அதிஷாவின் வலைப்பூவை படிப்பது எப்படி?

Wednesday 29 April, 2009

முன் குறிப்பு: யார் மனமாவது புண்பட்டதாக அறியப்படும் பட்சத்தில் இந்த இடுகை அழிக்கப்படும்.

அதிஷாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) செம ஹாட் மச்சி, இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி(இந்தப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) மாதிரி இடுகைகள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம்.

(இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி என்றால் என்னவென்றோ, அதிஷா என்றால் த்ரிஷாவின் தங்கச்சியா என்றோ நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல. உட்கார்ந்த இடத்திலேயே ஓட முடியாவிட்டாலும் பொடி நடையாக நடந்தாவது போய் விடுங்கள்)

என்னதான் அப்படிப்பட்ட பதிவுகளின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை படிப்பதற்கோ, அது போல் எழுதுவதற்கோ தைரியம் இருப்பதில்லை. ஸேம் ப்ளட் என்று சொல்லும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.

யாம் பெற்ற இன்பக்கதைகள் பெறுக இவ்வையகம்.

* உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ உள்ளதிலேயே இருட்டான ஈசான மூலையைத் தேடிப் பிடித்து போய் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் மடிக்கணினி இருந்தால் பாத்ரூமில் போய் அமர்ந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.

* சோம்பேறி போன்ற அப்புரானிப் பதிவர்களின் தல புராணம், ஜல புராணம் போன்ற இடுகைகளைப் படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கவும். யாரும் உங்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள். இது தான் சமயம். கப்பென
அதிஷா ஆன்லைனை திறந்து விடவும். (தொழில்முறை போட்டி காரணமாகவும், இதைப் படித்து முடிக்கும் முன் அங்கு ஓடி விடக் கூடாது என்பதற்காகவும் முகவரி தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

* எப்படியோ உங்களை வலைப்பூவுக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. அடுத்த கட்டம் கொஞ்சம் டெக்னிக்கலாக இருப்பது போல் தோன்றினாலும், முக்கியமான கட்டம்.

சின்னப்புள்ளைத்தனமாக ஆன்லைனிலேயே படிக்கக் கூடாது. Save as போட்டு HTML file ஆக்கிக் கொள்ள வேண்டும். இப்போது bit_files, bit.html என்று இரண்டு ஃபைல்கள் உங்கள் கணினியில் இருக்கும். அதில் bit_filesஸில் நுழைந்து எடக்கு மடக்கான புகைப்படங்களை டெலிட்டி விடவும்.

அந்தப் படங்களுக்காகத் தான் அந்த வலைப்பூவிற்கே செல்கிறீர்கள் என்றால், அந்தப் படங்களை கட் செய்து, யாரும் சீண்டாத program files, E books போன்ற பகுதிகளுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும்.

அந்த புகைப்படத்தில் ஷகிலாவோ, சில்க் ஸ்மிதாவோ அல்லது நான்கு இன்ச்சுக்கும் குறைவாக பப்பரப்பா என்று உடுத்திக் கொண்டு பாப்பாக்களோ இருந்தால் வெற்றி உங்களுக்கே..! பல பிட்டுகள் உத்திரவாதம்.

* இப்போது படங்கள் எதுவும் இல்லாத அந்தப் பக்கங்களை எவ்வளவு சின்னதாக்க முடியுமோ அவ்வளவு சின்னதாக்கி ப்ரிண்ட் அவுட்(மினி ஜெராக்ஸ்) எடுத்துக் கொள்ளவும். (அந்தப் பக்கங்களைப் படிக்க பூதக் கண்ணாடி உங்கள் சொந்த செலவில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வ நிச்சயமாக கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ப்ரிண்ட் அவுட் எடுத்த பக்கங்களை உங்கள் மினரல் வாட்டர் பாட்டிலில் சூயிங்கம் ஒட்டியோ, டோப்பாவுக்குளோ, ஷூ ஹீல்ஸுக்குள்ளோ அயன் பட சூர்யா போல மறைத்து வைத்துக் கொள்ளவும். முடிந்தால் ஒரு பத்து உலக பட டிவிடிக்கள் வாங்கி புதிதாக முயற்சிக்கவும். (கம்பெனியே அபராதத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால், டிவிடிக்கள் கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ஆற அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும்(சம்பிரதாயமாமாம்). மூச்சு விடாவிட்டால் கணினியில் இருந்து ஒரு கை வந்து உங்கள் பொடனியில் தட்டி மூச்சுவிட சொன்னாலும் சொல்லும்.

* இப்போது தேர்வெழுதும் போது பிட் அடிக்கும் லாவகத்துடன், யாராவது பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே கேப் கிடைக்கும் போதெல்லாம், ப்ரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட தாள்களை சரக் சரக்கென்று உருவி படிக்கவும். (இதற்குப் பெயர் தான் பிட் இடுகையோ!)

* ஸ்ஸ்ஸ்ஸப்பாடா ஒருவழியா படிக்க ஆரம்பிச்சாச்சா! பின்னூட்டங்கள் ஆரம்பிக்கும் முன்னால் அதாவது தலைப்பு துவங்கி சரியாக இரண்டு வரிகளுக்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும். (ஒருவேளை பதிவு ஏமாற்றினாலும், பின்னூட்டத்தில் நிச்சயம் ஒரு துண்டு பிட்டாவது தேறும்.)

* பதிவை முழுமையாக படித்தபின் மறுபடியும் அதிஷா ஆன்லைனைத் திறந்து, அதில் 'இதெல்லாம் ஒரு பொழப்பா! தூ.. வந்துட்டானுங்க' என்று பின்னூட்டி விட்டு, அது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் தல புராணம் எழுதியதன் மூலம் இழந்த ஹிட்ஸை மீட்கலாம்.

அல்லது அதே பதிவை கதாபாத்திரங்களின் பெயர், ஊர் மட்டும் கொஞ்சம் ஆல்டர் செய்து, கிட்டத் தட்ட அதே தலைப்பில் பதிவிட்டு சூடான இடுகைக்கும் போகலாம்.

* இப்படி ஒரு வழியாக பிட்டு இடுகையை சே அதிஷாவின் இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி இடுகைகளைப் படித்து முடித்ததும் பரங்கிமலை ஜோதி ஆண்டவரை வணங்கி, வயிறு நிறைய பட்டை சாராயத்தைப் போட்டுக் கொண்டு பேசாமல் தனியாகப் படுத்து உறங்கவும்.

ஜோதி ஆண்டவரின் அருள் உங்களுக்கு சொந்தமாகுமாகிறதோ இல்லையோ, உங்களுக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த புண்ணியத்துக்கு எனக்கு நிச்சயம் கிடைக்கும்.

****************

பின் குறிப்பு அல்லது எச்சரிக்கை: உங்கள் நண்பர்கள் யாராவது இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி படிக்கிறார்களா என்று கேட்டுப் பார்க்கவும். அவர் பதில் சொல்லாமல் உங்களைப் பார்த்து வழிசலாக சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்தால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

*****************

இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக அதஷா போல எழுதுவது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

****************

ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா..

Monday 27 April, 2009

எங்க பக்கத்து வீட்டு குட்டி சக்திக்கு நாளைக்கு பரிட்சையாம். 'உன் கூட வெளையாடிக்கிட்டு இருந்தா நான் எப்ப படிக்கறது'னு சொல்லி வீட்டுப் பக்கமே வர்றதில்ல. அவ நல்லா பரிட்சை எழுத என் வாழ்த்துக்கள்(ஆதவன் எங்க இருக்கீங்க. வந்து வாழ்த்துங்க)

செம போர். நிஜமா சொல்றேன் இவ மட்டும் இல்லைனா நான் என்னிக்கோ ஒரு உருப்படியான வேலையில சேந்து கோடிக் கணக்குல இல்லன்னாலும் ஆயிரக்கணக்குலயாவது(அட.. நூத்துக் கணக்குலயாவது) சம்பாரிச்சிருப்பேன். அடுத்து ரெண்டாப்பு போறாளாம். அலப்பரை தாங்க முடியல. வர்ற ஆத்திரத்துக்கு பேசாம ஏதாவது வேலைக்குப் போயிடலாமானு இருக்குது.

'ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா.. இப்ப மட்டும் ரெண்டாப்பு படிச்சிருந்த.. செத்துருப்ப.. ரெட்டை ஸ்கேலால முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க தெரியுமா.. நல்ல வேளை தப்பிச்ச' அப்படிங்கறா.

இது கூட பரவாயில்ல. நேத்து என் கிட்ட வந்து 'உன் ரெண்டாப்பு புஸ்தகம் எனக்கு தர்றியாய்யா'னு கேக்குறா..

நான் போன வருஷம் பண்ணின ப்ராஜெக்ட் ரிப்போர்டே எங்க இருக்குதுனு தெரியல. ரெண்டாப்பு புத்தகத்துக்கு எங்க போக?

எப்ப பாத்தாலும் சுட்டி டிவி தான். அவ மட்டும் பாத்தா கூட பரவாயில்ல. அவ கூட சேந்து நானும் 'குதிங்க', 'குள்ள நரி திருடக் கூடாதுனு சொல்லுங்க', 'கோமாளித்தனமா டான்ஸ் ஆடுங்க'னு டோரா சொல்றதையெல்லாம் செய்யனும். இல்லைனா அடுத்த நாள் காலையில வந்து தூங்க விடாம பாடா படுத்துவா.

(நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அவ என் மேல வந்து பொத்துனு விழுந்ததும் 'சக்தீஈஈ'னு கத்தியே பழகிடுச்சா.. இப்ப பஸ்ல கூட்டத்துல யாராவது இடிச்சாலும் 'அய்யோ..அம்மா..' என்று கத்தாம 'சக்தி'னே கத்திடுறேன்.)

இந்த சுட்டி டிவிக்காரங்களும் ஒரு தடவ போட்ட எபிசோடையே திரும்ப திரும்ப போட்டுகிட்டு இருப்பாங்க. ஏன் பாத்ததையே திரும்பத் திரும்ப பாக்குறனு கேட்டா 'அப்பா மட்டும் நேத்து பாத்த செய்தியையே தினமும் பாக்குறாங்க'னு கேப்பா.

எங்கப்பாவும் என்னவோ எலெக்ஷன்ல எம்.பி. ஆகப் போற மாதிரி சன் செய்திகள், கலைஞர் செய்திகள் இவ்ளோ ஏன், செய்தி வாசிக்கற புள்ளையே திரும்ப பாக்காத ____ செய்திகளைக் கூட விடாம பாப்பாரு.

சக்தி என்னிக்காவது கையில பூவோட வந்தான்னா நான் தொலைஞ்சேன்னு அர்த்தம். எனக்கு பவுடர், கண்மை, பொட்டு, லிப்ஸ்டிக், மஸ்காரா எல்லாம் போட்டு விட்டு தலை வாரி, பூ வைச்சு சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆக்கிடுவா..

இவளை மாதிரி சென்னைல எங்க மாமா வீட்டுப் பக்கத்தில, ஸாம்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனத் தனியாளா சமாளிக்க முடியாம ஒரு நாள் அவன் அம்மா என்னையும் சர்ச்சுக்குக் கூப்பிட்டுப் போனாங்க.

பிரார்த்தனை பண்றவங்க முக்காடைப் பிடிச்சு இழுக்கிறது, பாதிரியாரை இமிடேட் பண்றதுனு சின்னமலை சர்ச்சே திரும்பிப் பாக்குறளவு நாங்க அடிச்ச லூட்டில, அவங்கம்மா சர்ச்சை விட்டு பாதியிலேயே வெளி நடப்பு செஞ்சு, எங்க பொடனியில அடிச்சு வீட்டுக்கு இழுத்துகிட்டு வந்துட்டாங்க.

அவன் எல்.கே.ஜி படிக்கிறான். இப்போ எக்ஸாம் முடிஞ்சிடுச்சாம். அவனுக்கும் என் பிலேட்டட் வாழ்த்துக்கள்.

போன் பண்ணி அவனை வாழ்த்தலாம்னா என் கூட பேச ஆரம்பிச்சதும் 'எப்போ வருவ'னு கேட்டு அழ ஆரம்பிச்சுடுவான், அப்புறம் என்னால இங்க இருக்க முடியாது. ஏதாவது இன்டர்வியூவை சாக்கா வச்சு சென்னை போக வேண்டியது வரும். அப்புறம் வேலை ஏதாவது கிடைச்சுடுச்சுன்னா அங்கேயே தங்க வேண்டியது வரும். சக்தியப் பாக்காமலும் இருக்க முடியாது:-(

நேற்றைய பந்த் எதற்காக? கண்டுபிடிச்சுட்டாருய்யா கொலம்பசு

Thursday 23 April, 2009

ஜெயலலிதா நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வை.கோ மற்றும் P.மோகனை ஆதரித்துப் பேச, முறையே சிவகாசி மற்றும் மதுரைக்கு விஜயம் செய்திருந்தார். 'அதைத் தடுப்பதற்காகவே கருனாநிதி இந்த 'பந்த்'தை அறிவித்திருக்கிறார்' என்று நான் சொல்லவில்லை; நேற்று ஜெயா டிவியில் மன்னிக்கவும் விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா சொன்னார்.

மேலும், ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்தவர்களுக்காக(குறிப்பாக அதிமுக தொண்டர் மணிக்காக) மௌன அஞ்சலி செலுத்தினார். இனி யாரும் அப்படி செய்யக் கூடாதென வேண்டிக் கொண்டார். தமிழ் திருநாட்டு அரசியல்வாதிகளின் செயல்களை ஊகிக்கவே முடிய வில்லை. நாளையே ஜெ கருனாநிதிக்காக ஓட்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதுரை கள்ளழகர் திருவிழாவின் போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்குவதன் மூலம் கள்ள ஓட்டு போட அழகிரி திட்டமிட்டிருப்பதாக ஜெ.க்கு செய்தி வந்திருக்கிறதாம். ஏன்யா ஏன்.. ஏன் அந்தப் பச்சப் புள்ளையைப் பாத்து ஏன் இவ்ளோ பயப்படுறீங்க. ஜெ யூ டூ?

ஜெ பேசிய போது, பல இடங்களில் சென்னையில் பேசியதை மறு ஒளிபரப்பு செய்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது. அதிலும், 'எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்' என்ற வசனம், 'நாளை நமதே நாற்பதும் நமதே' போல ஜெவின் மற்றொரு பன்ச் டயலாக் ஆகி விட்டது போல. அடிக்கடி ரிப்பீட்டுகிறார். மண்டபத்தில் எழுதிக் கொடுத்த மகானே, ரஸ்ய பட டிவிடிகளிலிருந்து சுட்டாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதித் தரவும்.

(ஜெ மட்டும் சென்னைக் கூட்டத்தில் பேசியதையே ரிப்பீட்டலாம். நான் அந்தப் பதிவில் எடுத்த புகைப்படத்தை ரிப்பீட்டக் கூடாதா?)

விளம்பர இடைவேளையின் போது, கருனாநிதி பேட்டி ஒளிபரப்பானது. அதில் ஒரு நிருபர் கருனாநிதியிடம் 'ஈழ பிரச்சனைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு கருனாநிதி 'தீக்குளிக்கப் போகிறேன். நீயும் வர்றியா' என்று கேட்கிறார். பின்னனியில் 'இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் ஒளிபரப்பாகிறது.

மிகவும் சுவாரசியமான விளம்பர உத்தி. முந்தைய தேர்தல் போல் மொக்கையாக, இருபது நிமிடங்களுக்கு ஜெ டாட்டா போடுவதையே காட்டாமல், இந்த முறை புதிதாக முயற்சித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு : நேற்று என் சித்தப்பா இந்தக் கூட்டத்தை (ஓரமாக நின்று வேடிக்கை) பார்க்கப் போயிருந்ததால், அவரை தொலைக்காட்சித் திரையில் பார்க்கும் அல்ப ஆசையின் விளைவாகவே ஜெயா டிவியில் இந்த கூட்டத்தைப் பார்த்தேன். மற்றபடி, இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.

என்னைப் பாத்தா @&$%^ மாதிரி இருக்கா?

கொலை வெறி என்பார்களே, அதில் எனக்கு விஜயகாந்த் போல கண்ணமெல்லாம் துடிக்க ஆரம்பித்து விட்டது. புரோட்டா குமார் வீட்டில் இருந்ததால், அவன் அம்மா முன் அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டவோ, கையில் கிடைத்த பொருளால் ஆத்திரம் தீர அடிக்கவோ முடிவில்லை.

மாதவி வீட்டிற்குப் போவதற்கு பொருள் வேண்டும் என்று கண்ணகியிடம் கேட்கப்பட்ட போது, அவளுக்கு கோவலனை வெட்டிப் போட வேண்டும் போல் கொலை வெறி வந்திருந்தாலும், சமூக மதிப்பீடுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, புன்னகைத்துக் கொண்டே பணம் எடுத்துக் கொடுத்திருப்பாளே! அது போன்ற புன்னகையுடன், அவனுக்கு மட்டும் தெரியும் படி காறித் துப்பி விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

என் ஐம்பது ரூபாய் நஷ்டத்தை விளக்க, கண்ணகி அக்காவை வம்புக்கிழுத்தது உங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான உருவகமாகத் தான் தோன்றும். ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் பில்லியன் திருட்டுப் போயிருந்தால், அது உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி. அதுவே, உங்களுடைய ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருந்தால்..

அவனவனுக்கு அவனவன் கஷ்டம் தான் பெரிது. அதிலும் குறிப்பாக இவன் மீது கொலை வெறி வரக் காரணம், அட்டர் ஃப்ளாப்பான எல்லா பிசினஸுக்குமே இவன் தான் பிள்ளையார் சுழி போட்டவன் என்பதால் மட்டும் அல்ல.

நேற்று வரை நாங்கள் லோடுகளுக்கு பில் போடுவதில்லை என்பதால் மற்றவர்களை விட ஒரு நாளைக்கு குறைந்தது, இரண்டாயிரத்து சொச்சம் லாபம் கிடைக்கும். கைபேசி கட்டணம் மட்டும் மாதம் ஐம்பது ரூபாய் அதிகமாய் வரும். மற்ற படி ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை.

இப்போது தேர்தல் நெருங்கி விட்டதால், அரசியல்வாதியான எங்கள் பார்ட்டியை அவர் எதிரிகள் கண் கொத்திப் பாம்பாக நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பில் போடாமல் பொருள் கொடுத்து, ரிஸ்க் எடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். இதனால் நாளுக்கு இருநூறு ரூபாய் நஷ்டம். டீலர்களும் ட்ரிப்பும் அதிகரிக்க அதிகரிக்க இந்த இருநூறு ரூபாய், முன்னூறு நானூறு என்று அதிகரித்துக் கொண்டே போகுமென்பதால், நால்வர் மொபைலும் ஸ்விட்ச் ஆஃபில் தான் இருக்கிறது.

மற்றவர்களைப் போல் இந்த இரு டீலர்களையும் கைபேசியிலேயே அனானியாக டீல் பண்ணியிருந்தால், இந்த இருநூறு ரூபாய் நஷ்டமும் வந்திருக்காது.

ஒன்னும் புரியலைல்ல. அது தான் எனக்கும் வேணும். ஏன்னா இது கொஞ்சம் இல்லீகல். யார் கிட்டயாவது புலம்பனும் போல இருந்தது. அதனால தான் உங்க கிட்ட மட்டும் சொல்றேன். நீங்க எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. முக்கியமா போலீஸ்ல போட்டுக் குடுத்துடாதீங்க..

இதற்கு முன் நேர்மையாக (போலீஸ் உத்தியோகம் பார்க்கவில்லை) கூரியர் அனுப்பும் கவர் பிசினஸ் தான் செய்து வந்தோம். இதில் அளவுக்கதிக லாபம் கிடைப்பதால் அதை அப்படியே கைவிட்டு விட்டோம். அதில் ஒருவர் எங்களிடம் மொத்தமாக ஐந்தாயிரம் கவர்கள் வாங்கி விட்டு, பணம் நாளை தருகிறேன் என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

நஷ்டத்தை கைக் காசிலிருந்து கொடுப்பதை விட அவரிடம் கொஞ்சம் கறாராகக் கேட்டு வாங்கி வா என்று புரோட்டா குமாரிடம் சொன்ன போது அவன் கூலாக 'அந்தாளு ஊரை விட்டு ஓடிப்போய் மாசக்கணக்குல ஆச்சே. அதான் பீர் இருக்கான்ல' என்றான்.

(பீர் (எ) ரன்பீர் தான் எங்கள் நண்பர் வட்டத்திலேயே வசதியானவன். இவன் தொழில்களுக்கு முதலில் முதல் போடும் இ.வா. அவன் தான். இப்போது என்னை விட கொலை வெறியுடன் பீர், குமாரைத் தேடிக் கொண்டிருக்கிறான். எதற்கு என்பது தேவையில்லாதது தான், என்றாலும் கடைசியில் சொல்கிறேன்.)

பொருப்பில்லாமல் 'பீர் இருக்கான்ல' என்று சொன்ன போது கூட எனக்குக் கொலை வெறி வரவில்லை. இவ்வளவுக்கும் ஊரை விட்டு ஓடிப்போனவன் இந்த செவிட்டு எழவு புரோட்டா குமார் பிடித்த கஸ்டமர் தான். செவிட்டு எழவு என்பது எங்கம்மா அவனுக்கு வைத்த செல்லப் பெயர். காதெல்லாம் ஒழுங்காகத் தான் கேட்கும். வேண்டுமென்றே தப்பு தப்பாக, கேட்ட கேள்விக்கு சம்மந்தமில்லாமல் பதில் சொல்வான் என்பதால் இப்பெயர்.

ஒரு முறை ஒரு குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தும் வைபவத்திற்காக கோவிலுக்கு வந்திருந்த கேட்டியிடம் 'என்ன இந்தப் பக்கம்' என்று கேட்டிருக்கிறான். அவள் 'மொட்டை போட' என்றதும் 'என்னது? புரோட்டா போடவா!' என்று கேட்டிருக்கிறான். (சோக் அடிக்கிறாராமாம்.. இதுக்கு நாங்க சிரிக்கோனுமாமாம்.)

இவனுக்கு செவிட்டு எழவு குமார், கொக்கி குமார், குவாட்டர் குமார், டோங்ரே குமார், மாயக்கா குமார் என ஆயிரத்தெட்டு பெயர்கள் இருந்தாலும் கேட்டி வைத்த காரணத்தால் புரோட்டா குமார் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டு வருகிறான்.

இன்னும் இரண்டு வருடத்தில், அவன் ஆள் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் அவன் ஒரு சொந்த வீடு கட்டியாக வேண்டும். 'இல்லையென்றால் டாட்டா காட்டி விட்டுப் போய் விடுவேன்' என்ற கண்டிஷனோடு தான் அவள் அவன் காதலையே ஏற்றாள்.

அதற்காக காளான் வளர்ப்பு, தேன் கூடு வளர்ப்பு முதல் திருட்டு டிவிடி வாடகைக்கு விடுவது, டேட்டா என்ட்ரி வரை அவன் முயற்சிக்காத பிசினஸே இல்லை. முதல் போடுவதற்கு இளிச்சவாயர்கள் நாங்கள் மூவரும் இருக்கும் போது அவனுக்கென்ன?

இது வரை இவன் தொடங்கிய எல்லா பிசினஸுமே பெருங் காமெடியாகத் தான் முடிந்திருக்கிறது. அதிலும் அவன் வளர்த்த தேனீக்கள் அவன் அண்ணியைக் கொட்டி விட, அவர் வரதட்சனைக் கொடுமை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இவனை காவல் நிலையத்தில் பப்பி ஷேமாக குந்த வைத்து கும்மி விட்டார்கள்.

அதிசயமாக இப்போது செய்து கொண்டிருக்கும் பிசினஸ் தான் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. இது இல்லீகல் என்று சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. நிறைய பணம் பார்த்து பழகி விட்டதால் 'நான் ஒருவன் திருந்தி விட்டால் இந்தியா முன்னேறி விடுமா?' என்ற டிபிகல் சமாதானத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இதையே வேறு யாராவது செய்வது தெரிந்திருந்தால், 'சீ.. சோத்தையா தின்றானுங்க இவனுங்க' என்ற தலைப்பில் அவர்களைப் பற்றி இதே வலைப்பூவில் எழுதியிருக்கக் கூடும். (அரசியல்வாதியாக இருக்கும் எங்கள் பார்ட்டியின் கட்சி தேர்தலில் வென்று விட்டால் தங்கம், வைரம் என்று பெரிய அளவில் ஸ்மக்லிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்)

புரோட்டா குமாருக்கு சினிமா பித்து அதிகம். நண்பர்கள் யாரிடமாவது தொலைபேசினால் அழைப்பை ஏற்றதும் ஹலோ என்று சொல்ல மாட்டான். சமீபத்தில் பார்த்த சினிமாவின் பன்ச் டையலாகை தான் சொல்வான். சிவாஜி வந்த புதிதில்,

யாரோ: ஹலோ

குமார்: கூல்

யாரோ: எப்படி இருக்க?

குமார்: கூல்

யாரோ: எங்கடா இருக்க?

குமார்: கூல்

ரெண்டு கெட்ட வார்த்தையில் திட்டும் வரை இதே கூல் தான் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கும்.

நேற்று குமார் பீரின் கைபேசிக்கு அழைத்திருக்கிறான். பீருடைய மொபைலின் கெட்ட நேரத்துக்கு குமார் அருந்ததியா பார்த்திருக்க வேண்டும். அவன் அம்மா காதில் மொபைலை வைத்தது தான் தாமதம், 'அடியேஏஏஏஏஏஏஏய் அருந்ததி' என்று குமார் பிளிறிய பிளிறில் மொபைலை எங்கே எறிந்தார்கள் என்றே தெரியவில்லை. தேடி எடுக்கும் போது பீஸ் பீஸாகி இருந்திருக்கிறது. மவனே அவன் வரட்டும் என்று கருவிக் கொண்டிருக்கிறான்.

கதை முடியப் போகுது.. கொலை வெறி எதுக்குனு இன்னும் சொல்லலையே! இந்த குமார் நாதாரி தியேட்டர் கட்டப் போறானாம். அதுக்கு நான் பணம் தரனுமாம்.. என்னைப் பாத்தா ____ ____ மாதிரி இருக்கா?

ஜெ அம்மனுக்கு ஆராதனை - ஜெயா டிவியிலும், தீவுத்திடலிலும்

Friday 17 April, 2009

ஓப்பனிங் ஷாட்டில், கையில் மைக்குடன் தோன்றிய ரவி பெர்னார்ட் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர் பட்டவர்களிடமெல்லாம், உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டு கலகலக்க வைத்தார். ஜெயலலிதா அப்போது எதிர்பட்டிருந்தால் அவரிடமும் மைக்கை நீட்டி, உங்கள் ஓட்டு திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்று கேட்டிருப்பார் போல..

யாகம் வளர்க்கையில், ஒவ்வொரு முறை நெய்யூற்றும் போதும் 'ஸ்வாகா' என்று மந்திரம் ஓதுவார்களே அது போல, முதன் முதலில் மேடையேறி பேசிய தலைமைச் செயலர் டி.ஜெய குமார் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும், 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லாவிட்டாலும் 18 முறையாவது 'ஸ்வாகா' ராகத்தில் சொல்லியிருப்பார்.

விவசாயிகள் துயர் துடைத்தது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா'

வீரப்பனின் அட்டகாசத்தை ஒடுக்கியது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்று ராகத்துடன் ஓதினார் மன்னிக்கவும் பேசினார்.


சுருக்கமாகப் பேசிய தா.பாண்டியன் அழகிரி ஜெயித்து விட்டால், கண்ணகி மதுரையை மீண்டும் எறித்து விடுவாள் என்ற ரீதியில் பேசிய போது, ஜெ முகம் க்ளோஸ் அப்பில் காட்டப் பட்டது. கை தட்டி சிரித்து ரசித்தார்.


அடலேறுகளே, பெரியோர்களே, தாய்மார்களே என்று ஜெ முதல் கடைசி மட்ட தொண்டர் வரை, ஒவ்வொருவரையும் தனித் தனியாக விளித்து வணக்கம் சொல்லவே வை.கோ.விற்கு ஐந்து நிமிடம் ஆனது.

எந்த வரையரைக்குள்ளுமே சிக்காதது தான் பின் நவீனத்துவம் என்றால், வை.கோவின் பேச்சு பின் நவீனத்துவ பேச்சு என்று அடித்துக் கூறுவேன். அவர் பேசியதில் பாதிக்கு பாதி வருணனைகள். அதில் பாதிக்கு பாதி எனக்குப் புரியவில்லை.

அடிக்கடி மேஜர் சுந்தரராஜன் போல் ஆங்கிலத்தில் பேசி விட்டு அதையே தமிழிலும் மொழி பெயர்த்தார்.

ஈழத் தமிழர் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு, 'சோனியா அம்மையாருக்கு சித்த பிரமைப் பிடித்திருக்கிறதா' என்று கேட்டு விட்டு, சட்டென சுதாரித்துக் கொண்டு 'மன்னிக்க வேண்டும். இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக' என்றும் கேட்டுக் கொண்டார்.


ராமதாஸ் அம்மனுக்கு பட்டு சார்த்துவது போலவே, ஜெ.க்கு பட்டு அங்கவஸ்திரம் போல் இருந்த ஒன்றைக் கொடுத்து விட்டு உரையை ஆரம்பித்தார். அவர் பேசும் போது நான் ஸூஸு போய் விட்டதால் என்ன பேசினார் என்று தெரியவில்லை.

ஆனால் நிச்சயமாக, மணல் கொள்ளையில் பங்கு தராததால் தான் திமுகவிடமிருந்து கோபித்துக் கொண்டு வந்தேன் என்றோ, அதிமுகவில் தான் இருப்பேன் என்று பச்சை குத்திக் கொள்ளப் போவதாகவோ பேசியிருக்க மாட்டார்.


பிரகாஷ் காரத் 'சகோதரி அவர்களே! எனக்குத் தமிழ் புரியும். ஆனால் சரியாகப் பேச வராது' என்று நமீதா தமிழ் பேசி தன் உரையை ஆரம்பித்துவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.


நிறைவாக பலத்த கர கோஷத்துடன் ஜெ பேச ஆரம்பித்தார். என்ன ஒரு கான்ஃபிடண்ட் லெவல் அவர் பேச்சில்! ஒரு நிமிடம் இதற்காகவே அவருக்கு வோட்டு போடலாமோ என்று தோன்றியது.. ஆள்காட்டி விரலை உயர்த்தி பேசுவது ஜெ.யின் மேனரிஸமா என்ன?

இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு முழு வெற்றி தர வேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றும் இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன் என்றும் சொல்லும் போது கூட ஆள்காட்டி விரலை உயர்த்தி, கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கும் தொனியில் தான் பேசினார்.
கடைசியில் நன்றி வணக்கம் என்று சொல்லும் போது தான் கை கூப்பினார்.

நான் செய்த பாவமோ கட்சிக்காரர்கள் செய்த புண்ணியமோ, அதிகம் எதிர்பார்த்திருந்த என்னை ஏமாற்றுவது போல் வேட்பாளர்கள் அறிமுகத்தின் போது, யாரும் ஜெ காலில் விழ வில்லை. சால்வை கொடுத்து கும்பிடு போட்டு விட்டு போய் விட்டார்கள்.

நான் பார்த்த வரை, யாருமே தி.மு.க. காங்கிரஸ் தவிர வேறு யாரையும் தாக்கி பேசவில்லை. ஆனால், மறக்காமல் ஈழத் தமிழர் பற்றி பேசினார்கள்.


இறுதியாகப் பேசிய . பண்ணீர் செல்வம், 'திமுக கூட்டணி திருடர்களோடு கூட்டனி.. அதிமுக கூட்டணி தெய்வத்துடன் கூட்டணி' என்று ஒரு போடு போட்டு கூட்டத்தை நிறைவு செய்தார்.


கூட்டம் நிறைவடைந்து ஜெயலலிதா மேடையை விட்டு இறங்கும் தருனத்தில் அவரை நிறுத்திய வை.கோ, சால்வை கொடுக்க மறந்த ஒரு வேட்பாளரை ஜெவிடம் அழைத்து சென்று சால்வை கொடுக்க வைத்து கும்பிடு போட வைத்தார்(எம்பூட்டு தெகிரியம்)

என் காதல் அனுபவம் அல்லது புனைவு - சங்கிலித் தொடர்(21- ஸ்பெஷல்)

Tuesday 14 April, 2009

இரவின் சூரியன் நிலா, தனது கதிர் கரங்களில் ஒன்றை, முகமெல்லாம் பல்லாக தன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த அல்லி மலர் மீதும், மற்றொன்றை என் தோள் மீதும் போட்டிருந்த ஒரு அழகான இரவில், ஒரு இழவுக்காக என் அத்தை மகள் வீட்டிற்க்கு சென்றிருந்தோம்(அத்தை வீடு என்றும் சொல்லலாம்).

வரவேற்பறையில், தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்த்தபடி, அவள் அம்மாவும் என் அம்மாவும் ஓடிப் போனவர்கள் பற்றிய புள்ளி விவரங்களைப் பறிமாரிக் கொண்டிருந்தார்கள். அவள் அப்பாவும், என் அப்பாவும் காரியமாகக் கிளம்பி வெளியே போய் விட்டார்கள்(இழவு வீட்டில் என்ன காரியம் என்று நான் விளக்கத் தேவையில்லை).

அவள் வீட்டுத் தோட்டத்தில் நிலாவுக்கு வயிறெரியும் அளவு அல்லியை நெருங்கி முகர்ந்து கொண்டிருந்த அந்தத் தனிமையான இரவிலே.. ஒன்றும் நடக்கவில்லை. அது தான் தனிமையான இரவு என்று சொல்லி விட்டேனே!

கொலுசின் ஜலஜலப்பு, வளையலின் சலசலப்பு, பட்டுப்பாவாடை சரசரப்பு சகிதம் ஒரு கை பின்னாலிருந்து என் கண்களைப் பொத்தியது. அவள் முழங்கை வரை(மட்டுமே.. நிஜம்ம்ம்மா) தடவிப் பார்த்து விட்டு 'ஹேய்.. கேட்டி' என்றேன்.

'ஹைய்யோ.. எப்படிடா கண்டுபிடிச்ச' என்று விழி விரிய கேட்டுக் கொண்டே, என் பக்கத்தில் வந்து அவள் அமர்ந்த போது, சங்க காலத்திலிருந்து பல கவிஞர்களுக்கும் தோன்றிய அதே சந்தேகம் எனக்கும் தோன்றியது. 'பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா' என்பது அல்ல. அழகுக்கும், அறிவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதோ என்று.

ஆனால், இத்தனை வருடங்கள் ஓங்கி அப்ப வேண்டும் போல கடுப்பேற்றிய அவள் லூசுத்தனம், இப்போது அள்ளிக் கொஞ்ச அவாவுறும் குழந்தைத் தனமாகத் தோன்றுகிறது. ஆறு மாதங்களுக்கு முன் கடவுளே வந்து 'நீ அவளைக் காதலிப்பாய்' என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன்.

'நீ மாடிப் படியில இறங்கி வரும் போதே பாத்துட்டேன். போதாக்குறைக்கு ஆட்டக்காரி மாதிரி வளையலும், கொலுசும் வேற' என்றேன்.

அவளுக்கு கேத்தரீனா ஜீட்டா ஜோன்ஸ் போலவே, வில்லைப் போல் வளைந்த மேல் உதடு. அந்த உதடுகளை வில்லில் நாணேற்றுவது போல விரித்து பூத்த புன்னகையைப் பார்த்தவுடன்,
Sssssssstopppp thatt bull sh*t smile. Or i wil stop it with my fuc*ing lllips' என கத்த வேண்டும் போல எழுந்த ஆசையை நாகரீகம் கருதி புதைத்து விட்டேன்.

'காட்டு வாசிகளாவே இருந்திருக்கலாம். எவன்டா கண்டுபுடிச்சது இந்த நாகரீகத்தையெல்லாம்!' என்று நினைக்கும் போது கோபம் வந்தது.

கத்தியிருந்தாலும் அவளுக்கு புரிந்திருக்காது. குட்டி ஒன்னாப்பையே இரண்டு வருடம் படித்த பிரகஸ்பதி அவள். என்று நினைத்ததும் லேசாக சிரிப்பு வந்தது.

அந்த இதழ்களை ஒரு முறை முத்தமிட்டு விட்டு செத்துப் போ என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் சம்மதித்து விடுவேன். ஆனால் அப்படி கேட்க யாருமில்லையே என்று நினைத்த போது துக்கப் பெருமூச்சு வந்தது.

அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..

வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)

பெருமூச்சுடன் துளைக்கப் பட்ட நெஞ்சைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து முழங்காலில் தலையால் முட்டிக் கொண்டேன்.

நொடிக்கு நூறு முக பாவனைகள் மாற்றும் என்னைப் பார்த்து அவள் பயந்திருக்க வேண்டும். 'என்னாச்சு! உடம்பு சரியில்லையா?' என்று கேட்டுக் கொண்டே என் நெற்றியில் கை வைத்ததும்.. ஹைய்யோ.. காதலிக்காதவர்களெல்லாம் f*ckng idiots.. பெரிய பாவம் செய்தவர்கள்.

சிறுவயது முதல் நாங்கள் இருவரும் பல முறை கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு அவள் விரல் நுனி என் மேல் பட்டதும்..

'இல்லை. ஒன்னுமில்லை. எனக்கென்ன.. am good.. ஆமா.. என்னவோ கேட்டியே' என்றேன்.

முகத்தையும் குரலையும் குழைத்துக் கொண்டு 'ஷா பத்தி ஏதாவது சொல்லேன்' என்றாள்.

ஆமா! அது யார் அந்த ஷா. அவளுடைய காதலன்.
(தொடரும்)

தொடர் விதிமுறைகள்:

1) உங்களுக்குள் தூங்கும் கவிதை எழுதும் மிருகத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கவிதையாவது இடம் பெற வேண்டும்.

2) கெட்ட வார்த்தைகள் எதையும் உபயோகிக்கக் கூடாது.(நான் இலக்கியவாதியாகும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால், என்னால் கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க முடியவில்லை.)

3) இதைத் தொடர ஒருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டும். நண்பர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல், என் followers 9 பேரும், நான் follow செய்யும் 99 பேரும், இது வரை எனக்குப் பின்னூட்டியிருக்கும் 999 பேரும், நான் இதுவரை பின்னூட்டியிருக்கும் 9999 பேரும் என்றெல்லாம் டகால்டி வேலை செய்யக் கூடாது.

4) அடுத்த பதிவெழுத மேட்டர் சிக்காத காரணத்தாலோ, நம் அழைப்பிற்கு யாரும் வர மாட்டார்கள் என்ற என்னத்திலோ உங்களுக்கு நீங்களே அழைப்பு விடுத்துக் கொள்ளக் கூடாது.

5) விதிமுறைகளை உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதிமுறைகளை உங்கள் பதிவில் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளக் கூடாது. 'விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள முதல் பாகத்தைப் படிக்கவும்' என்று என் வலைப்பூவிற்கு லிங்க் கொடுத்து, ஓசி விளம்பரம் செய்ய வேண்டும்.

6) இது முக்கோனக் காதல் கதையாக இருந்தாலும், யாருடைய காதலும் தோல்வியில் முடியக் கூடாது. அப்படி யாரையாவது பிரிக்கும் பதிவரை ஆரும் பதிவர் சந்திப்பில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆரும் follow பண்ணக் கூடாது. ஆரும் அவருக்குப் பின்னூட்டக் கூடாது. அவங்களோட பழகுறவங்களுக்கும் அதே கெதி தான். இது இந்த நாட்டாமையோட தீர்ப்புடா.... தீர்ப்புடா.... தீர்ப்புடா....

7) மனைவி காப்பியில் சர்க்கரை குறைவாக போட்ட கோபத்திலோ, தொழில் முறைப் போட்டி காரணமாகவோ அடுத்த பாகத்திலேயே ஒரே குண்டில் அனைவரும் போய் சேர்ந்து விட்டார்கள் என்று கதையை முடித்தால், முந்தைய பாகம் வேறொரு பொருப்பான, சாத்வீகமான, வெஜிட்டேரியன் பதிவரிடம் கொடுக்கப் படும்.

8) மேற்கூறிய ஏழு விதிமுறைகளில் ஆறை மட்டுமே சாய்ஸில் விடலாம்.

இதன் அடுத்த பாகத்தை எழுத நான் அழைப்பு விடுப்பது வல்லாளர், நல்லாளர், கொல்லாளர் பதிவர் சோம்பேறிக்கு. நான்காம் விதி முறையை சாய்ஸில் விட்டு விட்டேன்:-)

பின் குறிப்பு: அடுத்தவர் கையில் கொடுத்தால் தான் இதற்குப் பெயர் சங்கிலிப் பதிவு என்று வாதிடுபவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் 'நான்' பாத்திரத்தின் பெயர் சங்கிலி. இப்போது கங்குலி என்று மாற்றிக் கொண்டார்(பார்ப்பதற்கு சோடா புட்டி போடாத கங்குலி போல் இருப்பார்) என்றாலும், சங்கிலி என்ற பெயர் கேட்சியாக இருப்பதால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

அடியாளின் அடியாளின் அடியாள் - ஒரு நிஜ ஜீரோ டு ஹீரோ

Sunday 12 April, 2009

ஒரு ரௌடி எப்படி உருவாகிறான் என்று நினைக்கிறீர்கள்? சமுதாயத்தில் அப்பாவி மக்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளைக் கண்டுப் பொங்கி எழுவதாலா?

ஆமெனில், நீங்கள் நிறைய தமிழ், தெலுங்கு படங்கள் பார்க்கிறீர்கள். உடம்புக்கு நல்லதல்ல. ஒரு நிஜ ஜீரோ டு ஹீரோ(நம்மூர்ல பல படங்கள்ல ரௌடி தானே ஹீரோ) பத்தி சொல்றேன் கேளுங்க. சே.. படிங்க..

எங்க ஊர்ல ஒரு பையன் (பேரு பாஸ்கர்னு வச்சுக்கோங்க), கடவுள் பக்தி அதிகம். ரொம்ப ஏழைப்பட்ட பய. அவனுக்கு பத்து வயசு இருக்கும் போதே அவங்க அம்மா செத்துப் போய்ட்டாங்க.. ரெண்டே மாசத்துல அவங்க அப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்.. ஒரு வருஷத்துல குழந்தை பொறந்துச்சு. அதனால குடும்ப செலவ சமாளிக்க முடியல.

நம்ம பயவுள்ள படிப்பை நிறுத்திட்டு தினக் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சான். ரொம்ப அப்புரானிப் பயலா இருக்கப் போயி, மொத்த சம்பளத்தையும் அவங்க சின்னத்தா(சித்தி) கையில குடுத்துருவான். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. தொடர்கதை ஆரம்பிக்கும் முந்தி போடுவாங்களே அது மாதிரி இது தான் முன் கதை சுருக்கம்.

எங்க அம்மா வேலை பாக்குற ஸ்கூல்ல தான் அவங்க சின்னத்தா ஆயாவா இருக்காங்க. ஆயான்னா ஜெண்டில் மேன் படத்துல மனோரமா பாக்குமே அதே வேலை தான்.

கம்பெனில இவனுக்கு தொடர்ந்தாப்புல நாலு நாள் லீவு கிடைச்சிருக்கு. நம்ம பயலுக்கு தான் பக்தி ஜாஸ்தியாச்சே! திருப்பதிக்கு போகலாம்னு முடிவு பண்ணி அவங்க சின்னத்தா கிட்ட காசு கேட்டிருக்கான். அவங்களுக்கு வந்துச்சே கோவம்.

'பண்டாரப் பரதேசிப் பயலே! நீ போகலனா சாமி ஊர விட்டு ஓடிப் போயிடுமா? நீ ஒன்னும் கோயிலுக்குப் போய் சாமியக் காப்பாத்த வேணாம்' அப்படினு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

பாத்துக்கிட்டிருந்த எங்கம்மாவுக்கு ரொம்பப் பாவமா போச்சு. அவனக் கூப்புட்டு 600 ரூவா குடுத்து கோயிலுக்கு போயிட்டு வாடானு சொல்லி அனுப்பி வச்சாங்க.

கோயிலுக்குப் போனவன் நேரா எங்க வீட்டுக்கு தான் வந்தான். எங்கம்மா அவன வாசல்லயே நிறுத்தி 'கோயில்ல இருந்து வந்ததும் நேரா உங்க வீட்டுக்கு தான் போவனும். அப்ப தான் புண்ணியம் உங்க குடும்பத்துக்கு வந்து சேரும்' அப்படினு சொன்னாங்க.

உடனே அவன் 'தெரியும். அதனால தான் இங்க வந்தேன்'னு சொன்னதும் உருகிப் போய்ட்டோம். லட்டு இன்ன பிற பிரசாதங்கள் எல்லாம் குடுத்துட்டு அவன் வழக்கமா உக்கார்ற வராண்டா மாடிப்படியில போய் உக்காந்துகிட்டான்.

போன வரியில குடுத்த லட்டுக்காகவா, அதுக்கு முந்தின வரியில சொன்ன டயலாக்குக்காகவானு தெரியல; இதுவரை அவன் கிட்ட பேசாத நான் 'உள்ள வந்து உக்காருங்கன்ணே'ன்னு சொன்னேன். வெக்கத்தோட 'நான் போய்ட்டு வரேன்'னு சொல்லிட்டுப் போய்ட்டான். ரொம்ப கூச்ச சுபாவமாம்.

இவ்ளோ நேரம் சொன்னது, விட்டத்தைப் பாத்துக் கிட்டே 'நடந்தது என்னன்னா'னு சொல்லிட்டு சினிமால ஃப்ளாஷ் பேக் போடுவாங்களே, அது மாதிரி நாலு வருஷத்துக்கு முந்தி நடந்தது.

போன மாசம் அவன தற்செயலா மாட்டுதாவனி பஸ் ஸ்டாண்டுல பாத்தோம். அம்மா தான் அடையாளம் காட்டுனாங்க. என்னால கண்டுபிடிக்கவே முடியல.

'என்னம்மா.. எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்'னு கேட்டேன்.

'பைய பேசு. இப்போ அவன் ____யோட ஆளுகிட்ட அடியாளா இருக்கான்'னு சொன்னாங்க.

'என்னம்மா.. ____யே அந்தக் கட்சிக்கு அடியாள் மாதிரி தான். அப்ப இவன் அடியாளோட அடியாளோட அடியாளா?'னு கேட்டேன். மொறைச்சு பாத்த எங்கம்மா பஸ் ஏறுற வரை வாயைத் தொறக்கக் கூடாதுனு எங்க குலசாமி மேல சத்தியம் வாங்கிக் கிட்டாங்க.

சினிமா ரௌடிக்கும் இவனுக்கும் குறைஞ்சது, ஆறு இல்லை நூறு வித்தியாசம் இருந்தது.

சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல. தொண்டையில இருந்து வயிறு வரைக்கும் சிங்கிள் பேக் தான். முந்தி இவன் சைக்கிள்ல வந்தா என்னடா சைக்கிள் மட்டும் தனியா வருது. ஆளக் கானோமேனு தேடுவோம். அவ்வளவு ஒடிசலா இருந்தான். இப்போ இவனுக்கு மட்டுமே தனியா ஒரு டாட்டா சுமோ தேவைப்படும் போல ஊதிப் போய் இருக்கான்.

சினிமாவுல வர்ற ரௌடி மாதிரி தலையில காரக் கொழம்பெல்லாம் கொட்டிக்கிட்டு வரல. முந்தி எண்ணெய் காணாம செம்பட்டை உறிஞ்சி போயிருந்த தலையைக் கூட நீட்டா வாரி, அம்பானிக்கு அக்கா மவன் மாதிரி இருக்கான்.

நான் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கேன்னு கேட்டான். வேலை இல்லாம வெட்டியா தான் இருக்கேன்னு தெரிஞ்சா, 'எனக்கு அடியாளா சேந்துக்கோனு சொல்லிடுவானோ'னு பயந்து, 'ஏபிசி கம்பெனியில பிபிசியா இருக்கேன்'னு ஏதோ உளறி வச்சேன்.

மாட்டுதாவனி பஸ் ஸ்டாண்டுல அவனைத் தெரியாதவங்க யாருமே கிடையாது போல. டீக் கடை, புரோட்டாக் கடை, பூக்கடைனு ஒரு கடை விடாம எங்களக் கூட்டிட்டுப் போய், எல்லா கடையிலயும் ஃப்ரீ அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக் குடுத்துட்டான்.

அவன் அருமை பெருமை எல்லாம் எடுத்து விடுறதா நினைச்சு ஒப்புதல் வாக்குமூலம் குடுக்க ஆரம்பிச்சான். அவன் எதிர்பாத்த ரியாக்ஷன் நான் குடுக்கலனு நினைச்சானோ என்னவோ, ஒரு பெரும்புள்ளி பேரை சொல்லி அவரைப் போட்டது நாங்க தான் தெரியுமானு சொன்னான். எனக்கு அதிர்ச்சியோ, பயமோ இல்ல. இவ்வளவும் பண்ணிட்டு சுதந்திரமா சுத்திட்டு இருக்காங்களேனு ஆச்சரியம் தான். (அவனை சந்தோஷப்படுத்த விரும்பாததனால, அதையும் காட்டிக்கல.)

கிளம்பும் போது எங்கம்மா கிட்ட அவன் பாக்கெட்ல இருந்த ரெண்டாயிரத்தி சொச்ச ரூபாயை எண்ணிக் கூட பாக்காம எடுத்துக் குடுத்தான். ஒவ்வொரு தடவ பாக்கும் போதும் இப்படித் தானாம்.

நாங்க கிளம்பும் போது என்ன நினைச்சானோ தெரியல. பக்கத்தில இருந்த புரோட்டா கடையில ஆயிரம் ரூபா வாங்கி இதை எங்க சின்னத்தா கிட்ட குடுத்துடுங்கனு சொன்னான்.
























'போயிட்டு வர்றேன் அண்ணே'ன்னு சொல்லிட்டு வானு அம்மா சொன்னாங்க. எனக்கென்னவோ அவனை அண்ணன்னு கூப்பிட மனசு வரல.
























சொல்ல மறந்துட்டேனே. இப்போ ஒரு கோயில் கட்டிக் கிட்டு இருக்கானாம். நான் சொல்லல.. பயவுள்ளைக்கு பக்தி ஜாஸ்தினு.

குங்குமத்தில் நான்

Friday 10 April, 2009

முன் குறிப்பு: குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கட்டையைக் கொடுக்க வில்லை. நிஜமாகவே குங்குமம் வார இதழில் வந்த எனது பதிவு.

முதலில் என் வலைப்பூவின் முழுப்பக்க வண்ண விளம்பரத்திற்கு குங்குமம் நிர்வாகத்துக்கு நன்றி.
(இது நான் இல்லை. சுனைனா. இதற்கடுத்து என்னுடையது.)

(இது வடகரை வேலன் அண்ணாச்சி. சே. அவரது படைப்பு.)
(இது பூக்காதலனுடையது)

(படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். அப்படியும் தெளிவாகத் தெரியாவிட்டால் மன்னிக்கவும். என் காமெரா அப்படி.)

கணினித் துறையில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தாலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை எனக்கு வலைப்பூக்கள் பற்றி எதுவும் தெரியாது.

குங்குமம் போன்ற ஒரு வெகுஜன ஊடகம், சிலருக்கே அறிமுகமான வளரும் ஊடகமான வலைப்பூக்களை விளம்பரப்படுத்துவது ஆரோக்கியமான விஷயம். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

சின்ன வருத்தம்: நான் பல பிள்ளைகளிடம் மணிக்கணக்காக கடலை போட்டு, PHd ரேஞ்சுக்கு ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு டெலி பேங்கரின் அனுபவங்கள் போன்ற பதிவுகளை விட்டு விட்டு, எனக்கு வந்த குறுஞ்செய்தியை ஆல்டர் செய்து எழுதிய பதிவைப் பிரசுரித்திருக்கிறீர்களே..

ச.ம.க.WIN 1977 மற்றும் நான் ஏன் பின்னூட்டுவதில்லை

Thursday 9 April, 2009

முன் குறிப்பு அல்லது எச்சரிக்கை: முட்டிக் கொள்ளும் தூரத்தில், பக்கத்தில் சுவர் எதுவும் இருந்தால், 1977 திரைப்படம் பற்றி எழுதப் பட்டிருக்கும் முதல் பகுதியைப் படிப்பதைத் தவிர்த்து விடுங்கள். மண்டை உடைய வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக டிவிடியில் படம் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்காத காட்சிகளை fast forward செய்து விடுவது வழக்கம். ஆனால் முழுப்படத்தையும் fast forwardடியே பார்த்தது இது தான் இரண்டாவது முறை. (முதல் படம் 'பிரிவோம்.. சந்திப்போம்..'. மோசமான படம் என்பதற்காக அல்ல. திரைக்கதையின் வேகம் அப்படி. X20யில் fast forward செய்தும் படம் வேகமாக நகர வில்லை).

ஆரம்பக் காட்சியிலேயே 1977ன் அழகு தெரிந்து விட்டது. அறிமுகக் காட்சியிலேயே சரத் உடம்பில் மண்ணென்னை ஊற்றிக் கொண்டு, என்னைக் கொளுத்து கொளுத்து என்று சொல்லும் போது அவர் கையிலிருக்கும் தீக்குச்சியைப் பிடுங்கிக் கொளுத்தி விடலாமா என்றாகி விட்டது.

The League of Extraordinary Gentleman(LXG) திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் Dorian என்பவருக்கு பதில், அவருடைய ஓவியத்துக்கு வயதாகும். அவரை எந்த ஆயுதத்தாலும் சாகடிக்க முடியாது. அவர் புகைப் படத்தை எப்போது நேருக்கு நேர் பார்க்கிறாரோ அப்போது தான் அவருக்கு மரணம்.

இந்தப் படத்திலும் 'சரத் நியூஸ் பேப்பரில் எதையோ பார்த்ததும் இறந்து விடுகிறார்' என்று கேள்விப் பட்டதும், LXG போல ஏதோ இருக்கும் என்று நினைத்து, கடைசி வரை பொருமையாக X20யில் பார்த்துக் கொண்டிருந்த நான்..

கதாநாயகி வரும் போது நம்ம்ம்ம்ம்பி ப்ளே பட்டனை அழுத்தினேன். சரத்தும் அவரும் பார்க்கும் போதெல்லாம் போல இடித்துக் கொள்கிறார்கள்(நன்றி: அருணாச்சலம் என்று கூட போட வில்லை). காதல் வந்து விடுகிறதாம். எங்க ஊர் பிள்ளைகளை இடித்தால் செருப்பு தான் வருகிறது.

நமீதா இன்னும் ஒரு வருடத்திற்குக் குளிக்கவே தேவையில்லை. அந்தக் குளி குளித்திருக்கிறார் படத்தில். அவர் கைகள் ஒவ்வொன்றும் ரம்பா தொடை போல இருக்கின்றன(நன்றி: விவேக்). உடைகளை மட்டும் குறைத்தால் போதாது ஆத்தா; கொஞ்சம் உடம்பையும் குறைங்க..

அப்பா சரத் செய்தித் தாளில் அப்படி எதைப் பார்த்து பயந்து செத்துப் போனார்னு சொல்ல மறந்துட்டேனே.. அவர் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து.

இயக்குனர் எக்ஸ்.தாமிரா வலைப்பூவின் வாசகராய் இருப்பாரோ?

நான் ஏன் பின்னூட்டுவதில்லை

திரட்டிகளில் சரியாக இணைத்துக் கொள்ளாததாலோ, word verification enable செய்திருந்ததாலோ தெரியவில்லை, என் பத்தாவது பதிவு வரை 'தமிழில் டைப் செய்வது எப்படி?' என்று கேட்டு கூட எனக்கு பின்னூட்டம் வந்ததில்லை. ஏன், நானே கூட எனக்குப் பின்னூட்டிக் கொண்டதில்லை.

offlineனில் கூட நமக்குப் படிக்க பொருமையில்லாத சில பதிவுகளில் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து வரும் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பலருக்கும் followerராக (சமயங்களில் அடிப்பொடியாக) இருப்பதாலோ, பல பதிவுகளிலும் கன்னா பின்னாவென்று பின்னூட்டுவதாலோ தான் இவர்களுக்கெல்லாம் பின்னூட்டங்கள் வருகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்ததால், என் கோபம், வருத்தம், மகிழ்ச்சி என்று எதையும் யார் வலைப்பூவிலும் பதிவதில்லை. followவும் செய்வதில்லை.

ஆரம்ப காலத்தில் நான்கு முறை பின்னூட்டியிருக்கிறேன்.(யாருக்குமே பின்னூட்டாத இட்லி வடை பதிவில், தன் லிங்கை என் பதிவில் பின்னூட்டி பார்க்க சொன்ன ஒரு நண்பரின் பதிவில், ஒரு பதிவரின் பழைய பதிவில், அணிமாவிற்கு word verification பற்றிய அறிவுறைக்கு நன்றி சொல்ல ஒன்று)

இப்போது என் வலைப்பூவின் தரம் ஓரளவு தெரிந்து விட்டதால், இனி பல கடைகளில் புகுந்து விளையாடலாம் என முடிவு செய்து விட்டேன். முதல் ஐந்து பின்னூட்டங்களை 1977 படத்துக்கு விமர்சனம் எழுதிய அஞ்சா நெஞ்சர்களுக்கு இட்டு கௌரவிக்கலாம் என நினைக்கிறேன். வடிவேலு பாணியில் 'சாவடிக்கறவனா வீரன். சாவடி அடிச்ச பிறகும் உசுரோட இருக்கறவன் தான் வீரன்'.

இது வரை எழுதிய 28 பதிவுகளிலும் பின்னூட்டிய அன்பு நண்பர்கள் அணைவருக்கும் என் நன்றி. நீங்கள் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையையும் உண்மையாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பட்ட முறையில் நன்றி சொல்லும் விதமாக, அடுத்தப் பதிவிடும் வரை, உங்கள் பெயரை சைட் பாரில் டிஸ்ப்ளே செய்திருக்கிறேன்.

(இதை 25வது பதிவாக ஏற்றம் செய்ய நினைத்திருந்தேன். நாசமாய் போன ஞாபக மறதி காரணமாக கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி சக்கரை சுரேஷ்)

இதுவரை இங்கு வருகை தந்த, பின்னூட்டிய, வாக்களித்த, என்னை follow செய்யும் மற்றும் செய்த(followersஸாக இருந்து இப்போது எஸ் ஆன) அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

திரட்டிகளில் இணைக்காத என் எல்லா பழைய பதிவுகளையும் படித்து விட்டு பாராட்டிய பெயரில்லா நண்பர்

படித்ததுடன் தன் எதிர் கருத்தைப் பதிந்த ___(யார் பேரையாவது விட்டுடுவேனோனு பயம் தான்)

அனானியாக வந்து தொடர் ஆதரவு தரும் விஜய்

ரஜினியைக் கலாய்த்ததற்காக 'கா' விட்டு வெளிநடப்பு செய்த ____

தனது ஆரோக்யமான கருத்தைப் பல விவாதத்திற்குறிய பழைய பதிவுகளிலும் பதிந்த ______

எனக்கு முதலில் பின்னூட்டிய மற்றும் word verificationனைத் தூக்கி விடும் படி அறிவுரைத்த அணிமா

என்னை நம்பியோ, எனக்கு ஊக்கமளிக்க நினைத்தோ என்னை முதலில் follow செய்தவர்கள் _____

இவர்கள் எழுவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி(உங்கள் பின்னூட்டங்களைத் சமீபத்தில் தான் பார்த்தேன். பதிலளித்திருக்கிறேன்).

யாருக்கு உறுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினேனோ அவர்களில் ஒருவரையாவது சென்றடைந்து விட்டது என்ற திருப்தியைக் கொடுத்த எதிர் வாக்காளர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் நன்றி.

இதுவரை 48, 49, 50 என்று குட்டி ஒன்னாப்பு குழந்தைகள் போல் கணிதம் கற்றுக் கொள்ளவோ, 'எறும்புக்கு ஏப்பம் வருமா? கொசுவுக்குக் கொட்டாவி வருமா?' என்ற மாபெரும் சம்மந்தமில்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கோ யாரும் எனக்குப் பின்னூட்டியதில்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இனியும் அது போன்ற பின்னூட்டங்களை மட்டுறுத்த நேர்ந்தால் நண்பர்கள் தயவுசெய்து கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒரு பதிவருக்கு மகிழ்ச்சி அளிப்பது கருத்துரைகளின் எண்ணிக்கை அல்ல. கருத்துரையிட்டவர்களின் எண்ணிக்கையும், (சில சீரியசான பதிவுகளில்) கருத்துகளின் ஆழமும் தான்.

மேலும் பண்படுத்தும் அறிவுரைகளும், பண்பாக இடித்துரைக்கும் எதிர்கருத்துகளும் ஒரு பதிவருக்கு கூடுதலாக மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது என் கருத்து.

மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.

மு.க.அழகிரிக்கு சில டிப்ஸ்(அரசியலில் அல்ல)

Tuesday 7 April, 2009

முன்குறிப்பு: அழகிரி மக்கள் ஆதரவை நம்பி தேர்தலில் நிற்கவில்லை என்பதும், அரசியலில் அவர் ஒரு புதிய trend setter என்பதும் ஊருலகத்துக்கே தெரியுமென்பதால், தேர்தலில் வெல்ல அவருக்கு டிப்ஸ் தரப் போவதில்லை(இதனால் தான் எந்த மதுரைக்காரப் பதிவரும் அவரைப் பற்றி எழுதுவதில்லையோ?!)

மதுரைக்காரவய்ங்க யாராச்சும் இருக்கீகளா.. சென்ற மாதம் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து அண்ணா நகர் செல்லும் வழியில், ஒரு மெகா சைஸ் பேனரைப் பார்த்தேன். அதில் 'மு.க.அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு 58 விளையாட்டுகள் ஒரே அரங்கத்தில்(ஒரே நேரத்தில் என்று ஞாபகம்) நிகழ்த்தி கின்னஸ் முயற்சி' என்று போட்டிருந்தது.

அப்படி ஏதாவது நிகழ்ந்ததா? கின்னஸில் இடம் கிடைத்ததா? இனிமேல் தான் நடக்கப் போகிறதா? பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு முன்பாகவே அலப்பரையாகக் கொண்டாட ஆரம்பித்தவர், இன்னும் கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வில்லையா?

இல்லையென்றால் 2010 ஜனவரியில் வரும் பிறந்த நாளுக்கு இப்போதே அலப்பரை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா? அல்லது மாதம் ஒரு பிறந்த நாள் கொண்டாடுகிறாரா?

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் உடைய பல 2009 பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் அழிக்க, கிழிக்கப் பட வில்லை. அடுத்தப் பிறந்த நாளுக்கு அவர் தொண்டர்களே, அதன் மேல் வேறு போஸ்டர்கள் ஒட்டினால் தான் உண்டு போல.
(மூன்று மாதங்களுக்கு முன் "இன்று தென் தமிழகத் தலைவனே.. நாளை பாராளுமன்றத் தலைவரே" என்ற வாசகமடங்கிய இந்த பிறந்த நாள் வாழ்த்து பேனரை காமெடி என்று நினைத்தேன்.)

தவிர ஊரில் யாருக்காவது கல்யாணம், காது குத்து என்றால் கூட மணமக்களை விடப் பெரிய சைஸில் இவர் படம் தான் இருக்கிறது என்பதால் சமீப காலமாக பேனர்களைப் படிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்து விட்டது.

இந்த கின்னஸ் பேனர் ரொம்பவே பெரியதாய் இருந்ததால் கவனத்தை ஈர்த்தது. 'அவர் பாடு தொண்டர்கள் பாடு.. என்னவோ செய்து விட்டுப் போகட்டும்' என்றெல்லாம் சும்மா இருந்து விட முடியாது. மதுரைக்கு தென் தமிழகத்தின் தலைநகரம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுத்திருப்பவருக்கு, நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா.

ஒரே நேரத்தில் பல விதமான போட்டிகளை ஒரே மைதானத்தில் கொண்டாடினால் சங்ங்ங்ங்ங்கடமா இருக்காது? அதனால் தான் விளையாட்டுகளைத் தொடங்கும் முன் அவருக்கு சில டிப்ஸ்:

1) இட நெருக்கடி காரணமாக ஜாவ்லின் எறிபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பார்வையிட வந்திருக்கும் சீப்(cheap என்று படிக்காமல் chief என்று படிக்கவும்) கெஸ்ட் மீது எறிந்து விட்டால் கின்னஸில் இடம் பிடிக்க முடியாது. மருத்துவமனையில் தான் இடம் கிடைக்கும். எனவே, சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளவும்.

2) ஆண்கள் பிரிவில் கபடி விளையாடுபவர்களையும், பெண்கள் பிரிவில் கபடி விளையாடுபவர்களையும் அருகருகே விளையாட விட்டு, அவர்கள் குழப்பத்தில் எசகு பிசகாக அணி மாறி நுழைந்து, அவர்களுக்குள் பற்றிக் கொண்டு விட்டால்(நம்ம பயபுள்ளைகளுக்கு தான் இடிச்சாலே காதல் வந்துடுமே!) அடுத்த சுற்று விளையாட ஆளில்லாமல் போகுமென்பதால், ஆண்கள் பெண்கள் என்று படத்துடன் board மாட்டி, மைதானத்தை இரண்டாகப் பிரித்து விடவும்.

3) கால் பந்து, கூடைப் பந்து, வாலி பால் விளையாடுபவர்களிடமிருந்து, ஷாட்புட் விளையாடுபவர்களை எவ்வளவு தூரம் தள்ளி விளையாட வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைக்கவும். காற்றடைத்த பந்து என்று நினைத்து ஷாட்புட்டை எட்டி உதைத்து விட்டால்(கோர்ட் கேஸ் பற்றியெல்லாம் கவலை இல்லை என்றாலும்) விழா நாயகர் நஷ்ட ஈடு தர நேரலாம்.

4) அதே போல், கிரிக்கெட், டென்னில், ஷட்டில் காக் விளையாடுபவர்களிடமிருந்து நீளம் தாண்டுபவர்களை தள்ளி வைத்து விடுங்கள். பந்து என்று நினைத்து லாங் ஜம்பில் பறந்து வருபவர்களை நொங்கி விட வாய்ப்பிருக்கிறது.
5) ஓட்டப் போட்டியில் கலந்து கொள்பவர்களை ட்ரெட் மில்லில் நின்ற இடத்திலேயே ஓட வைக்கவும். இட நெருக்கடியைக் குறைக்க இது உதவும் என்பதால் மட்டும் அல்ல. 58 போட்டிகள் நடத்தியதற்கு கின்னஸில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ, ஓட்டப் போட்டியின் புதிய பரிமானத்தை வெளிக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் கிடைக்கும்.

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணமான இந்த எழவெடுத்த கால் பந்து, ஷாட்புட், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளைத் தவிர்த்து விட்டு, கோலி, செதுக்கு சப்பை, பம்பரம்(இதன் மூலம் விஜயகாந்த் உங்கள் கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது), மங்காத்தா(இதன் மூலம் நான் உங்கள் கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது) போன்ற 58 விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்தல் நலம்.

உங்கள் தந்தை தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கும், சித்திரை மாதத்திற்கும் மாற்றி விளையாடுவது போலவே, ஹாக்கிக்கு பதில் மங்காத்தாவை தேசிய விளையாட்டாக மாற்ற சொல்லி மன்மோஹன் சிங்கிற்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார். தேர்தல் சமயத்தில், இது பல விளையாட்டு வீரர்களைப் புண்படுத்தி விட்டது என்று திடீர் ஞானோதயம் வந்து ஹாக்கியையே திரும்ப தேசிய விளையாட்டாக்கி விடுவார் என்பது வேறு விஷயம்.

கின்னஸில் இடம் கிடைத்து விட்டால், மங்காத்தாவை அடுத்த முறை ஒலிம்பிக்கில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. அப்போது ஐடியா கொடுத்த எனக்கும் ஒரு தங்கப்ப தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழ் மணத்தில் வாக்களிக்க..
தமிழ் மணத்தில் எதிர் வாக்களிக்க..

சிரிப்பாய் சிரித்த கலைஞரின் சிரிப்பதிகாரம்

Monday 6 April, 2009

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்றால் என்ன என்று, நேற்று இரவு 7:30க்கு சிரிப்பொலியில் சிரிப்பதிகாரம் நிகழ்ச்சி பார்த்த பிறகு தான் புரிந்தது. ஒரு நிமிடம் ஜெயா டிவி பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

வசனங்களில் அவ்வளவு உள்குத்து. உதாரணத்துக்கு 'குடும்பம்னாலே பிரச்சனை தான்'
மிகவும் நல்ல நிகழ்ச்சி. நல்ல நகைச்சுவையாக போய்க் கொண்டிருந்தது. ஜெகன் மோகினி, சகலகலாவல்லவன், திருவிளையாடல் திரைப்படங்களின் சில காட்சிகளை ரீ மிக்ஸ் செய்திருந்தார்கள்.

திருவிளையாடல் படத்தில் பானபத்திரருக்கு உதவுவதற்காக, சிவன் விறகு விற்பவராக வருவாரே அந்தக் காட்சி ரீமிக்ஸ் செய்யப் பட்டிருந்தது.

சிவாஜி தலையில் விறகுக் கட்டை சுமந்த படி விற்று வருகிறார். தலைப்புக்குதவாத காரணத்தால் மற்றதை எல்லாம் விட்டு விட்டு, நேரடியாக குத்து வசனத்துக்குப் போகலாம்.

'எனக்கு ரெண்டு பசங்க தாயி. ஆனைக்குட்டி மாதிரி ஒருத்தன் அழகா ஒருத்தன்.

'ஏம்பா ரெண்டு பசங்க இருந்துமா இந்த வேகாத வெயில்ல விறகு வித்துகிட்டு இருக்க'

'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. துன்பந்தாளாம விஷம் கூட குடிச்சுப் பாத்துட்டேன். அது கூட உள்ள போகாம தொண்டையிலேயே நிக்குது.'

இப்போது அதே காட்சியில் டப்பிங் கலைஞர்கள் பேசியது.

திருட்டு டிவிடி விற்பவராக வருகிறார் சிவாஜி(மு.க.அழகிரியின் டிவிடி பிசினஸ் மதுரை அறிந்தது. குறைந்தபட்சம் பெரியார் நிலையம் அறிந்தது).

'எனக்கு ரெண்டு பசங்க தாயி. ஒருத்தன் போலீஸா இருக்கான். ஒருத்தன் வக்கீலா இருக்கான்.'

'ஏம்பா ரெண்டு பசங்க இருந்துமா இந்த வேகாத வெயில்ல டிவிடி வித்துகிட்டு இருக்க'

'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. ஒன்னோட ஒன்னு அடிச்சிக்குதுங்க.. உண்ணாவிரதம் இருப்பேன்னு கூட சொல்லிப் பாத்துட்டேன். ம்ம்ம்.. குடும்பம்னாலே பிரச்சனை தான்.'

இது முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறதா? எதிராக இருக்கிறதா?

அந்த நேரத்தில் முதல்வர் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருப்பார் என்ற தைரியத்தில், அவருக்கு எதிராக ஒளிபரப்பப் பட்டதா?

அல்லது, அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஆதரவாக ஒளிபரப்பப் பட்டதா?

எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு எப்படி தெரிகிறது?

சோம்பேறியின்ட சமையல் கட்டு. இன்று பரிசோதனையில்: வென்னீர்

Saturday 4 April, 2009

சோம்பேறியின்ட சமையல் கட்டு

நான் சமைத்தவை, ரசித்தவை, இது வரை யாரும் ருசிக்காதவை

வெயில் காலம் என்றாலே எங்க வீட்டில் சிலருக்கு கவலை! பின்னே இன்று வென்னீர் கிடைக்காதே. அதனாலேயே வெயில் காலங்களில் திருட்டுத்தனமாக வென்னீர் சமைப்பதுண்டு(!?). இன்று காலையிலேயே வென்னீர் வைப்பது என நினைத்ததை செயல்படுத்தியது கீழே:

வென்னீர்:

தேவையானவை:

1) அடுப்பு(கேஸ் அடுப்பாக இருந்தால் எரி வாயு கண்டிப்பாக இருக்க வேண்டும்)
2) தீப்பெட்டி(உள்ளே கண்டிப்பாக தீக்குச்சி(கள்) இருக்க வேண்டும்)
3) 500 மிலி பிடிக்கும் பாத்திரம்(ஓட்டை எதுவும் இருந்தால் முதற்கண் அடைத்து விடவும். ப்ளாஸ்டிக் பாத்திரத்தைத் தவிர்க்கவும்)
4) குளிர்ந்த நீர்

அப்படியே நில்லுங்க, பால்காரரிமாவது, ரேஷன் கடையிலாவது ஒரு 500 மில்லி லிட்டர் அளவையை ஆட்டை போடுவோம்..

ஹைய்யோ.. கையையும், காலையும் கீழே போடுங்க. ஒரு பேச்சுக்கு அப்படியே நில்லுங்கனு சொன்னா, இப்படியா அய்யனார் கோவில் சிலை மாதிரி போஸ் கொடுத்து கிட்டு நிக்கறது?

இப்போது தேவையான பொருட்கள் ரெடி. நீங்களும் ரெடி.

செய்முறை:

1) முதலில் நீர் குளிர்ச்சியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கவும். சூடாக இருந்தால் குளிர் சாதனப் பெட்டியில் ஒரு அரை மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.

2) அரை மணிக்குப் பிறகு, நன்றாக குளிர்ந்து விட்டதா என்று சோதனை செய்ய, உங்கள் வீட்டு நாய் மீது 100 மிலி நீரை ஊற்றவும். அது அலறிக் கொண்டு எழுந்து, உங்களைக் கடிக்க வந்தால் நீர் குளிர்ந்து விட்டது எனப் பொருள் கொள்க.
(நான் முயற்சித்த வென்னீர் சரியாக வரவில்லை. அதனால் இந்தப் படத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.)

3) இப்போது 500 மிலி அளவையில், 500 மிலி நீரை அளந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

4) மறக்காமல் அடுப்பை பற்ற வைக்கவும்.

5) நீரில் முட்டை முட்டையாக வந்த பிறகு(சுமாராக பதினைந்து நிமிடம் கழித்து), இறக்கி விடவும்.

இனி,

நீர் சூடாகி விட்டதா என சோதிக்க, 50 மிலி நீரை எடுத்துக் கொண்டு போய் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணவர் முகத்தில் ஊற்றவும்(நாய் பாவமல்லவா.. மேலும் நாய் போல் இவர் கடிக்கவெல்லாம் வர மாட்டார். முகத்தைத் துடைத்துக் கொண்டு பேசாமல் தூக்கத்தைத் தொடர்வார்)

தொட்டுக்க:
பிரியானி வகைகள்
தக்காளி சோஸ்(இதற்கு அர்த்தம் தெரியாததால், தூயா பதிவில் உள்ளது போல அப்படியே)

அம்புட்டு தான்!
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket