என்ன பதிவிடுவது என்று மண்டை காய்ந்து புலம்பியிருந்த நன்பர் ராகவனுக்கு என்னால் இயன்ற சில டிப்ஸ்.
1) அரசியல் பதிவிடுவதற்க்கு நீங்கள் புலம்புமளவு, உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நகைச்சுவையாக எழுத விரும்பினால், நமது அரசியல்வாதிகளின் சென்ற மாத அறிக்கையையும், இந்த மாத அறிக்கையையும் அட்சரம் பிசகாமல் பிரசுரித்து விட்டு ஒரு புன்னகையை(ஸ்மைலி) மட்டும் இணைத்து விடுங்கள். 'அது போன மாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்' என்பதைத் தலைப்பாகவோ, இறுதியில் பன்ச்சாகவோ வைத்துக் கொள்ளலாம்.
சீரியசாக பதிவிட விரும்பினால், அதே அறிக்கைகளில் :-)க்கு பதில், 'மக்கள் என்ன மண்னாங்கட்டியா?' போன்ற நாலு வசவுகளை இனைத்துக் கொள்ளுங்கள். 'டேய்.. ங்கோ**** பசங்களா' போன்ற வார்த்தைகள் இனைத்திருந்தால் கூடுதல் நலம். அதே வார்த்தையைத் தலைப்பில் சேர்க்கும் தில் உங்களுக்கு இருந்தால், மிகக் கூடுதல் நலம். சூடான இடுகையில் இடம் பிடித்து விடலாம்.
2) 'சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டா அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம்' என்று காத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதெப்படி அவர்களாகக் காணாமல் போவார்கள். நாம் தான் ஆவன செய்து, அவர்களை விரட்டி விட்டு 'நண்பா! எங்கே நீ?' என்று பதிவிட வேண்டும்.
3) கவிதை எழுதுவது சப்ப மேட்டர். நீங்கள் கவிதையென்றால் காத தூரம் ஓடுவேன் என்று குறிப்பிட்டுள்ளதால், அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.
4) ஏதாவது ஆப்பிரிக்க, அண்டார்டிக்க கொலை ஸாரி கலைப் படங்களை டிவிடியில் பார்த்து விட்டு திரை விமர்சனம் எழுதுங்கள். முழுப்படமும் பார்த்து மண்டை காய வேண்டிய அவசியமில்லை. Fast forward செய்து ஓட விட்டு, அரை மணிக்கொரு முறை பாஸ் செய்து, சப் டைட்டிலில் என்ன வசனம் வருகிறதோ அதைக் குறிப்பிட்டு 'அங்கன தான் நிக்காரு டைரடக்கரு' என்ற ரீதியில் எழுதலாம்
தமிழ் படமென்றால் ட்ரைலரோ, போஸ்டரோ மட்டும் பார்த்தால் போதும். அதில் எல்லாப் பதிவர்களாலும் சிலாகிக்கப்படும் ஒரு வி.ஐ.பியைப் பற்றி திட்டி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளலாம். உதாரணமாக, 'காதல் படமென்றால் ரொமாண்டிக்காகத் தான் இசையமைக்க வேண்டுமென ஏ.ஆர்.ரஹ்மானுக்கு யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்' என்று எழுதினால், ரஹ்மானை விட நீங்கள் புத்திசாலி என்று படிப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
4) சரக்குள்ள பதிவு தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பத்தால், 'சரக்குள்ள பதிவு' என்று தலைப்பிட்டு, உள்ளே பதிவில் கீழ்கண்ட சரக்குகளின் படங்களை வெளியிடலாம்.


5) 'பார்ப்பீனியம் என்றால் என்ன?' என்று தலைப்பிட்டு, பதிவில் 'என்ன? எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் உங்களைக் கேட்கிறேன். தயவுசெய்து யாராவது விளக்குங்கள்' என்று பதிவிட்டுப் பாருங்கள்.
பிறகு புற்றீசல் போல, இரண்டு க்ரூப்பிலிருந்தும் வரும் கருத்துரைகளுக்கு 'ஹேய்.. நோ.. நோ பேட் வேர்ட்ஸ்', 'மம்மி பாவம்', 'டாடியும் பாவம்', 'மீ? ஐ ஆம் ஈட்டிங் ஒன்லி ஃபுட்ஸ்', 'டோட்டல் ஃபேமிலி டேமேஜ்', 'மீ அவா நோ' போன்ற பதில்களை முதலில் வரிசைக்கிரகமாகவும், பின்பு ரேண்டமாகவும் போட்டு வாருங்கள். நிச்சயம் எல்லா கருத்துரைகளுக்கும் பொருந்தும் அளவு பதில் சொல்லியிருப்பீர்கள்.
6) ஏதாவது பேட்டி வெளியிடலாம். 'ரஜினிகாந்த் நைஜீரியா வரட்டும். அவரைப் பேட்டியெடுத்துப் பதிவிடுகிறேன்' என்றெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சென்ற பேட்டியில் பேசியதையே திரும்பத் திரும்ப வேறு வார்த்தைகளால் பேசிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் பேட்டியை விட, அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி வலம் வரும் யாராவது ஒருவரின் பேட்டி சுவாரசியமாக இருக்கும். (பிரபலங்களும் பாவம் தான். ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தால் ஒரே பதிலை தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.)
திநகர் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்து வயது மதிக்கத் தக்க சின்னப் பெண் சொன்ன கதை இருக்கிறதே! அந்தக் அழகான களையான குட்டி கருப்பு முகமும், அதற்கு மிகப் பொருத்தமான பாப் கட் சிகையும், அவள் அழகைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதும் சட்டையைக் கடித்துக் கொண்டே வெட்கத்துடன் சிரித்த சிரிப்பும், 'உங்க அப்பா எங்க?' என்ற கேள்விக்கு குலை நடுங்க வைக்கும் அந்தக் கதையை, இரும்புக் கம்பத்தைக் கட்டிக் கொண்டே புன்னகையும் வெட்கமும் மாறாமல் சொன்ன விதமும் எந்தத் திரைப் படத்திலும் இதுவரை வராதது.
கற்பனை வறட்சியால் நமது கலாச்சாரத்துக்கு ஒத்தே வராத ஆங்கில, ஜப்பானிய திரைப்படங்களின் கதைகளை உருவும் இயக்குனர்களும், அழகான மலையாள திரைப்படங்களில் மசாலா சேர்க்கிறேன் என்ற பெயரில் கேவலப்படுத்தி உயிரை வாங்கும் இயக்குனர்களும், காதைக் கிழிக்கும் அட்டர் ஃப்ளாப்பான தெலுங்குப் படங்களை மொழிபெயர்த்து நம் முழியைப் பெயர்க்கும் இயக்குனர்களும் மேற்கூறிய யோசனையைப் பின்பற்றலாம்.
டிவிடி வாங்க ஆகும் 25 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஐந்து ரூபாயும் கொஞ்சம் புன்னகையும் போதும்.