எம்.எல்.ஏ விடுதி வாசலில் ஏதோ தண்ணி பிரச்சனைக்காக நடிகர் சங்க கூட்டம். நயன்தாரா கூட வந்திருக்கிறாராம். அந்தப் புண்ணியவதியால் ஏற்பட்ட அதீத வாகன நெரிசல் காரணமாக, திருவல்லிக்கேணிக்கு போக வேண்டிய பேருந்து, மவுண்ட் ரோடிலேயே அனைத்துப் பயணிகளுக்கும் டாட்டா காட்டி விட்டுத் திரும்பியது. ஒலிப்பெருக்கியில் ராதாரவி குரல் மவுண்ட் ரோடு வரை அதிர்ந்தது. திரையில் காணக் கூடிய துணை நடிகர்கள் முகங்கள் சாலையில் சர்வசாதாரணமாய் தென்பட்டது.
அந்தக் கூட்டத்தைத் தாண்டி தான் லிஸியும், நித்தியும் போக வேண்டிய சென்னைப் பல்கலைக் கழக மகளிர் விடுதி. லிஸி அவள் கிராமத்திலிருந்து சென்னை வந்த இந்த ஒரு வருடத்தில், ஊர்க்காரர்களிடம் நான் கமலுடன் காப்பி சாப்பிட்டேன், சூர்யாவுடன் சூப் சாப்பிட்டேன் என்று அளந்து விட்டிருந்தாலும், மண்டை மனோகரைத் தவிர வேறு எந்த நடிக நடிகையரையும் நேரில் பார்த்ததில்லை. இப்போது நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்றதும், கைபேசியிலிருந்த காமெராவை தயாராக வைத்துக் கொண்டாள்.
அவள் நினைத்ததை விட ரொம்பவே பெரிய கூட்டம். பெண்கள் சிலர் எக்கி எக்கி, மேடையை எட்டிப் பார்க்க முயன்று தோற்று, தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமென திரும்பி நடந்தார்கள். அவளும், நித்தியும் 'எக்ஸ்க்யூஸ் மீ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்றபடி நெரிசலான கூட்டத்திற்குள் ஒரு வழியாகப் புகுந்து விட்டார்கள்.
கூட்டத்தில் ஒருவன் லிஸி மேல் விழ, திடுக்கிட்டவள் சமாளித்துக் கொண்டு ஸாரி கேட்கப் போகிறானென நினைத்து 'இட்ஸ் ஓக்கே' என்றபடி திரும்பினாள். ஆறரை அடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த அவன், சொத்தைப் பல்லைக் காட்டி ஒரு மாதிரியாக சிரிக்க, 'ராஸ்ஸ்ஸ்ஸ்கல்' என்ற முனுமுனுப்புடன் முறைத்தபடி, நித்திக்குப் பின்னால் பத்திராமாக ஒண்டிக்கொண்டு, 'சீக்கிரம் போடீ' என அவசரப்படுத்தினாள்.
மறுபடி தகறாரான இடத்தில் கை வைக்கப்பட, 'உன் சொத்தைப் பல்லைப் பேத்துடுறேன் பாரு' என்பது போல் திரும்பி முறைத்தால், இது தலையில் காரக்கொழம்பு கொட்டிக் கொண்ட கிழிந்த ஜீன்ஸ்காரன். அதற்குள் வேறொரு பக்கத்திலிருந்து இன்னொரு ஐம்பத்தி சொச்ச வயசு வாலிபன், இன்னொரு குப்பத்துக் கிழிந்த பனியன்காரன், இன்னொரு ஸ்கூல் யூனிஃபார்ம்காரன்.
ம்ம்ஹூம்.. பெரும்பிழை. இந்தக் கூட்டத்தில் நுழைந்திருக்கவே கூடாது. நித்தியை நிறுத்தி 'வந்த வழிலயே திரும்பிப் போயிடலாமாடீ. ப்ளீஸ்' என அழாத குறையாக கேட்க, 'நானும் ரொம்ப நேரமா வந்த வழியை தான்டி தேடிகிட்டிருக்கேன்' என்றபடி திரும்பிய நித்தியின் கண்களில் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி! சட்டையின் பொத்தான்கள் பிய்க்கப்பட்டிருந்தது.
திறந்தவெளி மிருகக்காட்சியில் காணாமல் போன குழந்தையின் மிரட்சியுடன், லிஸி கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பாதுகாப்பாக இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
கொஞ்சம் தள்ளி, கூட்டத்தின் வேறொரு பகுதியில் டீசண்டாக, டையெல்லாம் கட்டிக் கொண்டு நின்றவர்கள் (மேன்ஷன் வாழ் பெருமக்களாக இருக்கக் கூடும்) பக்கமாக நகர்ந்தார்கள்.. அப்போது எருமைமாடு போல, முழு விசையுடன் வந்து ஒருவன் அவள் மேல் மோத, தடுமாறி பின்னாலிருந்தவன் மேல் விழுந்தவள், நித்தியின் கையை விட்டுவிட்டாள். நித்தி மேன்ஷன்வாசிகள் பக்கம் அடித்து செல்லப்பட்டு விட்டாள்.
நல்லவேளையாக, அவன்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவன் கீழே தள்ளி விட முயன்றால், ஒருவன் வேறொரு பக்கம் இழுத்தான். ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கவும், தள்ளி விடுவதுமாக பந்தாடிக் கொண்டிருந்தான்கள். அவளோ நாலரை அடி குள்ளி. சுற்றியிருந்தவர்கள் கெடா போல் இருந்தார்கள். அவளுக்கு எது நித்தி போன பக்கம்; எந்தப் பக்கமாக நகர போராடுவதென்றே தெரியவில்லை. இந்த சொத்தைப் பல்லனை அவள் நுழையும் போதே பார்த்தாள். சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டாளா அல்லது அவன் இவளைத் தேடி உள்ளே வந்து விட்டானா! ஒன்றும் விளங்கவில்லை.

அவர்கள் இம்சை அதிகமாகவே, கையில் வைத்திருந்த கனத்த புத்தகத்தால், பதிலுக்கு தாக்கத் தொடங்கினாள். அவர்கள் மேலும் உற்சாகமடைந்து, புத்தகம், கைப்பை அனைத்தையும் பிடுங்கி எறிந்து விட்டு, அதிகமாக சீண்டினார்கள். இவளது அலறல் ஸ்பீக்கர் சத்தத்தில் ஒன்றுமில்லாமல் போனது. கத்தி கத்தியே சக்தி முழுவதும் போய் விட, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கொண்டே வந்தாள். கூடாது.. இப்போது மயங்கிக் கீழே விழுந்து விட்டால் சோலி முடிந்தது.
இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாவது சமாளித்து விட்டால் போதும். நித்தி யார் உதவியுடனாவது வந்து காப்பாற்றி விடுவாள், என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் தீ வைப்பது போல, நித்தியின் கதறல் வெகு அருகில் கேட்டது. அவளை விட நித்தி மோசமான நிலமையில் இருக்கிறாளெனப் புரிந்தது.
இப்போது சமக தலைவர் சரத்குமார் பேசுவார் என்ற அறிவிப்புடன் ஒலிப்பெருக்கி ஊமையானது. இது தான் சமயமென சக்தி முழுவதையும் ஒன்று திரட்டிய லிஸி 'யாராவது காப்பாத்துங்க. ப்ளீஸ்' என்று கத்த, அவளை சுற்றியிருந்தவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன், 'தலைவா' என்று மிகப் பெரிதாகக் கூக்குரலிட்டதில், அவள் குரல் ஒன்றுமில்லாமல் போனது.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நல்லவன் கூடவா இல்லை? வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாருமே நல்லவர்கள் தான் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. பக்கத்தில் தானே கடல் இருக்கிறது. சுனாமி வந்து ஒரே அள்ளாய் இவனுகளை அள்ளிக் கொண்டு போகக் கூடாதா!
கூட்டத்திலிருந்த அந்த சொத்தைப் பல்லன், எப்போது அவன் பக்கம் தள்ளப் படுவாள். எங்கே தொட்டால் கிக் அதிகமாக இருக்கும் என்று பேராவலுடன் காத்திருந்தான். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி இவன் தான் என்று முடிவு செய்து, அவனருகில் தள்ளப்பட்டதும் அவனை இறுக்க அணைத்துக் கொண்டு, 'ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என்னை எப்படியாவது வெளியே கொண்டு போய் விட்டுடுங்க ஸார்.. ப்ளீஸ்' என்று கதற, இதுவரை மன்சூரலிகான் போல கழுத்தை சாய்த்து கொண்டு லொக்கேஷன் தேடியவன், தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் வில்லன் போல திடீர் நல்லவனாகி 'த்தா.. டேய்.. உங்களைப் பெத்ததும் பொம்பளை தானடா' என்றவாறு ஒரு கையால் அவளை இறுக்கிக் கொண்டு, மறுகையால் மற்றவர்களைத் தள்ளி விட்டான்.
உதவியாக அவனது நண்பர்கள் போல இருவர், (அவர்களைத் தவிர) யாரும் தொட முடியாதபடி வந்து அவள் மீது அப்பிக் கொண்டனர். பாதுகாக்குறாங்களாமாம். தடவல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், நால்வரும் ஒருவழியாக அந்த ஜன சமூத்திரத்திலிருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.
அங்கே, தரையில் கால் வைக்கக் கூட இடமில்லாமல், ஒருவர் மீதொருவராக பலர் அமர்ந்திருந்தனர். அவன்களும் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லை. நோண்டியவர்களையும், காலை வாறி அவளைக் கீழே அமிழ்த்தி விட முயன்றவர்களையும், சமாளித்தவாறு, மேடைக்கருகில் நின்று கொண்டிருந்த போலீஸைப் பார்த்து 'ஸார்.. ஸார்..' என கத்த, அவரோ அப்போது மேடையில் ஆற்று ஆற்று என்று உரையாற்றிக் கொண்டிருந்த சரத்குமாரைப் பார்க்க தான் அவள் பரவசமாக பாய்ந்து வருகிறாள் என்று நினைத்தாரோ என்னவோ லட்டியை ஆட்டி 'இந்தப் பக்கமெல்லாம் வரக் கூடாது. போ' என்பது போல் சைகை செய்தார்.
"ஹாஸ்டல் ஸார்.. ஹாஸ்டலுக்கு போகனும்" என்று எரிச்சலும், பதற்றமுமாக விடுதியை நோக்கிக் கையைக் காட்டினாள்.
அவர் மூன்று அடி உயரத்தில் இருந்த தடுப்பைக் காட்டி, அந்தப் பக்கம் வழியில்லை, வந்த வழியே திரும்பப் போய் பீச் பக்கமாக சுற்றி விடுதிக்கு போகச் சொல்லி ரூட் காட்டினார்.
போலீஸைப் பார்த்த தைரியத்தில் காலை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு, நோண்டிக் கொண்டிருந்த ஒருவனை ஹை ஹீல்ஸ் செருப்பால் எட்டி உதைத்து, 'முண்டம்.. சோத்தை தானே திங்கிற' என்று கத்தினாள்.
இப்போது நிலைமை போலீஸுக்கு ஓரளவுக்கு புரிந்து போக, அங்கு நின்றபடியே விரல்களை அசைத்து வா என்பது போல் சைகை செய்தார். வந்து கொண்டிருந்த போதே ஒருவன் கை வைக்க, வேக நடையில் அங்கு வந்த போலீஸ் 'என்ன தைரியம் இருந்தா என் முன்னாலேயே கை வைப்ப' என்றபடி லட்டியால் அவன் தோள்பட்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார். நித்தி பற்றி சொல்ல, இரு காவலர்கள் உதவியுடன், முழுதாக கிழிந்து போன சட்டையும், தலைவிரி கோலமுமாக நித்தியும் வெளியே கொண்டு வரப்பட்டாள்.
நல்ல வேளையாக, இவ்வளவு களேபரத்தையும் பத்திரிக்கையாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பார்த்திருந்தால் டமால் பனால் என்று, எதுகை மொகனையில் அவர்கள் பரம்பரையே நாண்டு கொண்டு சாகுமளவுக்கு ஏதாவது எழுதியிருப்பார்கள். தெய்வாதீனமாக அப்போது நயன்தாரா பேசவில்லை. பேசியிருந்தால் அந்த போலிஸ்காரர் கூட அவர்களை கண்டு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!
'சுத்தி வந்தா என்ன?’ என்று போலீஸ் லெக்சரைத் துவங்கினார். முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுக்காட்டுக்கு எப்படி போறதுனு தெரியும்!
உதவிய(?!) அந்த மூவருக்கும் நன்றி சொல்ல திரும்ப எத்தனித்தாள். அடுத்த நாள் பஞ்சு மிட்டாய் கலர் பேண்ட், கிளிப்பச்சை நிற சட்டை போட்டுக் கொண்டு கையில் ரோசாப்பூவுடன் மூவரும் க்யூவில் நிற்கும் காட்சி, மனக்கண்ணில் 70MMமில் ஓடியதால், அந்த எண்ணத்தைக் கைவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென விடுதிக்குள் நுழைந்தனர்.
அறையை தாழிட்டதும், அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியாத நித்தி 'நீ மட்டும் சரியான நேரத்தில வரலைனா என் நிலமை என்ன ஆயிருக்கும்? ஜஸ்ட் எஸ்கேப்ட்.. தெரியுமாடீ! நல்ல வேளை அப்படி எதுவும் நடந்திருந்தா செத்துருப்பேன்' என புலம்பலுடன் கதற ஆரம்பித்தாள்.
எவனோ நாதாரி செய்த தவறுக்கு இவள் ஏன் சாக வேண்டுமென லிஸிக்கு புரியவில்லை. ஹ்ம்ம்ம்.. ஏனென்று கேள்வி கேட்டால் தான் கண்ணகியாக முடியாது என்று மட்டும் புரிந்தது.
(எங்க குலசாமி மேல் சத்தியமாக உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)