கிட்டடி. இந்த மாதிரி ஒரு தோசையை நான் சாப்பிட்டதே இல்ல' என்று என் அம்மாவைப் பாராட்டிய போது கூட வாய் பொத்தி அழ முடிந்ததே தவிர, அது என் படைப்பு என்று வாய் திறந்து சொல்ல முடிய வில்லை.

அந்த அனுபவம் கொடுத்த துணிச்சலில் தான், நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த முட்டை தோசையை பலரறிய வார்க்கத் துணிந்தேன். என் சொந்த வீட்டிலேயே அது நிராகரிக்கப் பட்ட கொடுமை ஒரு புறம் இருக்க, அக்கம்பக்கத்தார் கையில் பாத்திரத்துடன் என்னை பார்த்ததும், அவர்கள் வீட்டு கதவில் 'நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நபர், நீங்கள் கிளம்பும் வரை தொடர்பு எல்லைக்குள் வரவே மாட்டார்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன், அவர்கள் மேலுள்ள பாசத்தைக் காட்ட, அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசால் பொடியுடன் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுத்ததிலிருந்தே இப்படித் தான் ஓடி விடுகிறார்கள்.
முதல் பக்கம் மறுபக்கம்

ஓரத்தில் கொஞ்சம் சாப்பிடப் பட்டிருக்கிறதே என்று உங்களைப் போல தான் நானும் மகிழ்ச்சியடைந்தேன், சமையலறையில் செத்துக் கிடந்த அந்த எலியைப் பார்க்கும் வரை..

15 மச்சீஸ் சொல்றாங்க:

கோவி.கண்ணன் said...

//'நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நபர், நீங்கள் கிளம்பும் வரை தொடர்பு எல்லைக்குள் வரவே மாட்டார்' //

:))) அப்பாடா தப்பிச்சார்

பாலா said...

தேவுடா.. நான் ஒரு லூசு. ரொம்ப ஃபீலிங்கா கீழ வரைக்கும் படிச்சேன். கர்ர்ர்ர்! :-)

♫சோம்பேறி♫ said...

/*கோவி.கண்ணன் said...
:))) அப்பாடா தப்பிச்சார்*/

கதவைத் திறந்து தானே ஆகனும். இன்னும் அந்த தோசையைக் கீழே போடாமல் பத்திரமாக தான் வைத்திருக்கிறேன்.

/*ஹாலிவுட் பாலா said...
தேவுடா.. நான் ஒரு லூசு. ரொம்ப ஃபீலிங்கா கீழ வரைக்கும் படிச்சேன். கர்ர்ர்ர்! :-)*/

ஹஹா:-) நான் போகிறேன் என்று நினைத்து ஃபீல் செய்ததற்கு நன்றி பாலா. மிகவும் நெகிழ்ந்தேன்.

நீங்கள் sin city பற்றி கண்டிப்பாக எழுதவேண்டும். சரவண குமார் நன்றாக எழுதியிருந்தார்(ஓட்டு கூட போட்டேன்). ஆனால் மிக சுருக்கமாக முடித்து விட்டார். இந்த மாதிரி படங்களின் முழுக்கதையையும் வரிக்கு வரி சொன்னாலும், படம் பார்க்கும் சுவாரசியம் அதிகரிக்குமே தவிர குறையாது.

ஒரு வாரம் கெடு உங்களுக்கு. அதற்குள் நீங்கள் sin city பற்றி எழுதாவிட்டால், நானே எழுதும் அபாயம் நேரலாம்.

பி.கு:religious விமர்சனம் மற்றும் பின்னூட்ட விவாதங்கள் அருமை.

kuma36 said...

முதல் முதலாக வந்தேன் உங்க வீட்டுக்கு சாப்பாடு நல்லாயிருந்ததுங்க!

Anand said...

Mr.Sombari... Nijamaave unga padaipu pakka humorous-ah irunthuchu :))))

♫சோம்பேறி♫ said...

/*கலை - இராகலை said...
முதல் முதலாக வந்தேன் உங்க வீட்டுக்கு சாப்பாடு நல்லாயிருந்ததுங்க!*/

நல்வரவாகுக.. ரொம்ப நன்றிங்க! உங்க அட்ரஸ் சொனீங்கன்னா, எங்க வீட்டு தோசையை உங்களுக்கு பார்சல் அனுப்புறேன்.

/*MSA said...
Mr.Sombari... Nijamaave unga padaipu pakka humorous-ah irunthuchu :))))*/

நன்றிகள் MSA. ஆமா.. நீங்க எந்த படைப்ப சொல்றீங்க?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நகைச்சுவை சாதாரணமாக உங்களுக்கு வருகிறது வாழ்த்துக்கள்

♫சோம்பேறி♫ said...

/*SUREஷ் said...
நகைச்சுவை சாதாரணமாக உங்களுக்கு வருகிறது வாழ்த்துக்கள்*/

மிக நன்றி SUREஷ்

☀நான் ஆதவன்☀ said...

கலக்கிட்டீங்க சோம்பேறி (வயறை தான்.. பின்ன இந்த மாதிரி செஞ்சா?)

♫சோம்பேறி♫ said...

/*நான் ஆதவன் said...

கலக்கிட்டீங்க சோம்பேறி (வயறை தான்.. பின்ன இந்த மாதிரி செஞ்சா?)*/

நன்றி ஆதவன். பாத்ததுக்கே இந்த கதின்னா சாப்பிட்டவன் உசுரோட இருப்பான்னு நினைக்கிறீங்களா?

Anonymous said...

aahaa...

♫சோம்பேறி♫ said...

/*♥ தூயா ♥ Thooya ♥ said...
aahaa...*/

நன்றி ♥ தூயா ♥

Anonymous said...

பதிவும்(படைப்பு அல்ல), உங்க மறுமொழிகளும் கலக்கலோ கலக்கல். :-௦௦௦)))

//அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசால் பொடியுடன் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுத்ததிலிருந்தே//

நெசத்தை சொல்லுங்க. 'கொலை முயற்சி' ன்னு யாரும் உங்க மேல பிராது குடுக்கலையா?

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...
பதிவும்(படைப்பு அல்ல), உங்க மறுமொழிகளும் கலக்கலோ கலக்கல். :-௦௦௦)))*/

மிகவும் நன்றி அனானி மச்சி..

/*நெசத்தை சொல்லுங்க. 'கொலை முயற்சி' ன்னு யாரும் உங்க மேல பிராது குடுக்கலையா?*/

பிராது கொடுத்திருந்தால் அடியாள் வைத்தாவது, அவர்களை என் படைப்பை சாப்பிட வைத்திருப்பேன் என்று அவர்களுக்குத் தெரியும்.

சென்ஷி said...

ம்ம்ம்ம் :))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket