ஏன் விளை நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்கக் கூடாது?

Sunday, 25 January, 2009வரவு:

ஒரு கூடை தக்காளி(15 கிலோ) = ரூ. 15
17 கூடை தக்காளி = ரூ. 255

செலவு:

தக்காளி பறிக்க கூலி = ரூ. 160
கமிஷன் = ரூ. 26
கூடை இறக்குபவர் கூலி = ரூ. 17
சந்தை வரை டெம்போ வாடகை = ரூ. 119

கை இருப்பு = ரூ. -67(255-322)

கூலி வேலைக்கு வந்த பத்மா, செல்வி மணிக்கு ஒரு முறை குடித்த டீ, வெயிலை ஈடுகட்ட உபயொகப்படுத்திய எனது ஃபேர் அண்ட் லவ்லி பற்றி எல்லாம் புலம்ப விரும்பவில்லை. ஆனால் விருந்தாளியாக போயிருந்த என் உழைப்பு?

255 கிலோ தக்காளிகளில், தக்காளிக் காய்களைத் தனியாக எடுத்து வைக்க வேண்டும்(நாளைக்கே விலை ஏறி விடாதா என்ற நப்பாசை தான்). அழுகிய, சொத்தைப் பழங்களைத் தனியாக எடுத்து வைக்க வேண்டும்(இதையும் விலை கொடுத்து வாங்கும் அடிமட்ட மக்கள் இருக்கிறார்கள். குண்டுத் தக்காளிகளைக் கூடையின் மெற்பகுதியிலும், அடிப்பகுதியிலும் அடுக்க வேண்டும்.(ஏனென்றால், சந்தையில் கீழே கொட்டும் போது அடியில் இருக்கும் காய்களே முதலில் தெரியும்).

இது ஒரு நாள் பாடு தான். இந்த மாதிரி ஒரு நாட்களுக்காக எத்தனை மாதங்கள் கண் விழித்து தண்ணீர் திருப்பி, களை பறித்து, தொலைக் காட்சித் தொடர்களை தியாகம் செய்து, வெயிலில் வதங்கி கஷ்டப் பட்டிருப்பார்கள். இந்த லட்சணத்தில் கரண்ட் வேறு.. வரும்... ஆனா வராது...

சரி.. லாபம் வரும் போது அனுபவிக்கிறோம். நம்ம பயபுள்ளைகள் தானே சாப்பிட்டுட்டு போறாங்க என்றும் விட முடியாது. ஏனென்றால், மதுரையில், எங்கள் கிராமத்தில் இன்னும் ஒரு கிலோ தக்காளி விலை 12 ரூபாய் தான்.

இப்போ சொல்லுங்க.. ஏன் விளை நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்கக் கூடாது?

பன்ச் டயலாக் பேசி விட்டு மேலே எழுதக் கூடாது தான். ஆனாலும், இதை சொல்லியே ஆக வேண்டும்.

கிண்டி கத்திப் பாராவில் ஒரு பேருந்தில் செவ்வணக்கம் வைத்து விட்டு, ஏதோ மாநாட்டுக்காக உண்டியல் குலுக்கிய படி ஒரு தோழர் சொன்ன தகவல், விவசாயிகளிடம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப் படும் வெங்காயம், வெளி நாடுகளுக்கு இரண்டே கால் ரூபாய்க்கு அனுப்பப் படுகிறதாம். ஆனால் அதே வெங்காயம் உள்ளூர் மார்கெட்டில் 28 ரூபாய்க்கு விற்கப் படுகிறதாம்.

நான் பிதா மகன் லைலா போல "எக்ஸ்க்யூஸ் மீ.. ஒன் ருபீ" என்று ரொம்ப நேரமாக நீட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் பேச்சை முடித்து விட்டு கலெக்ஷனை ஆரம்பிக்குமுன், பேருந்து கிளம்பி விட்டது..

தமிழினத் திருவிழா நல்கிய அஞ்சா நெஞ்சர் அழகிரி

Saturday, 24 January, 2009

நேற்று மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாட்டு தாவனி பேருந்து நிலையம் வந்து சேர்வதற்குள் ஒன்றரை மணி நேரமாகி விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பேனரில் மு.க.அழகிரி அவர் பருமனில் ஒரு மாலை அணிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்(ஒரு பேனரில் குடும்பத்துடன்). நான் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்ததால், ஒவ்வொரு பேனரிலும் கொட்டை எழுத்திலிருந்த, என்னால் படிக்க முடிந்த, நினைவிலிருக்கும் ஒரு சில வாசகங்கள் மட்டும்..

தென் தமிழகமே!!(பெரும்பாலும் எல்லா பேனரிலும் இந்த வாசகம் இருந்தது)

திருமங்கலத்தை வெற்றி கொண்ட ஆற்றல் அரசரே!!

ஜனவரி தந்த முகவரியே!!(இதன் அர்த்தம் எனக்கும் புரியவில்லை.)

பாராளுமன்றதை மாற்றி அமைக்கும் சக்தியே!!(அப்போ நாம?)


"இன்று தென் தமிழகத் தலைவனே.. நாளை பாராளுமன்றத் தலைவரே"(புகைப் படதிலுள்ள வரிகளைப் படிக்க முடியாதவர்களுக்கு)

திருமங்கலத்தில் இருந்த இந்த பேனரில் நீங்க நல்லா இருக்கோனும் என்ற M.G.R. பாடல் remix செய்யப் பட்டிருந்தது.

என்ன விசேஷம் என்று இன்னும் புரிய வில்லையா?

ஜனவரி 30 அன்று தமிழினத் திருவிழா என்று பேனரில் போட்டிருந்தது.. (மு.க.அழகிரியின் பிறந்த நாளுங்கோ!!).தமிழ் புத்தாண்டை சித்திரை ஒன்றிலிருந்து தை ஒன்றுக்கு மாற்றியது வரை தான் எனக்குத் தெரியும். ஏற்கனவே சித்திரை 1, தை 1 என்ற இரண்டு விடுமுறை தினங்களை தை ஒன்றாக மட்டும் குறைத்ததில் எனக்கு ரொம்பவே வருத்தம். இதில் இது வேறா?

நான் புகைப் படம் எடுப்பதை வாயெல்லாம் பல்லாக பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் "இந்த கண்ணாடி போட்ட குண்டு அங்கிள் யாரு?" என்று கேட்டு கடியைக் கிளப்ப எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டேன்.(தனியாகப் போயிருந்த காரனத்தால்)

திருமங்கலத்தை 50 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும் போது எதிர்பட்ட இன்னொரு பேனரில் ஜெயலலிதாவின் புகைப் படமும் அம்மா, தாயே என்ற வாசகங்களும் கண்ணில் பட்டன. ஏதாவது பிச்சைக் காரர்கள் சங்கமாக இருக்குமோ?

திரை விமர்சனம்

Tuesday, 20 January, 2009

லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட்டான கம்பவுண்டர் மன்னிக்கவும் டாக்டர். விஜய் அவர்களின் வில்லு, புரட்சி பூகம்பம் ஜே.கே.ரித்தீஷின் இன்னும் ரிலீஸ் ஆகாத வேட்டைப் புலி போன்ற திரை விமர்சனங்களை தலைவர் மீதுள்ள வெறியால் தேடி வந்த அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு அதெல்லாம் எழுதத் தெரியாது என்பதைத் தெரியப் படுத்தவே இந்த பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பு.

ஒரு பதிவராக பிரபலம் ஆவதற்கு குறைந்தபட்சம் சினிமா அறிவாவது வேண்டும். நானோ படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், காதல் காட்சிகளில் வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தும், செண்டிமெண்ட் காட்சிகளில் பக்கத்தில் இருப்பவர் மேல் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டே பார்த்தும் பழகி விட்டேன்.

அல்லது அரசியல் அறிவாவது வேண்டும். அடுத்த முதல்வர் யார் என்று தீர்க்க தரிசனம் சொல்ல தெரியாவிட்டாலும் இப்போது யார் என்றாவது தெரிந்திருக்க வேண்டும். ஆற்காடு வீராசாமி என்ற பெயர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (அது கூட கைபேசி குறுஞ்செய்திகளின் மூலம்) எனக்குத் தெரிய வந்தது..

உகாண்டாவில் என்ன நடக்கிறது என்று தெரியா விட்டாலும், உள்ளூரில் குறைந்த பட்சம் நம் தெருவில் என்ன நடக்கிறது என்றாவது தெரிந்திருக்க வேண்டும். எனக்கு எங்கள் பின் வீட்டு பையன் பெயர் கூட தெரியாது.
எனது முழு நேர வேலை இணையத்தில் பாடல்களைத் தரவிரக்கம் செய்வது தான். அந்த நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று என் டைரி குறிப்பு போல இந்த ப்ளாகை எழுதத் துவங்கியிருக்கிறேன். குறிப்பேடு எழுதுவதிலும், படிப்பதிலும் உள்ள மஜாவான விஷயம் என்னவென்றால், கருத்துகளின் நிலையற்ற தன்மை தான். நான் இது வரையில் நான் மாற்றிக் கொள்ளாத ஒரே கருத்து 'கருத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்' என்பது மட்டும் தான்.

அடிக்கடி என்றால் வாரம் ஒரு முறை அல்ல. உதாரணமாக, சில வருடங்களுக்கு முன் என் அத்தை தேர்தல் பூத் அதிகாரியாக இருந்த பொழுது எனக்கு கள்ள ஓட்டு குத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதிமுகவினர் உலகை சுற்றி வந்து பழம் கேட்ட முருகர் போல், மை அடையாளத்தை பரிசோதித்து 50, 100 என்று பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது, திமுகவினர் விநாயகரைப் போல் நேரடியாக பூத் அதிகாரியை சரி செய்து மொத்தமாக அள்ளி விட்டனர். 10 ஓட்டுகள் திமுக வுக்கு குத்திய நான் மனம் மாறி அதிமுகவுக்கு குத்த ஆரம்பித்து விட்டேன். பின்பு மருபடியும் திமுக.

நானே கேள்வி நானே பதில் போல, நானே எழுதி நானே படித்துக் கொள்வதற்காக, என் ரசனையை மட்டுமே முன்னிருத்தி உருவாக்கப் பட்டது தான் இந்த வலைப் பூ. மற்றபடி உங்கள் ரசனை எனதை ஒத்திருந்தால் சந்தோஷமே!

எழுத வருதோ இல்லயோ Freeயா குடுத்தா தான் நம்ம பினாயிலையும் குடிப்போமே!!
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket